கொரோனா அச்சத்தைப் போக்க அரசும் மீடியாவும் செய்யவேண்டியது இவை மட்டும்தான்.

ஊரடங்கு நீடிக்கப்படுமா, பொருட்கள் கிடைக்குமா, வேலை கிடைக்குமா, சம்பளம் கொடுக்கப்படுமா, உடல்நலம் அப்படியே தாக்குபிடிக்குமா, பிள்ளைகள் படிப்பு என்னாகும் என்று நாளுக்கு நாள் மக்கள் அச்சத்துடன் போராடி வருகிறார்கள்.


இந்த நிலையில் மக்களின் அச்சத்தைப் போக்க செய்யவேண்டிய கருத்துகள் வைரலாகிவருகின்றன. கொரோனா குறித்து தயவு செய்து அச்சத்தை விதைக்காதீர்கள். மக்கள் உயிரா? தொழில்களை இயங்க அனுமதிப்பது முக்கியமா என்பதில் தெளிவாக முடிவெடுங்கள். .

மக்கள் உயிர் முக்கியமெனில், அச்சத்திலும், வாழ்வாதாரத்துக்காகவும் தவித்து வருபவர்களுக்கு உதவக் கூடிய பொருள் அல்லது பண உதவியை (குறைந்தபட்சம் மாதம் 5 ஆயிரம் ரூபாயாவது )அறிவித்து நடைமுறைப்படுத்துங்கள். தொழில்கள் இயங்க அனுமதிப்பது முக்கியம் என்றால், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். 

கொரோனா என்ற கொடிய வைரஸ் தாக்கிவிடுமோ என்ற பீதியை விடவும், எதிர்காலத்துக்கான வாழ்வாதாரம், பொருளீட்டுதல், பிழைத்திருத்தல் பற்றி மக்களுக்கு மன ரீதியாக கவலைகள் அதிகரித்திருப்பதை ஊடகங்களும், அரசாங்கமும் முதலில் புரிந்து கொள்ளுங்கள். இந்த கவலைகள் எல்லாம் ஒவ்வொரு ஊரடங்கும் முடியப்போகும் காலகட்டத்தில் மனரீதியாக மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். 

மத்திய மாநில அரசுகளே முடிவுகள் எடுக்கும் முன்பு, ஒரு நிமிடம் காலசக்கரத்தில் நின்று எளியவனாக மாறி முடிவுகளை எடுங்கள். ஊடகங்களே... கொரோனா கோரத்தாண்டவம், பலி எண்ணிக்கை உயர்வு என்று எழுதும் முன்பு நீங்களும் டைம் மிஷினில் நின்று எளியவனாக கொஞ்ச நேரத்துக்கு மாறி யோசித்துவிட்டு எழுதுங்கள்.

இ-பாஸ் முறையை ரத்து செய்து விட்டு, கொரோனா தொற்று இருக்கிறதா என்று அறிய மாவட்ட எல்லைகளில் வசதியை ஏற்படுத்தி மக்களை சுதந்திரமாக செல்ல அனுமதியுங்கள். பொருள் இல்லாவிட்டாலும் கூட இ பாஸ் முறையும், கெடுபிடிகளும், எதிர்காலம் குறித்த பயமுமே சாதாரண மக்களின் மனதை கொல்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.