சுவாமி விவேகானந்தர் சிறிய வயதில் மனதில் ஏராளமான கேள்விகளுடன் அலைந்தவர்.
கடவுளை விக்கிரகம் வைத்துத்தான் வழிபட வேண்டுமா? சுவாமி விவேகானந்தர் சொன்ன பதில் இது தான்
அத்தனை கேள்விகளுக்கும் பதிலாக சுவாமி ராமகிருஷ்ணர் அமைந்தார். அதனாலே தன்னிடம் கேள்வி கேட்கும் அத்தனை பேருக்கும் மிகவும் எளிமையாக ஆன்மிக பதில் சொல்வார் விவேகானந்தர். இதோ அவரது பதில்களைப் பாருங்கள்.
இறைவனை விக்கிரகமாகத்தான் வழிபாடு செய்ய வேண்டுமா? தூய்மையாக இருப்பதும், மற்றவர்களுக்கு நன்மை செய்வதும்தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும்.
ஏழைகளிடமும், பலவீனர்களிடமும், நோயாளிகளிடமும் இறைவனைக் காண்பவரே, உண்மையில் அவரை வழிபடுகிறார். இறைவனை விக்கிரகத்தில் மட்டும் காண்பவருடைய வழிபாடு ஆரம்பநிலையில்தான் இருக்கிறது.
கடவுள் எங்கே குடியிருக்கிறார்? கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் குடி கொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வெறு ஒரு கடவுள் இல்லை. இந்த உண்மையை எவ்வளவு தவங்களுக்குப் பிறகு நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.
மக்களுக்கு சேவை செய்பவன் உண்மையில் கடவுளுக்கு சேவை செய்பவன் ஆகிறான்.
பகல் கனவுகள் எது? உலகமாகிய இந்த நரகத்தில் ஒரே ஒரு நாளாவது, ஒரே ஒருவனின் இதயத்திற்காவது சிறிதளவு இன்பமும், மகிழ்ச்சியும் அளிக்க முடியுமானால் அது மட்டுமே நிஜமான சேவையாகும். இந்த உண்மையை வாழ்நாளெல்லாம் பட்ட கஷ்டங்களுக்குப் பிறகு நான் உணர்ந்து கொண்டேன்.
மற்றவையெல்லாம் பொருளற்ற வெறும் பகல் கனவுகள் என்றுதான் சொல்ல வேண்டும்.