வானில் வட்டமிடும் கருட பகவானை வணங்கலாமா? தோஷங்கள் தீர்க்கும் கருட பகவான்!

காக்கும் கடவுள் என்று போற்றப்படுபவர் மகாவிஷ்ணு. இவருடைய வாகனமாக இருப்பவர் கருடன்.

இவர் 'பெரிய திருவடி" என்றும் புகழப்படுகிறார். வானத்தில் வட்டமிடும் கருடனை கண்டு தரிசிப்பவர்களுக்கு, அவர்களை பிடித்த தோஷங்கள் அனைத்தும் அகலுவதாக ஐதீகம். கருட பகவான் அனைத்து பெருமாள் கோவில்களிலும் பெரிய திருவடியாக வீற்றிருக்கிறார்.

மற்ற தெய்வங்களுக்கும் சிறப்பு வழிபாடு இருப்பதுபோல் கருட பகவானுக்கும் சிறப்பு வழிபாடுகள் உண்டு. இதை பக்தர்கள் அனைவரும் சிரத்தையோடு கடைபிடித்து ஸ்ரீ கருட பகவானின் அருளாசிக்கு பாத்திரமாக வேண்டும்.

ஆர்வம் நிறைந்த ஆழ்ந்த பக்தியுடன் கருடனை வழிபட்டால், வழிபாட்டின் முடிவில் கருட தரிசனம் கிடைப்பது உறுதியாகும். கருட தரிசனம் கிடைத்தால் விரதத்தை உடனே முடித்துக்கொண்டு உணவருந்தலாம்.

ஏழரைச் சனி, அஷ்டமச் சனி போன்ற பாதிப்புகளில் இருந்தும் தற்காத்துக் கொள்ள கருட பகவானின் விரத வழிபாடு நமக்கு கைகொடுக்கிறது. நவகிரகங்களினால் ஏற்படும் அனைத்து விதமான தோஷங்களையும் விலக்குபவராகவும் கருடன் திகழ்கிறார்.

இவரை எந்த திதிகளில் வழிபட்டால் என்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை இங்கே பார்க்கலாம்.

வளர்பிறை பிரதமை : கண் திருஷ்டி, செய்வினை தோஷங்கள் அகலும்.

தேய்பிறை பிரதமை : வறுமை நீங்கி, குபேர சம்பத்து ஏற்படும்.

வளர்பிறை திருதியை : சந்திரனால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும்.

வளர்பிறை சஷ்டி : செவ்வாய் தோஷம் அகலும்.

வளர்பிறை சப்தமி : சூரிய பகவானால் உண்டான தோஷங்கள் நீங்கும்.

வளர்பிறை சதுர்த்தி : விநாயகப் பெருமானின் அருள் முழுமையாக கிடைக்கும்.

வளர்பிறை நவமி : கல்வி ஞானம், தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.

தேய்பிறை நவமி : மரண பயம் நீங்கும்.

தேய்பிறை தசமி : குரு தோஷம் விலகும், புத்திர பாக்கியம் கிடைக்கும்.

வளர்பிறை துவாதசி : புதன் தோஷம் விலகும். அறிவாற்றல் பெருகும்.

தேய்பிறை துவாதசி : மகாவிஷ்ணுவின் நெஞ்சில் குடியிருக்கும் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.

அமாவாசை : ஆண் குழந்தை பிறக்கும் வரம் கிடைக்கும்.

பௌர்ணமி : மகாலட்சுமியின் அம்சமான பெண் வாரிசு பிறக்கும் யோகம் வாய்க்கும்.

வானத்தில் வட்டமிடும் கருடனை நாம் அனைத்து நேரங்களிலும் காண இயலாது. எனவே வைணவத் தலங்களில் அருளும் கருடாழ்வாரை வணங்கி, அவருக்கு துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்யலாம். நாம் வெளியில் செல்லும்போது கருட பகவான் வலமிருந்து இடம் போனால் எடுத்த காரியத்தில் வெற்றி உண்டு. இடமிருந்து வலம் போனால் வருத்தம் உண்டாகும்.

கருடன் வட்டமிடுவது நலத்தையும், நன்மைகளையும் கொடுக்கும். கருடன் இரையை கவ்வியபடி வலமிருந்து இடம் போனால் ஆதாயம், வெற்றி உண்டாகும். அத்துடன் பகைகள் அழியும். கருடனை நாம் எந்தத் திசையில் காண்கிறோமோ அந்தத் திசையில் இருந்து லாபம் ஏற்படும்.