திருமாவின் கூட்டணி மாற்றம் உறுதியாகிவிட்டதா? எடப்பாடி சந்திப்புக்குப் பின் மர்மம்!

மறைந்த கருணாநிதி உயிருடன் இருந்தவரை, திருமாவுக்கு தி.மு.க.வில் நல்ல மதிப்பும் மரியாதையும் இருந்துவந்தது. ஆனால், கருணாநிதியின் மரணத்துக்குப் பிறகு தி.மு.க.வின் வேண்டாத விருந்தாளியாக இருக்கிறார் திருமா.


இந்த நிலையில் திடீரென எடப்பாடியாரை சந்தித்து சென்னையை தனித் தொகுதியாக மாற்றவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். ரவிக்குமாரோ அல்லது அவரது கட்சியின் வன்னிஅரசு மூலம் கோரிக்கை சென்றிருந்தால் பரவாயில்லை. நேரடியாகவே திருமாவே எடப்பாடியை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பு தி.மு.க. வட்டாரத்தில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம், வர இருக்கும் தேர்தல் காலத்தில் அ.தி.மு.க. கூட்டணிக்குச் செல்வதற்கான அச்சாரம் என்றுதான் பார்க்கிறார்கள். ஏனென்றால் டாக்டர் கிருஷ்ணசாமிக்கும் அ.தி.மு.க.வுக்கும் இப்போது அத்தனை நல்ல உறவு இல்லை என்பதால் அந்த இடத்தை திருமா பிடிக்க முயற்சி செய்கிறார் என்று சொல்லப்படுகிறது.

தி.மு.க. கூட்டணியில் இருக்கும்போது எப்படி அங்கே போவார் என்று கேட்பவர்களும் உண்டு. உண்மையில் கூட்டணி மாறுவதில் பாமக, விசிக, இந்த இரண்டு கட்சிகளும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை. ஒரே வித்தியாசம், ராமதாசை போல திருமா காருள்ள வரையும், பாருள்ள வரையும் என்று சொல்லாமல் செய்கிறார், அவ்வளவுதான்.

மாறி மாறி கூட்டணி வைத்ததைவிட டயர்நக்கி என்று ஆளும் கட்சியினரை திட்டிவிட்டு, ஆளுநரிடம் 21 அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார் வாசித்துவிட்டு அடுத்த மாதங்களில் அதே அதிமுகவிடம் சரணடைந்த செயலால் பா.ம.க. படுத்தே விட்டது..

அதே பாணியில் இத்தனை காலமும் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்துவிட்டு இப்போது அவர்களிடமே அண்டி நிற்கிறார். தேர்தல் நிறைய வந்து போகும், கட்சியின் மீதான நம்பிக்கையை சிதைத்துக்கொண்டே போனால் மீள்வது கஷ்டம் என்பதை திருமா புரிந்துகொள்ள வேண்டும்.