தங்க கோபுரம் பார்த்திருப்பீங்க, தங்க காசு பிரசாதமாக தரும் கோயில் எங்கே இருக்குன்னு தெரியுமா?

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்வார்கள். நம் வாழ்க்கையில் இறை வழிபாடு முக்கிய பங்கு வகிக்கிறது.


கோயிலுக்கு எதுக்கு போகிறோம். நம் கவலைகளை மறந்து, நமக்கு தேவையானவை இறைவனிடம் வேண்டி முறையிட்டு பிரார்த்தனை செய்து விட்டு வருவோம். சில கோயில்களில் பிரசாதமாக திருநீறு, பூக்கள், அம்மன் கோவிலாக இருந்தால், மஞ்சள், குங்குமம் ஆகியவையும் கொடுப்பார்கள். பெருமாள் கோவிலில் துளசியை பிரசாதமாகக் கொடுப்பார்கள். அதைத்தாண்டி, சாப்பிடுவதற்கான கொடுக்கப்படும் பிரசாதங்களும் உண்டு. அதாவது லட்டு, புளியோதரை, லெமன் சாதம், பொங்கல், பருப்பு கூழ், சுண்டல் இப்படி கொடுப்பார்கள்.

தங்க கோபுரம் பார்த்து இருக்கிறோம், தங்க கோவில் கூட பார்த்து இருக்கிறோம். ஆனால் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு, தங்க காசுகளையே பிரசாதமாக கொடுக்கும் ஒருகோவில் இந்தியாவில் உள்ளது.

இந்த அற்புதமான கோயில் மகாராஷ்டிர மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் ரத்லம் என்னும் ரத்னபுரி பகுதியில் தான் இருக்கிறது. இந்த ரத்னபுரி கோவிலுக்குள் உறைந்திருக்கும் கடவுள் நமக்கு வளங்களை அள்ளித் தருகின்ற லட்சுமி தேவி.

வறுமை போக்க வெறுமனே இங்கு வருபவர்களுக்கு பக்திக்காக மட்டும் தங்கம் பிரசாதமாகக் கொடுப்பது இல்லை. இங்கு வருகுின்ற ஏழைகள், தங்களுடைய வறுமையைப் போக்கிக் கொள்வதற்காகவே தங்கக் காசுகள் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன.

காணிக்கையாக இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள், குறிப்பாக வசதி படைத்தவர்கள் தாங்கள் செலுத்துகின்ற காணிக்கையைப் பணமாகச் செலுத்துவதில்லை. காணிக்கை செலுத்த நினைப்பவர்கள் தங்களால் இயன்ற அளவு தங்கம் அல்லது வெள்ளியை காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.

பக்தர்கள் கொடுக்கும் தங்க காசுகள் குவியல் போல் குவித்து வைத்து இருப்பார்கள். இந்த மலை போல குவிக்கப்படும் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை, வருடத்தின் முக்கியப் பண்டிகையாக இந்தியாவில் கொண்டாடப்படுகிற தீபாவளியன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக அந்த தங்கம் மற்றும் வெள்ளி கொடுக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டு தீபாவளியன்று மட்டும் தான் தங்கம் பிரசாதமாக வழங்கப்படும். தினமும் வழங்கப்படும் வழக்கம் இங்கு கிடையாது. இங்கு பிரசாதமாக தங்கம் கிடைத்துவிட்டால், வாழ்க்கையில் பணக்கஷ்டம், வறுமை என அத்தனையும் தீர்ந்து மகாலட்சுமியே தங்களுடைய வீடுகளுக்குள் நுழைவதாகவே பக்தர்கள் கருதுகிறார்கள்.

இந்த தங்கக் காசை இறைவனின் அருளாக பாவிப்பதால், அதை யாரிடமும் கொடுப்பதோ விற்பதோ கிடையாது.