லலிதா சகஸ்ரநாமம் உருவான திருத்தலம் இது. சூரியதேவன் வழிபட்ட பெருமை கொண்டது.

லலிதா சகஸ்ர நாமம் உருவான தலம் அம்மனின் அருள் பெருக்கு அதிகமான ஆலயம்.


இங்குதான் ஸ்ரீ ஹயக்ரீவர், அகத்திய முனிவருக்கு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்தார். அகத்தியரும் ஒரு பௌர்ணமி நாளன்று ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தினால் திருமீயச்சூர் லலிதாம்பிகையை வழிபட்டதுடன் ஸ்ரீலலிதா நவரத்தின மாலை என்ற பாடலையும் தமிழில் இயற்றி அம்பிகைக்கு அர்ப்பணித்தார். இதனை தினமும் படித்து லலிதாம்பிகையை வழிபட சகல நலன்களும், செல்வச்செழிப்பையும் அடைவது உறுதி என்று கூறப்படுகிறது.

கொலுசு ஆகியவை அணிந்து பார்க்க பரவசிக்கும் அம்மன் திருமுகம், சிவ சக்தி வடிவம் பிரகாரத்தில் சிறப்பாக வடிவமைக்கப் பட்டுள்ளது. நான்முக சண்டேசுவரர் சிறப்பு ஆகும். கச்சூரிலும் நான்முக சண்டேசுவரர் உண்டு. ஸ்ரீசனிஸ்வரின் அவதாரத் திருத்தலம். ஸ்ரீசூரியனாரின் சாபம் போக்கிய தலம். ஆகவே இங்கே நவக்கிரகங்களுக்குச் சந்நிதி இல்லை. மாறாக 12 ராசிகளுக்கு உரிய 12 நாகர்களும் உள்ளனர். இவர்களுக்கு தீபமேற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டால், ராகு - கேது முதலான சகல தோஷங்களும் விலகும், திருமணம் முதலான அனனத்து வரங்களும் கிடைக்கும்.

கோயிலின் இடது புறம் லலிதாம்பிகை அம்மன் சன்னதி உள்ளது. இரண்டாவது கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது அங்கே பலி பீடமும் நந்தியும் உள்ளன. அடுத்துள்ள கருவறைக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறையில் மேகநாதசாமி முயற்சிநாதர் உள்ளார். கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, சேத்திர புராணேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, சந்திரசேகரர், துர்க்கை, ரிஷபாரூடர் ஆகியோர் உள்ளனர்.

விமானம் கஜபிரஷ்ட அமைப்பை உடையது. திருச்சுற்றில் தேயுலிங்கம், விநாயகர் சன்னதிகள் உள்ளன. அடுத்து இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யம லிங்கம், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், வருணலிங்கம், நிருத்வி லிங்கம், அகத்திய லிங்கம், குபேரலிங்கம், ஈசான லிங்கம், சித்தி விநாயகர், மகாலட்சுமி, பிரித்வி லிங்கம், உள்ளிட்டோர் உள்ளனர். அடுத்து ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் உள்ளனர்

மேகநாதர் ச்ந்நிதி கோஷ்டத்தில் துர்க்காதேவி எழுந்தருளியுள்ளாள். துர்க்கை சிலையிலேயே கிளி இருப்ப்பது அதிசயமாக உள்ளது. பக்தர்கள் வைக்கும் கோரிக்கைகளை இந்தக் கிளிதான் லலிதாம்பிகையிடம் சென்று தெரிவிக்குமாம். அம்பிகையும் கிளி சொல்வதைக் கெட்டு பக்தர்களின் குறைகளை தீர்த்துவைப்பாளாம்.

இருப்பதிலேயே மிகப் பெரிய பாவம், இறைவனை தரிசிப்பதற்கு ஆசைப்படும் ஒருவருக்கு, முட்டுக்கட்டை போடுவதுதான்! ஒருவரது அங்கக் குறைபாட்டினைச் சுடிக்காட்டி ஏளனம் செய்வதும் மகாபாவம். சூரிய பகவான் இந்த இரண்டும் பாவங்களையும் செய்தார்! சூரியனின் ரதத்தினைச் செலுத்துகிற அருணன் அங்கஹீனம் கொண்டவன்; அவனுக்கு திருக்கயிலாயத்துக்குச் சென்று சிவனாரை தரிசிக்க வேண்டும் என விருப்பம். சூரியனிடம் அனுமதி கேட்டதற்கு, மறுத்ததுடன் உடற் குறையைச் சொல்லி ஏளனம் செய்தான்.

சிவபக்தியில் திளைத்திருந்த அருணன், மோகினிப் பெண்ணாக உருவெடுத்தான். திருக்கயிலாயம் புறப்பட்டான்; மோகினியின் அழகில் மயங்கினான் இந்திரன். இதில் உருவானவன் தான் வாலி. எண்ணம் ஈடேறியது. சிவதரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில், திரும்பி வந்த அருணன், சூரியனாரிடம் விஷயத்தைச் சொன்னான். 'மோகினிப் பெண்ணாகவா? உருவம் மாறிச் சென்றாயா? எங்கே மாறிக்காட்டு' என்றார்.

அருணன், மோகினியாக மாறினான். அழகில் சூரியனை மயக்கினான். விளைவு.. சுக்ரீவன் பிறந்தான். தனது பக்தனைத் தடுத்து, அவனது ஊனத்தைக் கிண்டல் செய்ததைச் சும்மா விடுவாரா, சிவனார்? சூரியனைச் சபித்தார். இருளடைந்து போனார் சூரியனார். ஏழு மாதங்கள், மேகமண்டலத்தில் எங்களை யானை மீது வைத்து பூஜித்து வா. அப்போது தான் உனது பாவம் தீரும்' என அருளினார்.

இதை அடுத்து சூரியனார், மேகமண்டலத்தில் யானை மீது, சிவ-பார்வதியை வைத்து பூஜை செய்யத் துவங்கினார். ஆனால், ஏழு மாதங்கள் நிறைவுறுவதற்கு முன்பே, சிவனாரிடம் சென்று, 'என்ன இது... இன்னும் சாப விமோசனம் தரவில்லையே?' என்று கேட்க... வெகுண்டாள் ஸ்ரீபார்வதி. 'உரிய நேரம் வரும் வரை பொறுக்க மாட்டாயா?' என்று கடும் உக்கிரத்துடன் சூரியனாருக்குச் சாபம் கொடுக்க எழுந்தாள்.

பதறிப்போன சிவனார், 'எற்கெனவே கொடுத்த சாபத்தால் இருளில் மூழ்கினான் சூரியன். இன்னொரு சாபம் கொடுத்தல், இந்த உலகம் இருளில் விழிபிதுங்கித் தவிக்கும். வேண்டாம் தேவி, சாந்தமாக இரு!' என்று உமையவளை அமைதிப்படுத்தினார். பிறகு உரிய காலம் வந்ததும், சூரியனாருக்கு சாப விமோசனம் அளித்தார்.

அவரின் திருமுகமும் இந்த உலகமும் பழையபடி இருளில் இருந்து வெளிச்சத்துக்கு வந்தது! சூரியனாருக்கு அருளிய ஈசன், ஸ்ரீமேகநாதர் எனும் திருநாமத்துடன், கஜபிருஷ்ட விமானத்தின் கருவறையில், அனைவருக்கும் அருள் புரிந்து வருகிறார், அந்தத் திருத்தலம், திருமீயச்சூர் எனப்படும். இங்கே, ரதசப்தமி விழா விமர்சையாகக் கொண்டாடப் படுகிறது. அது மட்டுமா? சித்திரை மாதம் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை, ஸ்வாமியின் மீது கதிர்களால், பூஜிக்கிறார் சூரிய பகவான்!

ஸ்ரீசனிஸ்வரர், எமதருமர், அருணன், கருடன், வாலி, சுக்ரீவன் ஆகிய ஆறு பேரின் அவதாரத் தலம் இது! ஸ்ரீலலிதாம்பிகையை தரிசனம் செய்ய வந்த காஞ்சி மகாப்பெரியவர், அம்பிகையை விட்டு செல்ல மனம் வராமல் பிடிவாதம் பிடித்தது அம்பிகையின் பெருமைக்கு ஒரு சான்றாகக் கூறப்படுகிறது.