கொரோனா நோய் வந்துவிட்டதா என்பதை ஆரம்பகட்டத்திலேயே நாம் தெரிந்து கொள்ள எளிய வழி..! அமெரிக்க மருத்துவர்கள் வெளியிட்ட தகவல்!

கொரோனா வைரஸ் தாக்குதலை தொடக்கத்திலே கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகளை அமெரிக்கா விவரித்துள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 33,500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 7,20,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் இந்த நோய்க்கான அறிகுறிகளாக சளி, தொண்டை வலி, வறட்டு இருமல் ஆகியன பார்க்கப்படுகின்றன. இத்துடன் சேர்த்து மேலும் சில அறிகுறிகளையும் அமெரிக்கா காது மற்றும் தொண்டை நோயியல் அகாடமியின் தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், "சாதாரண மனிதர்களுக்கு சளி, இருமல், சைனஸ், ஒவ்வாமை ஆகிய பிரச்சனைகள் இருக்கும்போது வாசனையும், சுவையும் சரி வர  தெரியாது. ஆனால் மேற்கூறிய சிரமங்கள் ஏதுமின்றி எவரேனும் வாசனையும், சுவையும் தெரியவராமல் இருந்தால் அவர்கள் அதை கொரோனா பாதிப்பின் அறிகுறியாக கருத வேண்டும்.

உடனடியாக அவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். இந்த வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பலரும், வைரஸ் தாக்கிய சில நாட்களுக்கு முன்னரே இதுபோன்ற அறிகுறிகளை சந்தித்ததாக கூறியுள்ளனர்.

வெகுசிலரே, வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பின்னரே தங்களுக்கு இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டதாக கூறியுள்ளனர்" என்று ஜேம்ஸ் கூறியுள்ளார்.

இந்த அறிகுறிகள் உடையவர்கள் தயவு செய்து உடனடியாக கொரோனா தாக்கிவிட்டதாக அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அறிகுறிகள் தென்பட்ட உடனே மருத்துவர்களிடம் சென்று உரிய பரிசோதனை செய்து கொண்ட பின்னரே முடிவு செய்ய வேண்டும். அதன்பின்னர் அவர்களுடைய அறிவுரையின் படி நடக்க வேண்டும். 

இந்த செய்தியானது அமெரிக்கா நாட்டினரிடையே சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.