ஞானியர்கள் ஏன் நிர்வாணமாக இருக்கிறார்கள்? துறவின் இலக்கணம் இதுதானா?

பரப்பிரம்மத்தின் முழு அவதாரமாய், முழுமுதற்பொருளின் மானிட வடிவமாய், சடாமுடியோ, கம்பீரமான தோற்றமோ இல்லாமல், ருத்திராட்சம் அணியாமல், காவி உடுத்தாமல், கமண்டலம் எடுக்காமல் ஏன் கௌபீனம் கூட இல்லாமல் - இயற்கை அன்னை தன்னைப் படைத்த வண்ணமே, ஒரு மாமுனிவர் இப்புண்ணிய பூமியாம் பரத கண்டத்தில் உலகை உய்விக்கும் பொருட்டு எழுந்தருளியிருந்தார்கள்.


அவர்கள் வாழ்ந்த இடம் ஒர் ஏகாந்தமான காடோ, மலையோ, குகையோ அன்று; கங்கை, நர்மதை, காவிரி போன்ற நதித்தீரமும் அன்று; தமிழ்நாட்டில் கசவனம்பட்டி என்னும் குக்கிராமமே அத்திருத்தலமாகும். அவர்கள் ஒர் அவதூதராகவும் (நிர்வாண முனிவர்), மிகவுயர்ந்த ஞானியாகவும், “தலைசிறந்த மனிதர்கள் அமைதியாகவும், மௌனமாகவும், பிறருக்குத் தெரியாமலும் இருக்கிறார்கள்” என்று அருளிச்செய்துள்ள சுவாமி விவேகானந்தரின் கூற்றுக்குக் கண்கண்ட இலக்கணமாகவும் திகழ்ந்தவர்கள்.

அவர்கள் பொதுவாக மௌனமாகவே இருந்தார்கள். இருப்பினும் பாரதநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலிருந்தும் கூட ஏராளமானோர் வந்து சுவாமிகளைத் தரிசித்து அவர்களின் ஆசியும், அருளும் பெற்றுச் செல்வார்கள். தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற மகான்களெல்லாம் தங்களைத் தரிசிக்க வரும் பக்தர்களிடம் இந்த அவதூதரரைப் பற்றிப் புகழ்ந்துரைத்து, அவர்களைப் போய் காணும்படி சொல்வார்கள்.

சுவாமிகள் துறவு என்னும் சொல்லுக்கே இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் என்று கூறினால் அது மிகையாகாது. இந்த உலகத்திற்கு எந்நிலையில் அவதாரமெடுத்து வந்தார்களோ அந்நிலையிலேயே உலக மக்களுக்குக் காட்சியளித்து அந்த நிலையிலேயே மகாசமாதி அடைந்தவர்கள் நம் சுவாமிகள். நிர்வாண நிலையில் அவர் இருந்தாலும் அவரை அன்புடன் பெற்ற குழந்தையாய் உற்றார் உறவினர் போன்று பேணிக்காத்த பெருமை இவ்வூர் மக்களையும், அவரிடம் உண்மை அன்பு செலுத்திய பக்தர்களையும் சாரும்.

அவரைத் தரிசித்த பக்தர்களும் அவரின் உயர்ந்த நிலை கண்டு, எந்தவித விகற்பமுமின்றி பிறந்தமேனியாய் விளையாடிக் திரியும் ஒரு சிறு குழந்தையைப் பார்ப்பது போல் பார்த்தவர்களும் உண்டு. பற்றற்ற நிலையை நிர்வாணம் என்று கூறுகிறது பௌத்தம். அந்த நிர்வாணத்திலும் முழு நிர்வாணமாகக் காட்சி அளித்தவர்கள் நம் மௌனகுரு சுவாமிகள்.

இவ்வாறிருக்கும் சமயத்தில் சுவாமிகள் சிலகாலம் கோனூரிலும், சில தினங்கள் வெல்லம்பட்டியிலும் திரிந்துள்ளார்கள் இதைக் கண்ணுற்ற கசவைப் பெரியோர்கள், சுவாமியை ஊருக்கே அழைத்து வந்துவிட்டார்கள். ஊருக்கு அழைத்து வந்து, நீராடச் செய்து அவருக்கு ஆடை அணிவித்திருக்கிறார்கள். சிறிது நேரத்தில் அதை சுவாமியவர்கள் கந்தல் கந்தலாக கிழித்து எறிந்துள்ளார்கள்.

இவ்வாறு பலமுறை செய்தும் பலனளிக்காமல் போகவே, அவரைப் பிறவிக்கோலத்துடனேயே விட்டுவிட்டனர். சுவாமியவர்கள் பிறவிக்கோலத்துடன் இருப்பது கண்டு மக்கள் கூச்சமோ, அருவருப்போ அடைந்தது கிடையாது, மாறாகத் தெய்வப் பிறவியாக அவதார புருஷராக ஏற்கத் தொடங்கினார்.

அடிக்கடி வேறு ஊர்களுக்குச் சென்று விடுவார்கள். பிறகு ஊர்க்காரர்கள் சென்று அழைத்து வருவார்கள். சில சமயங்களில் அவர்கள் பாஷையில் முணுமுணுத்துக் கொண்டிருப்பார். பக்தர்கள் கொண்டுவரும் அன்ன ஆகாரத்தைச் சிறது எடுத்துக் கொண்டு பின்பு அவர்கள் கொடுக்கும் சிகரெட்டைப் பற்ற வைத்துவிட்டால், குடித்துக் கொண்டே, உட்கார்ந்திருக்குமிடத்தில் குச்சிளைப் பொறுக்கிக் கிறுக்கிக் கொண்டே இருப்பார்கள்.

தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு அருள் வழங்குவதில் சுவாமிகள் ஒரு வினோதமான முறையைக் கையாண்டார்கள். கையை உயாத்தியோ அல்லது தலையைத் தொட்டோ அவர்கள் ஆசிவழங்கியதில்லை. அருள் புரிந்ததில்லை. கையால் அறைந்தும், காலால் உதைத்தும், அடிப்பது போல் அணைத்தும், வெறுப்பது போல் காட்டி அன்பு செலுத்தியும் திட்டுவது போல் திட்டி ஆசீர்வதித்தும் அருள்புந்தார்கள்.

சுவாமிகளிடம் அடியும், உதையும் பெற்றவாகள் அவற்றின் உட்பொருளை அப்போது உணர்ந்தார்களோ இல்லையோ தெரியாது, ஆனால் பிற்காலத்தில் அவற்றால் பெரும்பேறு பெற்றதாக உணர்ந்தார்கள்.

எல்லையற்ற பரம்பொருளின ஈடு இணையற்ற வெளிப்பாடாகவும், நம்பிக்கைக்கும், பலத்திற்கும் கலங்கரை விளக்காகவும், அருளுக்கும், கருணைக்கும் ஊற்றாகவும், அமைதி, ஆனந்தம் ஆகியவற்றின் வடிவாகவும் எழுந்தருளியிருந்த இந்த மகாபுருஷர் தன்னுடைய மானிட லீலையை முடித்துக் கொண்டு துந்துபி வருடம், ஐப்பசி மாதம் 5 ஆம் நாள் (22.10.1982) வெள்ளிக்கிழமை மூல நட்சத்திரத்தில், அதிகாலையில் தனது பரிபூரண பிரம்ம நிலைக்கு மீண்டார்கள்.

சுவாமியவர்கள் மகாசமாதி அடைந்து மறுநாள் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை தனது ஆன்ம ஒளியை உடலிலிருந்து பிரிக்காமலேயே பிரகாசித்திருந்தார்கள். மறுநாள் ஐப்பசி மாதம் ஆறாம் நாள் (23-10-1982) சனிக்கிழமை சமாதி வைக்கும் நேரத்தில் அதுவரை வெளிர்ந்திருந்த வெண்மேகக் கூட்டங்கள், சுருண்டு திரண்டு, அந்தக் குறிப்பிட்ட எல்லையில் மட்டும் முக்கோடி தேவர்கள் பூமாரி பொழிந்தது போல், கனமழை பெய்தது.

அந்த நெடுமாலின் வாகனம் (கருடன்) மும்முறை வட்டமிட்டு வலம் வர, ஆன்ம ஜோதி அருள் ஜோதியாகப் பக்தர்களுக்குப் பிரகாசிக்க, சுவாமியவர்களின் திருமேனி, சுவாமிகளுக்காக அமைக்கப்பட்ட குகைக்கோயிலில் முறைப்படி வைக்கப்பட்டு, வேத முறைப்படி சகல அபிஷேங்களும் செய்யப்பட்டு, கற்பூரம், விபூதி, சந்தனம், பன்னீர் ஜவ்வாது மற்றுமுள்ள வாசனைத் திரவியங்களால் நிறைவு செய்யப்பட்டது.