திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பிறந்த நாள், இனி அரசு விழா... முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆன்மிக அறிவிப்பு

ஆன்மிக அரசியல் என்பதுதான் இன்று தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பா.ஜ.க.வும் தி.மு.க.வும் ஆளுக்கு ஒரு பக்கம் ஆன்மிக அரசிலை பேசி வருகிறார்கள். இந்த நிலையில், பேச்சாக இல்லாமல் ஆன்மிக அரசியலை செயல்படுத்தி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


ஆம், திருமுருக கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு இதோ. 

"தமிழ் கூறும் நல்லுலகம் அனைத்திலும் சைவத்தையும், தமிழையும் தேவாரம், திருவாசகம் போன்ற பக்தி பன்னூல்களையும் சுவைபட பொதுமக்களுக்கு சொற்பொழிவாற்றி, அனைத்து மதத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சமூக நல்லிணக்கத்தை வளர்த்த பெருமைக்குரியவர் திருமுருக கிருபானந்தவாரியார் அவர்கள். 

இவர் 1906-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் நாள் வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், காங்கேயநல்லூரில் பிறந்தார். இவர் 19-ஆம் வயது முதல் சமய, சமூக சொற்பொழிவுகளை ஆற்றத் தொடங்கி, அதன் மூலம் கிடைத்த வருவாயினை ஏழை, எளிய மக்களுக்கு கல்வி, மருத்துவம் மற்றும் திருமணம் ஆகிய மக்கள் நலம் சார்ந்த பணிகளுக்காக செலவிட்டார்.

இரண்டு புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களால் முனைவர் பட்டமும், இசைப் பேரறிஞர் பட்டமும், இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, இந்திய அரசால், இவருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்ட சிறப்புக்குரியவர். நமது புரட்சித் தலைவருக்கு "பொன்மனச் செம்மல்" என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தவர் கிருபானந்தவாரியார் அவர்கள். அவரது நினைவாக அவர் பிறந்த ஆகஸ்ட் மாதம் 25-ஆம் நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும்"" என்று அறிவித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து, வேலூரில் தங்கியிருந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி அவர்களை திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் குடும்பத்தைச் சேர்ந்த வாரியார் சுவாமிகளின் சகோதரர் மகன் புகழனார், மருமகள் ஏலவார் குழலி, வாரியார் சுவாமிகளின் அக்காள் பேரன் சி.பி. பாபு மற்றும் குடும்பத்தினர் சந்தித்து, திருமுருக கிருபானந்தவாரியார் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். மக்களுக்கும் இது இனிப்பான செய்திதான்.