பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி அடைந்துள்ள 13 பொதுத்துறை வங்கிகள். காரணம் தெரியுமா?

மும்பை பங்குச் சந்தையில் ஒரு வருட விலை வீழ்ச்சியை சந்தித்துள்ள 13 பொதுத்துறை வங்கிகளும் அதன் செயல்பாடுகள் பற்றிய தகவல்களை கூறுகிறது இந்த பகுதி.


உலக அளவிலான கொரோனோ வைரஸ் தாக்குதல். இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக கடந்த வாரம் மும்பை பங்குச் சந்தையில் கடுமையான சரிவு ஏற்பட்டது, கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வர்த்தக வீழ்ச்சியில் பொதுத்துறையைச் சேர்ந்த 13 வங்கிகளின் பங்குகள் 52 வார விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.  

அலகாபாத் வங்கி கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 40 சதவிகித வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக இறுதியில் 11.1 ரூபாயில் முடிவடைந்தது இதன் பங்குகள். அதற்கு அடுத்தபடியாக கனரா மற்றும் சிண்டிகேட் வங்கிகளின் பங்குகள் கடந்த ஒரு ஆண்டில் சராசரியாக 34 சதவிகித இழப்பினை சந்தித்துள்ளது.


பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், ஆந்திரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா, பஞ்சாப் & சிந்து வங்கி, இந்தியன் வங்கி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற வங்கிகளின் பங்குகள் கடந்த வெள்ளிக்கிழமை 52 வார குறைந்த அளவிற்கு சரிவை சந்தித்தன.பொதுத்துறை நிறுவன வங்கிகளின் இந்த இழப்புகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சில்லறை மற்றும் கார்பரேட் முதலீட்டாளர்கள். நீண்ட கால முதலீடுகளுக்காக பரிந்துரைக்கப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் இருந்து மேற்கண்ட வங்கிகளை நீக்கியுள்ளார்கள்.

மேலும். பொதுத்துறை வங்கிகள் மோசமான கடன்கள் மூலமாக கடும் இழப்புகளை சந்தித்து வருவதும் இந்த வர்த்தக வீழ்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது. மத்திய அரசு சில வங்கிகளுக்கு மூலதன உதவி செய்திருந்தாலும்‌. மீண்டும் நிலையான வர்த்தக ஒப்பந்தங்கள் ஏதும் இன்றி தத்தளித்து வருகின்றன இந்த பொதுத்துறை வங்கிகள்.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் மும்பை பங்குச் சந்தையில் பாரத ஸ்டேட் வங்கி 9 சதவீதமும், பாங்க் ஆப் மகாராஷ்டிரா மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா தலா 19 சதவீதமும், யூகோ வங்கி 26 சதவீதமும், கார்ப்பரேஷன் வங்கி 34 சதவீதமும் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுத்துறை வங்கிகளின் செலவினங்களை குறைக்கும் வகையில் நாட்டில் உள்ள பல வங்கிகள் பல்வேறு வங்கிகளுடன் இணைக்கப்பட்டு வந்தாலும்.பொருளாதார அளவில் அவைகள் இன்னும் வலுவாக காலூன்ற முயற்சிக்க வில்லை என்றே கணிக்க முடிகிறது.

ஏனெனில் தனியார் துறையில் உள்ள யெஸ் வங்கியை தவிர்த்து அனைத்து வங்கிகளும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஆண்டுக்கு ஆண்டு லாபம் ஈட்டி வரும் இந்த வேளையில். சராசரியாக நஷ்டத்தை மட்டுமே காட்டி வரும் இதுபோன்ற பொதுத்துறை வங்கிகளை இணைப்பதை விட. இதன் ஊழியர்களை மாற்றுவதே சிறந்தது என்று கூறுகின்றனர் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை கணித்து வரும் நிபுணர்கள்.

மேலும் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள். வங்கியின் வருமானத்தை உயர்த்த சிறு முயற்சி கூட எடுப்பதில்லை எனவும். தலைமை எடுக்கும் வருமான உக்திகளுக்கு கூட செவி சாய்ப்பதில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.

இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டு. ஒட்டுமொத்த வங்கித் துறையின் சேவையும் தனியார் வங்கிகளின் வசம் போய்விட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக வருத்தம் கொள்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள்.

மணியன் கலியமூர்த்தி