காங்கேயன், கடம்பன் என்று முருகப்பெருமானை அழைப்பது ஏன்..? முருகன் பெயர்களுக்கான விளக்கம் இதோ...

முருகனுக்கு கந்தன், குமரன், வேலன், சரவணபவன், ஆறுமுகம், விசாகன், குருநாதன் என்று எத்தனையோ பெயர்கள் இருக்கிறது. முருகனுக்கு மட்டும் ஏன் இத்தனை பெயர்கள் வந்தது என்றும், ஒவ்வொரு பெயருக்கும் என்ன காரணங்கள் என்றும் இப்போது பார்க்கலாம்.


முருகன் : முருகு என்றால் அழகு என்பார்கள். இந்த சொல்லுக்கு இளமை, அழகு, மணம், கடவுள் தன்மை, தேன் என்று பல பொருள்களும் இருக்கிறது. ஆதலால் முருகன் மாறாத இளமையும், அழியாத அழகும், குறையாத நறுமணமும் நிறைந்த தெய்வத்தன்மையும், இனிமையும் உடையவன் என்று பொருள் கொள்ளப்படுகிறது.

சரவணபவன் : சரவணபவ என்கிற ஆறு அட்சரத்தையுடையவன். சரவணபவன் என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் என்றும் பொருள்படும். ச என்றால் மங்களம், ர என்றால் ஒளி கொடை, வ என்றால் சாத்வீகம், ண என்றால் போர், பவன் என்றால் உதித்தவன் என்கிற பொருளில் மங்களம், ஒளிக்கொடை, சாத்வீகம், வீரம் போன்ற சிறப்பியல்புகளுடன் தோன்றியவன் என்றும் கூறுவர்.

ஆறுமுகம் : சிவபெருமானுக்குள் உள்ள ஐந்து முகங்களுடன், அதாவது ஒரு முக லிங்கத்தில் இருந்து ஐந்து முக லிங்கங்கள் வரை உடையவை ஆகும். ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு திசையைப் பார்த்துக் கொண்டு இருக்கும். ஆறாவது முகம் அதோ முகம் என்று சொல்லப்படும். அது பாதாளத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கும் எனவும், சக்திகள் அதில் இருந்தே ஆரம்பம் எனவும் சொல்லப்படுகிறது.

இந்த ஆறாவது முகத்தில் இருந்து தான் சிவ ஸ்வரூபம் ஆன சுப்ரமணியர், நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியதாகவும் சொல்லப்படுகிறது. பரம்பொருளான அந்த ஈசனுக்கு ஆறுமுகங்கள் என்றாலும் நம்மால் அறியும் வகையில் இருப்பவை ஐந்து முகங்களே ஆகும். அதனால் தான் சுப்ரமணியருக்கு இறைவனின் சொரூபம் என உணர்த்தும் வகையில் ஆறுமுகங்கள் அமைந்தது எனவும் சொல்லப்படுகிறது. இதனால் தான் சிவபெருமானுக்குள் உள்ள ஐந்து முகங்களுடன் அதோ முகம் சேர்ந்து ஆறுமுகங்கள் ஆனதால் ஆறுமுகம் எனும் பெயர் வந்தது. திரு, புகழ், ஞானம், வைராக்கியம், வீரியம், ஐஸ்வர்யம் என்பவைதான் ஆறுமுகங்கள் என்றும் கூறுவார்கள்.

கந்தன் : கந்து என்றால் நடுவில் இருப்பது. சிவனுக்கும், உமையாளுக்கும் நடுவில் இருப்பதால் கந்தன் என்கிற பெயர் ஏற்பட்டது. கந்தன் என்றால் தோள் என்ற அர்த்தமும் உண்டு. இதற்கு வலிமையுடையவன் என்றும் பொருள்படும்.

குகன்: குறுஞ்சி நிலத்தின் தெய்வமாம் முருகப் பெருமான் மலைக் குகைகளில் கோவில் கொண்டதால் குகன் என்றும் அழைக்கப்படுகிறார். பக்தர்களின் மனகுகையிலும் இவர் வீற்றிருப்பதால் குகன் என்றும் போற்றப்படுகிறார்.

வேலன் : வேலன் என்பது வெற்றியைத் தருகிற வேலைக் கையில் ஏந்தியதால் வந்த பெயர். முருகனுக்கு அடையாளமும் இந்த வேல்தான்.

குமரன்: இளமையை எப்போதும் உடையவன், பிரம்மச்சாரி ஆனவன், மிகவும் உயர்ந்தவன்.

குருபரன்: கு –அஞ்ஞான இருள், ரு – நீக்குபவன், ஆன்மாக்களின் அறியாமை என்ற அஞ்ஞான இருளை அகற்றுபவன். சிவனுக்கும், அகத்தியருக்கும், அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன் குருநாதன்.

காங்கேயன்: கங்கையில் தோன்றியதால் கங்கையின் மைந்தன் காங்கேயன் என்று முருகப் பெருமான் அழைக்கப்படுகிறான்.

கடம்பன்: கடம்ப மலர்களை அணிந்தவன் ஆதலால் கடம்பன் என்று அழைக்கப்படுகிறான்.

சோமஸ்கந்தன்: சிவன் உமை முருகனின் வடிவம் சோமாஸ்கந்தன். உலக நாயகர்களாம் அம்மைக்கும், அப்பனுக்கும் இடையில் முருகன் அமர்ந்த திருக்கோலம். சோமாஸ்கந்தன் ஆனந்தத்தின் வடிவம்.

மயில்வாகனன்: ஆணவத்தின் வடிவமான மயிலினை அடக்கி வாகனமாகக் கொண்டதால் மயில்வாகனன் என்றழைக்கப்படுகிறார். முருகப் பெருமான் ஆணவத்தின் வடிவமான மயிலையும், கன்மத்தின் வடிவமான யானையையும், மாயையின் வடிவமாக ஆட்டினையும் அடக்கி வாகனமாக் கொண்டவர்.

சுப்ரமணியம் : சு என்றால் ஆனந்தம். இன்பமும்... ஒளியும்... வடிவாக உடையவன் என்பது இதன் அர்த்தம். புருவ மத்திய (ஆக்ஞை) ஸ்தானத்தில் ஆறு பட்டையாக உருட்சி மணியாக, பிரகாசம் பொருந்திய ஜோதிமணியாக விளங்குவதால் சுப்ரமணியன் என்று அழைக்கப்பட்டார்.

கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன் என்றும், அப்பெண்களுக்கு வாகுலை என்ற மற்றொரு பெயர் உள்ளதால் வாகுலேயன் என்றும், ஆண்டிக் கோலத்தில் ஞானப்பழமாக விளங்குவதால் பழநி என்றும், தனது அடியவர்களை உற்ற வேளையில் வந்து காக்கும் சிறப்பால் வேலைக்காரன் என்றும் சிவன், சக்தி, திருமால் மூவரையும் இணைக்கும் தெய்வமாக இருப்பதால் மால் முருகன் என்றும் பெயர்கள் வழங்கப்படுகிறது.

தமிழ்கடவுள்: தமிழின் வடிவம் முருகன் ஆவான். தமிழ் மொழியின் 12 உயிரெழுத்துக்களும் முருகப்பெருமானின் 12 தோள்களைக் குறிப்பிடுகின்றன. 18 மெய்எழுத்துக்கள் முருகனின் 18 கண்களைக் குறிக்கின்றன. அதாவது முருகப் பெருமான் சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவர் ஆதலால் இவருக்கும் நெற்றியில் கண் உண்டு. ஆதலால் ஆறு முகங்களிலும் முகத்திற்கு மூன்று வீதம் மொத்தம் 18 கண்களை உடையவர். தமிழின் இனஎழுத்துக்கள் ஆறும் இவருடைய 6 முகங்களைக் குறிக்கின்றன. ஃ என்ற ஆயுத எழுத்து வேலினைக் குறிக்கிறது. இதனால் முருகன் தமிழ்தெய்வம் என்று போற்றப்படுகிறார்