எந்த கிரகத்தால் உங்களுக்கு தோஷம்? நவகிரக தோஷங்களை நீக்குவதற்கான எளிய பரிகாரங்கள்!

நம்முடைய வாழ்வில் வரும் இன்ப துன்பம் அனைத்தும் நவகிரகங்களின் செய்கையால் நடக்கிறது.


நவக்கிரகங்களை வழிபடுவது நல்லது என்றாலும் எந்த ஒரு கோயிலுக்குச் சென்றாலும் மூலவரை வழிபடாமல் வெறும் நவகிரக வழிபாட்டை மற்றும் மேற்கொள்வது தவறானது. முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட்ட பின்னர் அந்த கோயிலின் மூலவரை வணங்கி விட்டு இறுதியாகவே நவகிரக வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

இதுவே சிறந்த பலன்களை அளிக்கும். மூலவரை வழிபடாமல் நவகிரகங்களை மட்டும் வழிபடுவது எதிர்மறையான பலன்களை கொடுக்கும். ஒவ்வொரு கிரக தோஷமும் நீங்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்:

சூரிய தோஷம் நீங்க: அனுமன் கோயிலுக்குப் போய் வழிபடுங்கள். தாமிரத்தால் செய்த இஷ்டதெய்வ டாலர் அல்லது அனுமன் டாலரை அணிந்து கொள்ளுங்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியோதயத்தின் போது உங்கள் வீட்டு பூஜையறையில் பசு நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபடுங்கள். பசுமாட்டுக்கு கோதுமை அல்லது கோதுமை தவிடு வாங்கிக் கொடுங்கள். சூரியனுக்குரிய ஆதித்ய ஹ்ருதயம் அனுமன் சாலீசா துதிகளை தினமும் பாராயணம் செய்யுங்கள். மாணிக்கக் கல்லில் டாலர் செய்து கழுத்தில் அணியுங்கள்.

சந்திரன் தோஷம் விலக: திங்கட்கிழமைகளில் சூரியோதயத்தின் போது உங்கள் வீட்டு பூஜையறையில் 5 அகல்தீபம் பசுநெய் விட்டு ஏற்றி வையுங்கள். சிவாலயத்திற்குச் சென்று அங்கு நடைபெறும் அன்னதானம் அல்லது நிவேதனத்திற்கு இயன்ற அளவு பச்சரிசி வாங்கிக் கொடுங்கள். ஈயத்தினால் செய்யப்பட்ட காப்பு அல்லது டாலரை அணிந்து கொள்ளுங்கள். பசுமாட்டிற்கு பச்சரிசியும் வெல்லமும் கலந்து கொடுப்பதும் சிறப்பான பரிகாரமே. திங்களூர் கைலாசநாதர் ஆலயத்திற்குச் சென்று கைலாசநாதரையும் நவகிரக சந்திரனையும் வழிபடலாம்.

செவ்வாய் தோஷம் விலக: செவ்வாய் கிழமையில் 5 அகல் தீபத்தினை பசுநெய்விட்டு உங்கள் வீட்டு பூஜையறையில் ஏற்றி வையுங்கள். செம்பு உலோகத்தாலான டாலர் அல்லது காப்பை அணிந்து கொள்வது நல்லது. முருகன் அல்லது துர்க்கை டாலரானால் கூடுதல் சிறப்பு. முருகன் கோயிலுக்குச் சென்று முருகனை வழிபட்டும் செவ்வாயையும் வழிபட்டு வாருங்கள். பழனிக்குச் சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்யுங்கள். வைத்தீஸ்வரன் கோயில் சென்று அங்குள்ள அங்காரகனுக்கு அர்ச்சனை செய்வதும் நல்ல பலன் தரும்.

புதன் தோஷம் விலக: பித்தளையால் செய்யப்பட்ட டாலர் அல்லது காப்பினை அணிந்து கொள்ளுங்கள். பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி வாங்கி சாற்றி வழிபடுங்கள். பக்தர்களுக்கு பச்சைப்பருப்பு பாயாசம் அல்லது பால்பாயாசம் பிரசாதமாக விநியோகம் செய்யுங்கள். புதன் காயத்ரி, பெருமாள் காயத்ரி மனதாரக் கூறுங்கள். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபடுவது நல்லது.

குரு தோஷம் விலக: வியாழக்கிழமைகளில் சூரியோதயத்தில் வீட்டு பூஜையறையில் 5 அகல் தீபம் ஏற்றி தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். ஆலங்குடி, திருச்செந்தூர், மந்திராலயம், தூத்துக்குடி ஆழ்வார் திருநகரி ஆகிய தலங்களுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். அந்தக் கோயிலுக்குப் போகும் முன் 40 லட்டுக்கும் குறையாமல் ஏழைகள் அல்லது பக்தர்களுக்கு விநியோகம் செய்யுங்கள்.

உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள தட்சிணாமூர்த்தியை அடிக்கடி சென்று வழிபட்டு வாருங்கள். யானையைப் பார்க்கும் போது அல்லது கோயில் யானைக்கு மஞ்சள் வாழைப்பழம் இயன்ற அளவு வாங்கிக் கொடுங்கள். குரு காயத்ரி, தட்சிணாமூர்த்தி துதிகளையும் எப்போதும் சொல்லுங்கள்.

சுக்கிரதோஷம் விலக: வெள்ளிக்கிழமைகளில் சூரியோதயத்தில் உங்கள் வீட்டு பூஜையறையில் 5 அகல் தீபம் ஏற்றி வைத்து வழிபடுங்கள். ஸ்ரீரங்கநாதரை வழிபடுவது சிறப்பு. பெருமாள் கோயிலில் உள்ள தாயாரை தாமரை மலர் அல்லது மல்லிகைப்பூ கொடுத்து வழிபடுங்கள். சுக்ர காயத்ரி, மகாலட்சுமி துதிகளை கூறுங்கள். பசுமாட்டிற்கு தயிர்சாதம் அல்லது பச்சரிசி வெல்லம் கலந்து கொடுங்கள்.

சனி தோஷம் விலக: தினமும் ஒருகைப்பிடி அன்னம் எள்சேர்த்து காகத்திற்கு வைப்பது நன்மை தரும். சனிக்கிழமைகளில் சூரியோதயத்தின் போது 5 அகல் தீபம் நல்லெண்ணெய் விட்டு ஏற்றுவதும் அல்லது. தினமும் சிவன், லட்சுமி, நரசிம்மர், அனுமன், சனிபகவான் காயத்ரி மந்திரங்களைக் கூறுங்கள். சனி பிரதோஷ தினங்களில் நந்தி தரிசனம் செய்வதும், சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்வதும் சிறப்பானது. திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள நளதீர்த்தத்தில் நீராடி அங்குள்ள சனிபகவானை வழிபடலாம்.

ராகு தோஷம் விலக: சனிக்கிழமை சூரியோதயத்தில் 5 அகல் தீபம் ஏற்றி வையுங்கள். தினமும் துர்கை காயத்ரி கூறுங்கள். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை 5 அகலில் நெய்தீபம் ஏற்றி கும்பிடுங்கள்.

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று அங்குள்ள துர்க்கையையும் திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயிலுக்குச் சென்று ராகுவையும், திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று நாகரையும் தரிசித்துவிட்டு வாருங்கள். பசுவுக்கு கடலைப்பொட்டு அல்லது அகத்திக்கீரை தீவனம் வாங்கிக் கொடுங்கள்.

கேது தோஷம் விலக: செவ்வாய்க்கிழமையில் சூரியோதயத்தில் 5 அகல் தீபங்களை நெய்விட்டு ஏற்றிவைத்து இஷ்ட தெய்வத்தை வழிபடுங்கள். விநாயகர் கோயிலுக்குச் சென்று அறுகு சாற்றி வழிபாடு செய்யுங்கள். துருக்கல் எனப்படும் உலோகத்தாலான டாலரை அணிந்துகொள்வது சிறப்பு.