சென்னையில் சாஸ்திரப்படி கட்டப்பட்ட ஒரே ஜெயின் கோயில் எது என்று தெரியுமா?

ஸ்ரீ ஜெயின் சங்க், மாம்பலம் என்ற இந்த ஜெயின் கோயில் 1979 ஆம் வருடம் கட்டப்பட்டது.


பதினாறாவது ஜெயின் தீர்த்தங்கரரான ஸ்ரீ ஷாந்திநாத் பகவானே இங்கு பிரதான கடவுள். பாஷுநாத் பகவான் மற்றும் ஆதிநாத் பகவான் ஆகியோரின் சன்னதிகளும் இந்த கோவிலில் உண்டு.

ஜெயினர்களில் உருவ வழிபாடு செய்பவர்கள், அருவத்தை வணங்குபவர்கள் என்று உண்டு. அவர்கள் ஸ்வேதம்பரர்கள், திகம்பரர்கள் எனப்படுவார்கள். திகம்பர வகுப்பை சேர்ந்தவர்கள்தாம் ஆடையை துறந்தவர்கள். அவர்களுக்கு உண்ணாவிரதம் உயரிய வழிபாட்டு முறை.

ஜெயின் மதம் என்பது ஆதிநாத் என்று அழைக்கப்படும் ரிஷப நாதர் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. ஜெயின் மத குருக்கள் தீர்த்தங்கரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர் 24வது தீர்த்தங்கரரான மகாவீரர் ஜெயின் மதத்தில் மிக முக்கியமான குரு ஆவார்.

மொத்தமும் பளிங்கு கற்களால் ஆன இந்த கோயில் சென்னைக்கு மத்தியில் குளுமைக்கான இடமாகத் திகழ்கிறது. இந்த கோயில் மந்திர் மார்கி என்னும் உருவ வழிபாடு செய்யும் ஜெயினர்களுக்கான கோயிலாம். சென்னையில் நிறைய ஜெயின் கோயில்கள் இருக்கின்றன.

இந்த ஸ்ரீ ஷாந்திநாத் ஸ்வேதம்பர் ஜெயின் கோயிலின் சிறப்பு அம்சம், இதுதான் சென்னையில் முதல் ஷிக்கர் பந்தி என்று அழைக்கப்படும் கோபுரம் உள்ள ஜெயின் கோயில்.

மண்ணுக்கு அடியில் நீர்மட்டம் எத்தனை ஆழத்தில் இருக்கிறதோ அத்தனை ஆழத்திலிருந்து அஸ்திவாரம் எழுப்பப்பட்டு இந்த கோபுரம் கட்டப்பட்டிருக்கிறது. சென்னையில் ஜெயின் மத சாஸ்திரங்களின் அடிப்படையில் கட்டப்பட்ட கோபுரம் கொண்ட முதல் ஜெயின் கோயில் இதுதான். ஆரம்ப காலத்தில் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த கோயிலாகவே இருந்திருக்கிறது.

பின்னர்தான் ஆலயமாக மாறியிருக்கிறது. ஜெயின் மத கோவில்களில் பக்தர்கள் கர்ப்பகிரகத்தில் இருக்கும் சிலைகளை தொட்டு, அங்கே வைக்கப்பட்டிருக்கும் சந்தனக் கலவையைப் பூசி வழிபடுகிறார்கள். பக்தர்களே தூபம் காட்டலாம், ஆரத்தி எடுக்கலாம். பக்தர்களே சாமரம் வீசி ஷோடஸோபசாரம் செய்யலாம். சன்னிதி முழுக்க சந்தன மணமும் தூப வாசமும் நிறைந்து மனதுக்கு நிம்மதி அளிக்கிறது. சத்தமில்லாமல் பக்தர்கள் மனதுக்குள்ளேயே பிரார்த்தனை செய்கிறார்கள்.

ஜெயினர்களுக்கு முக்கியமான நூல் கல்ப சூத்திரம். அது அவர்களது மதகுருமார்களால் அருளப்பட்டது. கல்ப சூத்திரம் சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்டிருக்கிறது. சமண சமயத்துக்கும் நமது சனாதன தர்மத்திற்கும் நிறைய பொருதங்கள் உண்டு. கர்மவினையை நம்பும் வழக்கமும் ஜெயின் மதத்தில் உண்டு.

பரதன் என்னும் அரசன் ஆண்டது நம் பாரத நாடு என்னும் இந்து மதக் கொள்கையைப் போன்று சமண சமயத்திலும் உண்டு. சமண சமயத்தை ஆண்டு வந்த பரதன் என்னும் மன்னனின் தம்பி பாகுபலி, பரதராஜ்ஜியத்தை வீழ்த்தி, சகோதரன் நினைவாக பாரதம் என்று பெயரிட்டதாக வரலாறு உண்டு.

ஜெயின் கோயில்களில் தேங்காய் உடைப்பது இல்லை. முழு தேங்காயை இறைவனுக்கு வழங்குகிறார்கள். மேலும் பிரசாதம் என்று எதுவும் வழங்கப்படுவதில்லை. இறைவனுக்கு என்று அளிக்கப்படும் எல்லாமே பூஜை செய்பவர்களுக்கு சேரும் என்பது அவர்கள் சாஸ்திரம்.

கோயிலின் முகப்பில் யானைகள் பிளிறியபடி வரவேற்கும் அழகான அமைப்பு இருக்கிறது. அதைத் தாண்டி நுழைந்தவுடன் ஸ்ரீ ஷாந்திநாத் பகவானின் சன்னிதி இருக்கிறது. அருகிலேயே மகாவீரர் சிலையும் சரஸ்வதி சிலையும் இருக்கின்றன. ஜெயின் மதத்திலும் மந்திரங்கள் சமஸ்கிருதத்தில்தான் சொல்லப்படுகின்றன.

அழகிய தோரணங்கள் வாசலில் பக்தர்களை வரவேற்கின்றன. முதல் மாடியில் பாஷுநாத் பகவான் சன்னிதி அமைந்திருக்கிறது. பக்தர்கள் மௌனமாக ஜெபம் செய்ய அருகிலேயே மண்டபம் இருக்கிறது. பெரும் கூட்டம் நிறைந்த கோவில்களுக்கு மத்தியில் ஜெயின் கோவில்கள் அமைதியின் அடையாளமாக விளங்குகின்றன.