காதலர்கள் திருமணம் செய்யும்போது ஜாதகப் பொருத்தம் பார்க்க வேண்டுமா? திருமணப் பொருத்தம் இல்லை என்றால் என்ன செய்யவேண்டும்?

இந்து மதத்தில் திருமணத்தின் போது ஆண், பெண் இருவருக்கும் அவர்கள் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது.


இவற்றில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இல்லையென்றால் ஜாதகப் பொருத்தமில்லை என்று அந்தத் திருமணம் தவிர்க்கப்படுகிறது. சிலர் ஜாதகப் பொருத்தம் இல்லாததால் காதலர்களை பிரிக்கின்றனர். 

திருமணம் என்பது இரு மனங்களின் சேர்க்கையாகும். திருமணப் பொருத்தம் பார்க்கும்போது முக்கியமாகப் பார்க்கவேண்டியது மனப் பொருத்தம். அதாவது ஒருவரை ஒருவர் விரும்புகிறார்களா என்பதைத்தான் முதலில் பார்க்கவேண்டும். பத்து பொருத்தங்கள் இருந்தாலும் மனப் பொருத்தம் இல்லை என்றால், திருமணத்தின் மூலம் அவர்களை இணைப்பது துன்பம் தருவதாக அமைவதுடன் பாவமும் ஆகும். அதைவிட பாவம், மனமொத்த காதலர்களை, ஜாதகம் பொருந்தவில்லை என்று சொல்லி பிரிப்பது. 

நவகிரகங்களில் குருபகவான் முழுமையான சுபகிரகம் ஆவார். அவர் ஒரு ராசியில் இருக்கும்போது கொடுக்கும் பலன்களை விடவும், அவர் பார்க்கும் இடங்களுக்கு மேலும் சிறப்பான பலன்களைத் தருவார்.  பிள்ளை அல்லது பெண்ணின் ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் இருந்தாலும், ஜாதகப் பொருத்தம் இல்லையென்றாலும் அவர்களுக்கு தாராளமாக திருமணம் செய்து வைக்கலாம்.

அதாவது திருமணத்தின்போது முக்கியச் சடங்கு திருமாங்கல்யதாரணம். மணப்பெண்ணின் கழுத்தில் மணமகன் திருமாங்கல்யதாரணம் செய்யும் லக்னத்துக்கு குருபகவானின் பார்வை இருந்தால் போதும். எல்லா தோஷங்களும் நீங்கி, அந்தத் தம்பதியர் மன மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். 

அதனால் காதலர்களுக்கு திருமணப்பொருத்தம் இல்லையென்று பிரிக்க தேவையில்லை.