கருப்பு நிற பெண்கள் மட்டும் படிக்க வேண்டிய கட்டுரை

பத்துப் பெண்களுடைய கைப்பையை சோதனை செய்தால், எட்டுப் பேரிடமாவது சிவப்பழகு க்ரீம் இருக்கும். ஆம், இன்னும் ஆறே வாரங்களில் அவர்கள் சிவப்பாகப்போகிறார்கள். அதன்பிறகு அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். அழகான வாலிபர்கள் சுற்றிச்சுற்றி வருவார்கள். இண்டர்வியூ போனால் எளிதாக வேலை கிடைத்துவிடும். விழாவுக்குப் போனால் தனி மரியாதை கிடைக்கும். வரதட்சனை இல்லாமல் மாப்பிள்ளை கிடைக்கும். இவை மட்டுமின்றி இன்னும் எத்தனையெத்தனையோ அற்புதங்களை எல்லாம் செய்யப்போகிறது அந்த சிவப்பழகு க்ரீம்.


இவை எல்லாம் நிஜம்தான் என்று நம்பிக்கையுடன் சத்தியமே செய்கிறார்கள் பெண்கள். ஏனென்றால் அவர்கள் கண் முன்னே ஏராளமான சாட்சியங்கள் இருக்கின்றன. எத்தனை நடிகைகளைப் பார்த்திருக்கிறார்கள். முதல் படத்தில் சுமாராக இருந்தவர்கள், அடுத்தடுத்த படங்களில் எத்தனை அழகாக மாறுகிறார்கள். அட, சினிமாவில் அம்மா வேடத்தில் நடிக்கும் 50 வயதுப் பெண்கள்கூட எத்தனை இளமையுடனும் பொலிவுடனும் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அழகு க்ரீம், சன் ஸ்க்ரீன் லோஷன், பேஷியல், ஃப்ளீச் என்று விளம்பரங்களில் தெளிவாக சொல்கிறார்களே. விளம்பரங்கள் பொய் சொல்லாது என்ற நம்பிக்கையில் தங்கள் வருமானத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை அழகுப் பொருட்களுக்கு வஞ்சனை இல்லாமல் செலவழிக்கிறார்கள்.

தனக்கு உரிய பலன் கிடைக்கவில்லை என்றாலும் இவர்கள் நம்பிக்கை இழப்பதில்லை. எனக்கு சிவப்பழகு கிடைப்பதற்கு இன்னும் கொஞ்சம் தாமதமாகலாம் என்று அடுத்த ஆறு வாரங்களை கடத்துகிறார்கள். அதன்பிறகு வேறு ஒரு நிறுவனத்தின் சிவப்பழகு க்ரீம் வாங்குகிறார்கள். மீண்டும் மீண்டும் எதையாவது வாங்கிக்கொண்டே இருக்கும் பெண்கள் 600 வாரங்கள் கடந்தாலும் க்ரீம்கள் மீது நம்பிக்கை இழப்பதில்லை என்பதுதான் ஆச்சர்யம்.    

இவர்களுக்கு ஓர் உண்மை தெரிவதில்லை. ஆம், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், பாடகிகள், முக்கிய பிரபலங்கள், பெண் தொழில் அதிபர்கள் என விளம்பரங்களில் தலைகாட்டும் எவரும் க்ரீம்கள் உபயோகிப்பதில்லை. அவர்களிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு அழகை விலைக்கு வாங்குகிறார்கள். அதாவது அழகுக்காக பிரத்யேக சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள்.

கண்களுக்குக் கீழே, கன்னத்தில், கைகளில், கழுத்தில் சுருக்கம் தென்படும் இடங்களில் போடாக்ஸ் ஊசி போட்டுக்கொள்கிறார்கள். இந்த ஊசி போட்ட சில மணி நேரங்களில் சுருக்கம் குறைந்து இளமைத்தோற்றம் வந்துவிடும். ஒரு முறை ஊசி போட்டுக்கொண்டால் மூன்று மாதங்கள் வரையிலும் சுருக்கத்தைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அதன்பிறகு தேவையென்றால் மீண்டும் போட்டுக்கொள்ள வேண்டியதுதான். ஒரு ஊசியின் விலை கிட்டத்தட்ட ஐயாயிரம் ரூபாய்.கண்ணுக்குக் கீழே கருவளையம், பருக்கள், மருக்கள் போன்றவற்றை குணப்படுத்துவதற்கு மைக்ரோடெர்மா எனப்படும் ஸ்கின் பாலிஷ் செய்யப்படுகிறது. முகத்தைப் பளபளப்பாக்குவதற்கு கிளைக்காலிக் பீல்ஸ் என்ற திரவப்பொருள் செலுத்தப்படுகிறது.

தேவையற்ற இடங்களில் முடி முளைப்பது பெண்களுக்கு பெரிய பிரச்னையாக இருக்கிறது. அதனை லேசர் சிகிச்சை மூலம் நிரந்தரமாக கட்டுப்படுத்துகிறார்கள். ஆனால் இந்த சிகிச்சையைத் தொடர்ந்து ஆறு மாதங்களாவது செய்யவேண்டி இருக்கும். வயிறு, தொடை, இடுப்பு, கழுத்து, மார்புகளில் இருக்கும் தேவையற்ற சதைகளை லிப்போசக்‌ஷன் மூலம் அகற்றிவிடுகிறார்கள். தொங்கிப்போன கன்னங்கள், காய்ந்துபோன உதடுகள் போன்றவற்றை ஃபில்லர்ஸ் முறையில் நிரப்பி அழகாக்குகிறார்கள். இத்தனை விஷயங்களையும் செய்துகொள்வதால்தான் விளம்பர அழகிகள் பளபளவென மின்னுகிறார்களே தவிர, கைப்பைக்குள் நசுங்கிக்கிடக்கும் சிவப்பழகு க்ரீம்களால் அல்ல என்பதை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த சிகிச்சைக்கு ஆயிரமாயிரமாக செலவாகிறது, சில பக்கவிளைவுகளும் உண்டு என்று தெரிந்தாலும் செய்துகொள்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அழகுதான் மூலதனம்.

ஆனால் சாதாரண பெண்களுக்கு உடல்நலம் மட்டுமே மூலதனம். இதனை பெறுவதற்கு முயற்சிக்கலாமே தவிர சிவப்பாக மாறுவதற்கு அல்ல. ஏனென்றால் சிவப்பாக மாறமுடியும் என்பது ஏமாற்றுவேலை. ஒரு க்ரீம் சிவப்பாக மாற்றும் என்றால் இன்று ஆப்பிரிக்காவில் எந்த மனிதனும் கருப்பாக இருக்கத் தேவையில்லை.

அழகு என்பது நிறத்தில் இல்லை, உடலை எப்படி பராமரிக்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது. தோல் பொலிவுடன் பளபளப்பாக திகழவேண்டும் என்றால் உடலில் நீர்ச்சத்துக் குறையவே கூடாது. தினமும் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். பாட்டில் பானங்களைத் தவிர்த்து இளநீர், மோர், நுங்கு, வெள்ளரி, ஆரஞ்சு போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். சூரியக் கதிர்கள் நேரில் உடலைத் தாக்கக்கூடாது. நறுமணப்பொருட்களை உடல் அல்லது ஆடைகளில் தடவக்கூடாது. சோப்பு, ஷாம்பு, தேங்காய் எண்ணெய், பவுடர் போன்றவற்றை அவ்வப்போது மாற்றக்கூடாது.


இவை எல்லாவற்றையும்விட சமச்சீர் உணவு, எட்டு மணி நேரத்தூக்கம், அரை மணி நேரம் உடற்பயிற்சி, டென்ஷன் இல்லாத வாழ்க்கையும் இருந்தால்தான் அழகு நிச்சயம் பக்கத்தில் வரும். பெண் என்றால் சிவப்பு அல்லது வெள்ளையாக இருந்தால் மட்டுமே மரியாதை என்பது உண்மை அல்ல. அரை டன் அழகு க்ரீம் அப்பிக்கொண்டு வெண்மையாவதால் அழகு கிடைத்துவிடாது. இது வியாபார தந்திரம் மட்டுமே என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

ஆண்களுக்கு சிவப்பான பெண்களைத்தானே பிடிக்கிறது என்று ஆதங்கப்பட வேண்டாம். ஏனென்றால் ஆண்களுக்கு இன்னும் என்னென்னமோ பிடிக்கும். அறைகுறை உடையுடன் ஆடும் பெண்ணை பிடிக்கும். சிகரெட், மது அருந்தும் பெண்ணை பிடிக்கும். இப்படி எல்லாம் பெண்கள் மாறமுடியாது. அதனால் நிஜமான நிறத்தை விரும்பும் ஆண் போதும் என்ற தெளிவான முடிவுக்கு பெண் வரவேண்டும்.

ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இயற்கையாகவே அழகை அதிகரிக்கும் பொருட்கள் நம் வீட்டிலேயே கிடைக்கின்றன. வேப்ப இலை, துளசி, மஞ்சள், சந்தனம், குங்குமப்பூ, தேன், சீகைக்காய், நெல்லிக்காய் போன்றவை மிகச்சிறந்த அழகுசாதன பொருட்களாக ஆண்டாண்டு காலமாக பயன்பட்டு வருகின்றன. இன்னும் சொல்லப்போனால் முல்தானிமெட்டி, தயிர், கடலை மாவு போன்றவற்றைவிட சிறந்த அழகுசாதன பொருட்கள் வேறு எதுவும் இல்லை.இனியாவது அழகுசாதனப் பொருட்களுக்கு செலவழிக்கும் பணத்தை காய்கறிகள், பழங்களுக்குப் பயன்படுத்துங்கள். உடல் ஆரோக்கியமானால் அழகும் நிச்சயம் கூடும். உங்கள் இயல்பான நிறமே அழகுதான் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையை வளர்த்துக்கொண்டால், நீங்கள்தான் உலக அழகி.