பாவங்களை அகற்றி மோட்சம் தரும் காவிரி நீராடல்! கடை முழுக்கு, முடவன் முழுக்கு மகிமைகள்!

காவிரிக் கரையில் காசிக்கு நிகரானதாக கருதப்படும் சிவாலயங்களில் மயிலாடுதுறையும் ஒன்றாகும்.


தொன்மையான இந்த சிவத்தலத்தை மயிலாடுதுறை, மாயவரம், மயூரம் என்று அழைப்பார்கள். இத்தலத்தில் உள்ள இறைவன் மயூரநாதர், இறைவி அபயாம்பிகை ஆவார். மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலின், காவிரி தலத்தில் மக்கள் நீராடுவது சிறப்புடையதாகும். அதில், ஐப்பசி மாத கடைசியில் நடைபெறுவது 'கடை முழுக்கு", கார்த்திகை மாதத்தின் முதலில் நடைபெறுவது 'முடவன் முழுக்கு" என்பர்.

ரிஷப தீர்த்தம் : ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறையில் உள்ள காவிரியில் நீராடுவது மிகவும் விசேஷமான ஒன்றாகும். காவிரியில் இருக்கும் தீர்த்தத்தைதான் ரிஷப தீர்த்தம் என்று கூறுவார்கள்.

கடை முழுக்கு : ஐப்பசி மாதத்தில்தான் காவிரி நதியில் கங்காதேவி வாசம் செய்கிறாள். மேலும் தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி, லட்சுமி, கௌரி, சப்தமாதர்கள் ஆகியோர் மயூரத்திலுள்ள காவிரிக்கரையில் நீராட வருகின்றனர். இதனால்தான் மயிலாடுதுறையில் உள்ள காவிரி நதியில் துலா மாதத்தில் (ஐப்பசி மாதம்) நீராடுவது மிகவும் சிறப்புடையதாகும்.

ஐப்பசி மாத கடைசி நாளில், இங்கே நீராடுவதற்கு 'கடை முழுக்கு" என்று பெயர். இந்த நாளில்தான், மயிலாடுதுறையில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் குடிகொண்டிருக்கும் மூர்த்திகளும் காவிரியில் எழுந்தருளி, தீர்த்தவாரியை கண்டருளுவர். அதனால் துலா மாதத்தில் ஸ்நானம் செய்தால் பாவங்கள் மற்றும் துன்பங்கள் நீங்கி புண்ணிய பலன்கள் நமக்கு கிடைக்கும்.

இங்கு ஐப்பசி மாதத்தின் முதல் நாள் தொடங்கி, கார்த்திகை மாதம் முதல் நாள் வரை நீராடுவது மிகவும் விசேஷம் ஆகும். அதிலும் மிகவும் சிறப்பான ஒன்று ஐப்பசி மாதத்தில் கடைசி நாளான கடைமுழுக்கு அன்று நீராடுவதுதான். இம்மாதத்தில் முதல் 29 நாட்களில் நீராட முடியாவிட்டாலும், கடைசி நாளான 30ம் நாள் காவிரியில் நீராடி மயூரநாதரையும், அன்னை அபயாம்பிகையையும் வழிபட்டால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம்.

காவேரன் என்ற அரசன், தனக்குப் புத்திர பாக்கியம் இல்லாததால் பிரம்மாவைக் குறித்துத் தவம் செய்தான். பிரம்மாவானவர், "உனக்குப் புத்திர பாக்கியம் இல்லாவிட்டாலும், ஒரு குழந்தையை அளிக்கிறேன்" என்று கூறி, தன மனத்தால் ஒரு பெண் குழந்தையை உண்டாக்கி அவனிடம் அளித்தார். காவேரி என்ற பெயரில் அவனிடம் வளர்ந்த அப்பெண், தகுந்த கணவனை வேண்டித் தவம் செய்யலானாள். பின்னர்,அகஸ்த்திய முனிவரைக் கண்ட காவேரியானவள், இவரே தனது மணாளர் ஆவார் என்று நினைத்து, லோபாமுத்ரா என்ற பெயருடன் அவரை திருமணம் செய்துகொண்டவுடன், அவள் விரும்பியபடியே, நதி ரூபமாகி, பிற நதிகளுக்கும் மனிதர்களுக்கும் ஏற்பட்ட பாவங்களை நீக்கவும், மோக்ஷத்தை அளிக்கவும் மறு அம்சமாகத் திகழுமாறு, அகஸ்த்ய ரிஷி அருளினார்.

மூன்றரைக்கோடி தீர்த்தங்கள் துலா மாதத்தில் காவிரியில் வந்து சேருவதால், இதில் ஸ்நானம் செய்வதன் மூலம், அழகு, ஆயுள், ஆரோக்கியம், செல்வம், கல்வி, வலிமை, மாங்கல்ய பாக்கியம். புத்திர பாக்கியம் முதலியவை சித்திக்கும். இதைக் காட்டிலும் புண்ணியச் செயல் எவ்வுலகிலும் இல்லை. எனவே, ஜன்மத்தில் ஒரு முறையாவது, துலா ஸ்நானம் செய்ய வேண்டும். பிறகு இருவரும் துலா ஸ்நானம் செய்து, ஸ்ரீ அபயாம்பிகையையும் ஸ்ரீ கௌரி மாயூர நாதரையும்,தரிசித்து, மோக்ஷம் பெற்றனர்.

முடவன் முழுக்கு: கார்த்திகை மாதத்தின் முதல் நாள் இங்குள்ள காவிரி நதிக்கரையில் நீராடுவதற்கு 'முடவன் முழுக்கு" என்று அழைக்கிறார்கள். இதற்கு காரணம் மயூரநாதர் காவிரி நதியில் நடைபெறும் மிகவும் விசேஷமான துலா நீராடலைக் கேள்விப்பட்டு, தன் பாவத்தை போக்க முடவன் ஒருவன் மயிலாடுதுறைக்கு வந்தான்.

தன் இயலாமையால் துலா கட்டத்துக்கு ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை முதல் நாள் தொடங்கிவிட்டது. எனவே, முடவனான தன்னால் மீண்டும் அடுத்த ஆண்டு வந்து மூழ்கிச் செல்வது இயலாது என இறைவனிடம் அவன் முறையிட்டதால், சிவபெருமான் 'நீ போய் மூழ்கு! உனக்கும் பேறு கிடைக்கும்" என்று அருள்புரிந்தார். அவர் வாக்குப்படியே அவரும் கார்த்திகை மாதம் முதல் நாளன்று அந்த நதிக்கரையில் புனித நீராடி முக்தி பெற்றார். அதுவே 'முடவன் முழுக்கு" எனப்படுகிறது.

இதன் அடிப்படையில் கார்த்திகை முதல் நாளன்று, அதிகாலையிலும் இங்கு நீராடும் வழக்கம் இருக்கிறது. பாவங்கள் மற்றும் துன்பங்கள் நீங்கி நன்மை கிடைக்க மயிலாடுதுறையில் உள்ள காவிரியில் நீராடுங்கள்..!!