உங்க பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டுமா? முருகப்பெருமான் பஞ்சாட்சர உபதேசம் செய்த இந்த திருத்தலத்துக்கு செல்லுங்க!

திருவாரூர் மாவட்டம் திருக்களர் எனும் கிராமத்தில் அமுதவல்லி அம்பாள் உடனுறை பாரிஜாதவனேஸ்வரர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.


இது காவிரி தென்கரைத்தலங்களில் 105-வது தலம் ஆகும். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றதும் கூட. இத்தலத்தில் சோழர்கள் பாண்டியர்கள் மற்றும் விஜயநகரத்தார் காலத்தைச் சேர்ந்த 13 கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன. மாசி மாத பௌர்ணமி திதியில் சிவபெருமான் துர்வாச முனிவருக்காக பிரம்ம தாண்டவ திருநடனம் செய்தருளினார். அதனால் இங்குள்ள சபைக்கு பேரம்பலம் என்று பெயர். இது உபவிடங்கத் தலம் ஆகும். திருப்புகழ் வைப்புத் தலமாகவும் விளங்குகிறது. இத்தலத்திற்குப் பாரிஜாதவனம் தருவனம், கற்பகவனம், என்னும் பெயர்களுண்டு

துர்வாச முனிவர் பூஜித்து வந்த இத்தலத்தை அடைந்து, இங்கு சிலகாலம் தொடர்ந்து வழிபாடு செய்து வந்தால், நம்மிடம் உள்ள முன்கோபம், குரோதம் முதலியன நீங்கும் என பக்தர்கள் நமக்கு உணர்த்துகின்றனர். களர் என்றால் அம்பலம் என்று பொருள். களர் நிலத்தில் உள்ள கோயிலாதலால் இப்பெயர் பெற்றது என்றும் சொல்வர். இங்குள்ள துர்வாசர் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ருத்ர தீர்த்தம், ஞான தீர்த்தம் ஆகியவை விசேஷமானவை. பவள மல்லிகை மரம் ஸ்தல விருட்சமாக விளங்குகிறது.

சிவபெருமானின் கட்டளைப்படி முருகப்பெருமான் முனிவர்கள் பலருக்கும் பஞ்சாக்ஷர உபதேசம் செய்த தலம் இது. மார்கழி மாதம் பூர்வ பட்ச சஷ்டி திதியும் சதய நட்சத்திரமும் கூடிய சுபதினத்தில் திருக்களர் அருள்மிகு சபாநாயகர் திருச்சந்நிதியில் எழுந்தருளியுள்ள முருகன், கந்தமாதன பருவதவாசிகளாகிய அறுபதினாயிரம் முனிவர்களுக்கும், துருவாசர், வியாசர், காலவர், பராசரர் முதலிய முனிவர்களுக்கும் பஞ்சாக்ஷர உபதேசம் செய்தருளினார். பஞ்சாட்சர மந்திரத்தை வேதங்கள் புகழ்ந்துரைக்கும் படியான திருக்களர் தலத்தில் ஒரு முறை ஜபித்தால் கோடி முறை ஜபித்த பலனை தருமாம்.

இத் தலத்தில் சண்முக பெருமாள் தேவியருடன் இல்லாமல் குரு வடிவமாக தனிசன்னதியில் அருள்கிறார். ஆகவே மாணவர்கள் தங்களின் படிப்பு சிறக்க வியாழக்கிழமைகளில் இவரை வழிபடுவது சிறப்பு. இங்கு வந்து தன்னை வணங்குபவர்களுக்கு முருகப்பெருமான் கல்வி, செல்வம், மகட்பேறு, ஞானம் ஆகியவற்றை அளித்து நிறைவில் சுப்பிரமணிய லோகத்தை அடையும் பேற்றினையும் அளிப்பதாக முருகப்பெருமான் திருவாக்கு அளித்துள்ளாராம். இது கேது பரிகார தலமாகவும் விளங்குகிறது.

இந்த வருடம் பஞ்சாக்ஷர உபதேசப் பெருவிழா செவ்வாய்க்கிழமை 31 12 19 அன்று இரவு நடைபெறுகிறது. பக்தர்கள் கலந்துகொண்டு திருவருள் பெற்று வரலாம்.