தூய்மை பணியாளர்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லை! ஆனால், அவர்கள் பெயரில் அதிகாரிகள் கொள்ளை!

தமிழகம் முழுவதும் தூய்மை பணியாளர்களுக்கு எங்கேயும், எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படுவதில்லை. ஆனால், அவர்கள் பெயரில் அதிகாரிகள் கொள்ளை அடிப்பதுதான் நடந்துகொண்டே இருக்கிறது.


சென்னை மாநகராட்சி பிரகாஷ் அப்பட்டமாக பொய் கூறுகிறார் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அதாவது, தூய்மை பணியாளர்களை அழைத்துச் செல்ல 95 பேருந்துகள் பயன்படுத்தப்படுகிறது என்றும் மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு காலையும் மாலையும் சத்துணவு வழங்கப்படுகிறது என்றும் பிரகாஷ் கூறியிருக்கிறார். 

இதுதவிர, தூய்மை பணியாளர்களுக்கு தினமும் முகக்கவசம் வழங்கப்பட்டு வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இவை எல்லாம் மாதம் ஒரு நாள் நடப்பதே பெரிது என்கிறார்கள் தூய்மை பணியாளர்கள். 

உண்மையில், பெரும்பான்மையான தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசமோ, கையுறையாக வழங்கப்படவில்லை, அதுபோல பேருந்து வசதிகளும் செய்து தரப்படவில்லை. எங்கேயும் உணவுக்கு எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. கை காசை போட்டுத்தான் சாப்பிடும் நிலை இருக்கிறது.

தூய்மைப் பணியாளர்கள் இல்லை என்றால், அவர்களுக்கு தொற்று ஏற்பட்டுவிட்டால், தமிழகம் எத்தனை கொடுமையை எதிர்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து, இனியாவது அவர்கள் மீது இரக்கம் காட்ட வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.