வீட்டில் விளக்கு ஏற்றுவது போன்று ஆலயத்தில் விளக்கு ஏற்றக்கூடாது! ஏன் தெரியுமா?

நாம் தினமும் கடவுளை வணங்கும்போது விளக்கேற்றி வணங்குதல் வேண்டும்.


அவ்வாறு விளக்கேற்றி வழிபாடு செய்வதன் மூலம் தெய்வீகப் பேரொளியும், லட்சுமி கடாட்சமும் ஒன்று சேரும் என்பது ஒரு ஐதீகமாக உள்ளது. அந்தவகையில், கடவுளுக்கு எவ்வாறு விளக்கேற்றி வழிபட வேண்டும்? என்பதை பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

வேதத்தின்படி விளக்கினை கிழக்கு, வடக்கு திசை நோக்கி ஏற்றலாம். மேற்கும், தெற்கும் விளக்கு ஏற்ற சரியான திசை அல்ல. இறந்தவர்களுக்கு கர்மா செய்யும்போது குறிப்பிட்ட அந்த நாட்களில் மட்டும்தான் தெற்கு திசையை நோக்கி விளக்கினை ஏற்ற வேண்டும். மற்றபடி தெற்கு திசையை நோக்கி நம் வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது.

வாசல் தெளித்து கோலமிட்ட பின்புதான் பூஜை அறையில் விளக்கு ஏற்ற வேண்டும். பூஜை அறையில் தீபத்தை ஏற்றி விட்டு, பின்பு அந்த தீபத்திலிருந்து மற்றொரு தீபத்தை ஏற்றிக்கொண்டு அதன்மூலம் வாசலில் உள்ள தீபத்தை ஏற்ற வேண்டும்.

தினந்தோறும் நம் வீட்டில் ஒரு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால் போதுமானது. அம்பாள் அல்லது ஸ்ரீ சக்கரத்தை வீட்டில் வைத்து பூஜை செய்பவர்கள், பூஜை அறையின் வலது புறம் பசு நெய் தீபமும், இடது புறம் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.

பருத்தியால் ஆன பஞ்சுத்திரி அல்லது தாமரை தண்டு திரி கொண்டு வீட்டிலும், கோவில்களிலும் விளக்கு ஏற்றலாம். அதிலும் தாமரை தண்டினாலான திரியில் ஏற்றும் விளக்கிற்கு அதிக பலன் உண்டு. திரியானது ஒன்று, இரண்டு, மூன்று என்ற எந்த கணக்கில் வேண்டுமானாலும் இருக்கலாம். மேலும் தீபம் அணையாமல் எரியும் அளவிற்கு திரியினை போடவேண்டும். அதில் எந்த கட்டுப்பாடும் இல்லை.

சுத்தமான பசு நெய், நல்லெண்ணெய் இவைகளை கொண்டு நம் வீட்டில் விளக்கினை ஏற்றலாம். இதனால் நமக்கு கிடைக்கும் பலன்கள் ஏராளமாக இருக்கும். ஆனால் நெய்யையும், நல்லெண்ணையையும் கலந்து விளக்கினை ஏற்றக்கூடாது. வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பசுநெய், இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்தும் கலந்ததுதான் பஞ்சதீப எண்ணெய். இந்த எண்ணெய்களை தனித்தனியாக கொண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும்.

மாறாக ஐந்து எண்ணெயையும் ஒன்றாக கலந்து கொண்டு விளக்கு ஏற்றுதல் தவறு. ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணெய் கலந்து தீபம் ஏற்றுவது சாஸ்திரப்படி சரியானது அல்ல. கூட்டு எண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் இவற்றில் கட்டாயம் வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது. வேப்ப எண்ணெயை கொண்டு விளக்கு ஏற்றும்போது அதை வீட்டின் நுழைவாயில் மாடத்தில் வைக்க வேண்டுமே தவிர வீட்டிற்குள் வைக்கக்கூடாது.

நம் வீட்டில் சாந்தமான தெய்வங்களை மட்டும் வைத்து வழிபடுகின்றோம். ஆனால் ஆலயங்களில் சாந்தமான தெய்வம், உக்கிரமான தெய்வம் இரண்டையும் சேர்த்து வழிபடுவோம். ஆகையால் விளக்கு ஏற்றுவதில் சிறு வேறுபாடு உள்ளது. ஆலயங்களில் நெய், நல்லெண்ணெய், இலுப்பெண்ணை இவைகளில் விளக்கு ஏற்றலாம்.