ஆளை மாற்றி வெட்டிய கொலையாளிகள்! பரிதாபமாக உயிரிழந்த அப்பாவி! அதிர வைத்த சம்பவம்!

ஆள் மாறாட்டக் குழப்பத்தால் தியாகு என்பவருக்கு பதில் தினேஷ் என்பவரை வெட்டிக் கொன்ற கொலை வெறிக்கும்பல் கைதுசெய்யப்பட்டுள்ளது.


மாங்காட்டை அடுத்த கொளப்பாக்கத்தைச் சேர்ந்தவர் தினேஷ். ஓட்டுநரான இவர் கடந்த 2-ஆம் தேதி இரவு மது அருந்திய நிலையில், அவருக்கும் இருசக்கர வாகனத்தில் வந்த இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்கள் தினேஷை கத்தியால் வெட்டிவிட்டுத் தப்பியோடினர். படுகாயம் அடைந்த தினேஷ், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். 

கொலை நடைபெற்ற இடத்தில் இருந்த சி.சி.டி.வி. பதிவுகளை போலீசார் ஆய்வு செய்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் தினேஷிடம் தகராறில் ஈடுபடுவதும், வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியதுமான காட்சிகள் பதிவாகியிருந்தன. அதனைக் கொண்டு நெற்குன்றத்தைச் சேர்ந்த பிரசன்னநாத், தாம்பரத்தைச் சேர்ந்த உதயசந்தர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். 

அவர்களிடம் மேற்கொண்டவிசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கொளப்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு பிரசன்னநாத் அடிக்கடி சென்று வந்த நிலையில் அதே பகுதியில் வசித்த தியாகு என்ற நபர் பிரசன்னநாத்தின் உறவுக் காரப் பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து பிரசன்னநாத் தியாகுவை கொலை செய்ய திட்டமிட்டார். 

தனது நண்பரான உதயசந்தரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பிரசன்னநாத் கொளப்பாக்கத்துக்கு இரவு நேரத்தில் வந்தபோது குடிபோதையில் இருந்த தினேஷ் அவருடன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது இருளில் சரியாக அடையாளம் காண முடியாத நிலையில் அது தியாகுதான் எனக் கருதிய பிரசன்ன நாத்தும், உதய சந்தரும் தினேஷை வெட்டினர். 

வெட்டுப் பட்டு தினேஷ் சாய்ந்த பிறகுதான் அது தியாகு அல்ல என்றும் வேறு நபர் என்றும் தெரிய வந்ததாக பிரசன்னநாத் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பிரசன்னநாத், உதயசந்தர் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைத் செய்தபோலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் தினேஷை இழந்த அவரது குடும்பம் கண்ணீரில் மூழ்கிக் கிடக்கிறது. உண்மையில் உயிரிழந்திருக்க வேண்டிய தியாகு தற்போது மாயமாகியுள்ள நிலையில் அவரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஆள்மாறாட்டத்தால் ஒரு உயிர் பறிபோனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.