சைவ ஹோட்டல் தெரியும், சைவ நகரம் தெரியுமா?

மனித இனம் உருவான ஆரம்ப காலத்தில், மனிதன் காடுகளில் விலங்குகளை வேட்டையாடி அதை தன் உணவாக உண்டு வாழ்ந்தான்.


பிறகு ஒருகட்டத்தில் தானியங்களை விளைவித்து அதை உன்ன துவங்கினான். பிற உயிரினங்களை அழிப்பது பாவம் என்பது உணர்ந்து, ஒரு சிலர் அசைவத்தை முழுமையாக தவிர்க்க துவங்கினர். அப்படி சிறு எறும்புகள் கூட தங்களால் மாண்டுவிட கூடாது என்னும் எண்ணம் கொண்ட பலர் இன்றும் ஜெயின் சமூகத்தில் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வசிக்கும் ஒரு நகரம் தான் பாலிடானா. இந்தியாவில் உள்ள இந்த நகரத்தில் மட்டும் அசைவம் என்பது கிடையாது.

குஜராத் மாநிலத்தின் பாலிடானா நகரம் முதலில் எல்லா ஊர்களையும் போல சாதாரண நகரமாகத்தான் இருந்தது. 200 இறைச்சிக் கடைகள் இருந்தன. கடந்த 2014 ஆம் ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்ட சமணத் துறவிகள் உண்ணா நோன்பை துவக்கினார்கள். கொல்லப்படும் ஒவ்வொரு உயிருக்குப் பதிலாக ஒரு துறவி உயிர் துறப்பார் என்று அறிவித்தார்கள். பல கட்ட ஆலோசனைக்கு பிறகு, ஜெயின் துறவிகளின் போராட்டத்திற்கு செவி சாய்த்த அரசு, அந்த நகரத்தில் எந்த விலங்குகளையும் கொள்ளக்கூடாது என சட்டம் இயற்றியது. அதனை தொடர்ந்து அங்கு இருந்த 200கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் மூடப்பட்டன. இந்தியாவில் மட்டும் அல்ல, உலக அளவிலும் இதுவே சுத்த சைவமாக அறிவிக்கப்பட்ட முதல் நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊருக்கு ஒரு கோவில் இருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த ஊரே கோவில் தான். இங்கு கிட்டத்தட்ட 900 கோவில்கள் உள்ளன. இதனால் இந்த நகரத்தை கோயில்கள் நகரம் என்றும் அழைக்கின்றனர். பார்க்கவும், கேட்கவும் வியப்பாக உள்ள இந்த நகரத்தைக் காண பல்வேறு சுற்றுலா பயணிகள் பாலிடானா நகரத்தை நோக்கி வர ஆரம்பித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து வாரணாசி, புஷ்கரம் ஆகிய நகரங்களும் 100% சைவ நகரங்களாக ஆக்கப்படும் என்று தெரிகிறது.