தினகரன் வேட்பாளர் அறிவிப்பில் மர்மம்! கொந்தளிக்கும் தங்கதமிழ்செல்வன்!!

எல்லோருக்கும் முன்பாக ஜெயலலிதா பாணியில் வேட்பாளர் பட்டியல் அறிவித்துவிட்டார் தினகரன். முதல் பட்டியலில் உள்ள எல்லோருமே பணம் படைத்தவர்கள், பணம் கொடுத்தவர்கள் என்று பேச்சு கிளம்பியுள்ளது. மீதமுள்ள 9 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை அறிவிக்காதது பெரும் புகைச்சலைக் கிளப்பியுள்ளது.


அ.ம.மு.க.வின் இரண்டாவது ஆண்டு விழாவை முடித்த கையோடு வேட்பாளர் தேர்வில் அமர்ந்தார் தினகரன். முதல் சுற்றில் பணம் படைத்தவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். திருச்சி சாருபாலா தொண்டமான், தென் சென்னை இசக்கி சுப்பையா, சேலம் எஸ்.கே.செல்வம், தஞ்சை முருகேசன், சிவகங்கை பாண்டி போன்ற பெரும்பாலோர் பணம் படைத்தவர்கள். கொடுக்கவேண்டியதைக் கொடுத்து வாங்கவேண்டியதை வாங்கியதாகச் சொல்கிறார்கள். இவர்களுக்குத் தேவை அங்கீகாரம் மட்டுமே என்பதால் கொட்டிக்கொடுக்க தயாராக இருந்தவர்களாம்.

மதுரைக்கு காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை அறிவிக்கப்பட்டதற்குக் காரணம் தங்கதமிழ்செல்வன் என்கிறார்கள். ஏனென்றால்,  மதுரை எம்.பி. தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் நிற்க தன்னுடைய விருப்பத்தை தினகானிடம் தெரிவித்து இருந்தாராம் தங்கம். அதனை கேட்டுக்கொண்ட தினகரன், எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தாராம்

அதனால்தான் ஆண்டு விழா உள்ளிட்ட எந்த விழாவுக்கும் தங்கதமிழ்செல்வன் சென்னைக்கு வரவில்லை. இந்த நிலையில் தங்கதமிழ்செல்வனுக்கு எரிச்சல் கிளப்புவது போன்று இன்றைய பட்டியலில் மதுரை இடம்பெற்றுவிட்டது.

தினகரனுக்காகத்தான் 18 பேரும் எம்.எல்.ஏ. பதவியை இழந்தார்கள். ஆனால், 9 பேரை மட்டும் முதல் பட்டியலில் அறிவித்துவிட்டு, மற்றவர்களை விட்டுவைத்ததும் கட்சிக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பணம் கேட்டு தினகரனிடம் கோரிக்கை வைத்த காரணத்தால்தான் அவர்கள் பெயர் அறிவிக்கப்படவில்லை என்று கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். அவர்கள் பணம் செலவழிக்கத் தயாராக இல்லை என்றால் மாற்று வேட்பாளர்களை அறிவிக்கவும் தினகரன் தயாராக இருக்கிறாராம்.

அப்படிப் போடு!