திருச்செங்கோடு கிரிவலம் போயிருக்கீங்களா? பாண்டவர்கள் தரிசித்த திருத்தலம்!

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில், வரலாற்று சிறப்பும், இதிகாசம் மற்றும் புராண சிறப்பும் கொண்ட தலமாகும்.


அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர், ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஆதிகேசவ பெருமாள் ஆகியோர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் போன்று திருச்செங்கோடு பௌர்ணமி கிரிவலத்திலும் ஆண்களும், பெண்களுமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். சித்ரா பௌர்ணமி முதலிய விஷேச காலங்களில் பக்தர்கள் இரவு 12 மணிவரை கிரிவலம் வந்து இறையருள் பெறுகின்றனர்.

மலையேறுவதற்காக படிவழி தொடங்குமிடமே மலையடிவாரம். கிரிவலம் தொடங்கும் பக்தர்கள் முதலில் அவ்வடிவாரம் சென்று அங்குள்ள கஜமுக பிள்ளையாரை வணங்கி சுமார் 7 கி.மீ உள்ள கிரிவல பாதையை சுற்றி வந்து அதே இடத்திலேயே கிரிவலத்தை நிறைவு செய்வார்கள்.

கிரிவலம் செல்லும் பக்தர்கள், ஆறுமுக சுவாமி கோவிலில் துவங்கி, பெரிய ஓங்காளியம்மன் கோவில், நாமக்கல் சாலை, மலைசுத்தி சாலை, வாலரைகேட், பரமத்தி வேலு}ர் சாலை, சின்ன ஓங்காளியம்மன் கோவில், தெற்கு ரதவீதி வழியாக மீண்டும் ஆறுமுக சுவாமி கோவிலை வந்தடைவர். நாமக்கல், ஈரோடு, சேலம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கிரிவலம் செல்வார்கள்.

மனத்தூய்மையுடன் இறைவனை மனதில் நினைத்து நமசிவாய எனும் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்த வண்ணம் வரவேண்டும். காலணிகளை தவிர்த்தல் வேண்டும். வாகனங்களில் கிரிவலம் செல்லக்கூடாது.

திருச்செங்கோடு மலை ஓங்கார வடிவானது. ஓங்காரம் என்பது சிவ வடிவமானது. பெரும் பலன் அத்தனையும் இந்த மலையை வலம் வருதலால் கிட்டும். பௌர்ணமி நாளிலும், அமாவாசை நாளிலும் சிவராத்திரியிலும் பிறந்த (ஜன்ம) நட்சத்திரத்திலும் திருச்செங்கோடு மலையை கிரிவலமாக வருவது அளவற்ற நற்பலனை தரும்.

கிரிவலம் முடிந்ததும் குளிப்பதை தவிர்த்தால் கிரிவலப் பயனை அடையலாம். மாலை நேரத்தில் குறைந்த வெயிலில் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறு கிரிவலத்தை மேற்கொண்டால் உடல் நலமும், ஆரோக்கியமும் மேம்படும்.

பாண்டுவின் புதல்வர்களான தருமன், பீமன், அர்சுணன், நகுலன், சகாதேவன் ஆகியோர் 12 ஆண்டுகள் வனவாசமும் 1 ஆண்டு அஞ்ஞாத வாசமும் (பிறர்காணாமல் வாழும் வாழ்வு) வாழ்ந்தார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

அந்த நாட்களில் அவர்கள் பல புண்ணிய தலங்கள் மலைகள் தீர்த்தங்கள் முதலியவற்றை தரிசித்து கொண்டு வரும்போது திருச்செங்கோடு மலையை கண்டனர். அதன் மீது ஏறி கணபதி தீர்த்தம், குமார தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம் முதலியனவற்றில் நீராடி மகிழ்ந்தனர்.

சனற்குமாரன், அகத்தியன், புலத்தியன், விஞ்சையர்கள், சித்தர்கள் முதலிய பெரியோர்கள் தவம் புரிந்தனர். அவர்கள் கிரிவலம் வந்த பாண்டவர்களை ஆதரித்தனர். பின்னர் முருககீசரை வணங்கினர். அஞ்ஞாத வசம் முடித்ததால் சொற்படி நாடு தராத கவுரவர்களை எதிர்த்து போரிட்டு உமையொருபாகர் அருளால் தம் திருநாடு எய்தி தாம் இழந்த அஸ்த்தினாய் புரியையும் பெற்றார் என்று திருச்செங்கோடு மாண்மியம் சொல்கிறது.