மயங்கி விழுந்ததா சொன்னாங்க..! போய் பார்த்தேன் சடலமாக கிடந்தார்..! ரெயின்போ பள்ளி வளாகத்தில் 1ம் வகுப்பு மாணவிக்கு நடந்தது என்ன?

திருப்பத்தூர்: 1ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பத்தூர் அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மனைவி மது. இவர்களுக்குதேவதர்ஷினி என்ற 5 வயது மகள் இருந்தார். இந்த சிறுமி அருகில் உள்ள தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார். குடும்ப வறுமை காரணமாக,  பச்சையப்பனும், அவரது மனைவி மதுவும் கும்பகோணத்தில் ஓரிடத்தில் வேலை செய்து வருகின்றனர். இதனால், சிறுமி தேவதர்ஷினி புளியம்பட்டியில் அவரதுபாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவர் பள்ளி வளாகத்திலேயே மயக்கமடைந்து விழுந்ததால், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக, பள்ளி நிர்வாகம் தரப்பில் சிறுமியின் பாட்டிக்கு தகவல் கூறப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்கு விரைந்த பாட்டி அங்கே தனது பேத்தி சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார்.

சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதாகவும், இதற்கு என்ன காரணம் என்று கண்டறிய வேண்டும் எனவும் கூறி உள்ளூர் போலீசில் புகார் அளித்தார். இதுபற்றி விளக்கம் அளித்துள்ள பள்ளி நிர்வாகம், சம்பந்தப்பட்ட சிறுமி கடந்த 10 நாட்களாகவே பலகீனமான நிலையில் இருந்ததாகவும், திடீரென பள்ளி வளாகத்திலேயே மயக்கமடைந்ததால் வேறு வழியின்றி அவரை மருத்துவமனையில் சேர்க்க நேரிட்டதாகவும் தெரிவித்தனர்.

சந்தேகம் இருந்தால் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்யும்படி பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.