ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் ஏழாம் எண்ணுக்கும் உள்ள தொடர்பு என்ன தெரியுமா?

ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களைக் கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவில்.


பெரிய கோவில், பெரிய பெருமாள், பெரிய பிராட்டியார், பெரிய கருடன், பெரியவசரம், பெரிய திருமதில், பெரிய கோபுரம் என்று அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஸ்ரீதேவி, பூதேவி, துலுக்க நாச்சியார், சேரகுலவல்லி நாச்சியார், கமலவல்லி நாச்சியார், கோதை நாச்சியார் மற்றும் ரெங்க நாச்சியார் என ஏழு நாச்சிபார்கள்.

ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். வருடத்திற்கு ஏழு முறை நம் பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார். ஸ்ரீரங்கம் கோயில் உற்சவத்தில் 7ம் திருநாளன்று வருடத்துக்கு ஏழு முறை நம்பெருமாள் நெல்லளவை கண்டருளுவார்.

தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் அரங்கன் திருமஞ்சனம் காண, தங்க குடத்தில் காவிரி புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும். ஸ்ரீ ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் 7வது அவதாரமாகும்.

ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் கோடை உற்சவம், வசந்த உற்சவம், ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை, நவராத்திரி, ஊஞ்சல் உற்சவம், அத்யயனோத்ஸவம், பங்குனி உத்திரம் என வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும். 12 ஆழ்வார்களும் ஏழு சந்நிதிகளில் எழுந்தருளியிருக்கிறார். இராப் பத்து ஏழாம் திருநாளில் நம்மாழ்வார் பராங்குச நாயகி திருக்கோலத்தில் சேவை சாதிப்பார்.

பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள தென்திசையில் நாழி கேட்டான் கோபுரம், ஆர்யபடாள் கோபுரம், கார்த்திகை கோபுரம், ரெங்கா ரெங்கா கோபுரம், தெற்கு கட்டை கோபுரம் 1, தெற்கு கட்டை கோபுரம் 2, மற்றும் ராஜகோபுரம் என 7 கோபுரங்கள் உள்ளன.

திருக்கோயிலில் உள்ள ஏழு பிரகாரங்களிலும் பெருமாளின் 7 திருவடிகள் உள்ளன. ஏழு பிரகாரங்களிலும் ஏழு திருமதில்கள் அமையப்பெற்றுள்ளன. திருக்கோயில் வளாகத்தில் ஏழு ஆச்சார்யர்களுக்கு தனி சன்னதிகள் உள்ளன. அவை ராமானுஜர், பிள்ளை லோகாச்சாரியார், திருக்கச்சி நம்பி, கூரத்தாழ்வான், வேதாந்த தேசிகர், நாதமுனி, பெரியவாச்சான் பிள்ளை சன்னிதிகள்.

ஒவ்வொரு வருடமும் சந்திர புஷ்கரிணியில் 6 முறையும் கொள்ளிடத்தில் ஒரு முறையுமாக ஏழு முறை சின்ன பெருமாள் தீர்த்தவாரி கண்டருளுவார். மாசி மாதம் நடைபெறும் திருவிழாவில் நம்பெருமாள் ஏழு வாகனங்களில் உலா வருவார்.

தசமூர்த்தி, நெய் கிணறு, மூன்று தாயார்கள் ஒரே சன்னதியில் அருள்பாலிப்பது, 21 கோபுரங்கள், நெற்களஞ்சியம், தன்வந்திரி, நான்கு திசைகளிலும் ராமர் சன்னதி ஆகிய அம்சங்கள் மற்ற கோவில்களில் காண முடியாதவை.