இந்த மூன்று பெண்களும் இறைவன் சிவனின் மகள்களா? அபூர்வ ஆன்மிகம்!

சிவ பெருமானுக்கு கணேஷன், முருகன், ஐயப்பன் என மூன்று மகன்கள் இருப்பது அனைவரும் அறிந்தது. பல இடங்களில் வழிபட்டும் வருகிறது. ஆனால் அவரின் மூன்று மகள்கள் பற்றி அந்தளவுக்குப் பெரியளவில் பேசப்படுவதில்லை..


இந்து மதத்தின் மும்மூர்த்திகளாக படைக்கும் கடவுள் பிரம்மா, காக்கும் கடவுள் மகா விஷ்ணு, அழிக்கும் கடவுளாக சிவன் உள்ளார். பரம்பொருளாக இருக்கும் சிவ பெருமான் அழிக்கும் செயலை மட்டும் செய்யாமல், மக்களை காப்பாற்றுதல், அவர்கள் செய்த தவறுகளுக்கான தக்க தண்டனை கொடுத்தல் என மிக முக்கிய செயல்களை செய்கிறார்.  

பரம்பொருளான அவர் குறித்து நாம் அறிந்தது மிகவும் குறைவுதான். அவருக்கு விநாயகர், முருகப்பெருமான், ஐயப்பன் ஆகிய மூன்று மகன்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் அவருக்கு மூன்று மகள்கள் இருப்பதும், அவர்களின் சிறப்பு குறித்து அவ்வளவாக பேசப்படுவதில்லை.  

சிவபெருமானின் மகள்களின் பெயர்கள் அசோக சுந்தரி, ஜோதி மற்றும் வாசுகி. இந்த தகவல் பலருக்கும் தெரியாத ஒன்று. ஆனால் இதற்கான குறிப்புகள் சிவபுராணத்திலும், வேறு சில புராணங்களிலும் உள்ளது. அவற்றின்படி அவர்களின் ஒவ்வொருவரின் பிறப்பிற்கு பின்னாலும் ஒரு சுவாரசியமான கதை உள்ளது. 

அசோக சுந்தரி: சிவன் மற்றும் பார்வதியின் முதல் மகள் அசோக சுந்தரி ஆவார். இவரை பற்றிய விரிவான குறிப்புகள் பத்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அதன்படி பார்வதி தேவி தன் தனிமையை போக்கி கொள்வதற்காகவே அசோக சுந்தரியை உருவாக்கினார். அவரின் பெயர் காரணம் என்னவெனில் தனது சோகத்தை நீக்க உருவாக்கப்பட்டதாலும், மிகவும் அழகாக இருந்ததாலும் அவருக்கு அசோக சுந்தரி என்று பெயர் வைத்தார். 

தனக்கு ஒரு பெண் குழந்தை இல்லையே என ஏங்கிய உமயவளின் சோகத்தை நீக்க பிறந்த அழகி (சுந்தரி) என்பதால் அசோக சுந்தரி என பெயர் வந்ததாகவும் கூறப்படுகின்றது. அசோக சுந்தரியை காளி தெய்வமாகவும் சொல்லப்படுகின்றது. காளி தேவி (அசோக சுந்தரி) சிவபெருமானின் மகள் என அப்பர் சுவாமிகளும், நம்பியாண்டார் நம்பி பாடிய பாடல்களில் கூறப்பட்டுள்ளது. அதே சமயம் கேரளாவில் சிவராத்திரியாகக் காளியை காணும் வழக்கம் இன்றும் உண்டு.  

சிவ பெருமான் விநாயகரின் தலையை கொய்த போது, பயத்தில் அசோக சுந்தரி உப்பு நிறைந்த சாக்கில் ஒழிந்து கொண்டதாகவும், அதனால் அசோக சுந்தரியின் தேகம் திவ்ய உப்பு சுவை கொண்டதாக மாறியதாக கூறப்படுகின்றது. இவர் குஜராத்தில் பெரிய அளவில் அறியப்பட்டு வணங்கப்படுகிறார். ஆனால் இந்தியாவின் வேறு பகுதிகளில் அவ்வளவாக அறியப்படவில்லை.  

ஜோதி: சிவபெருமானின் இரண்டாவது மகள் ஜோதி. அவரின் பெயரே அதன் அர்த்தத்தை விளக்குகிறது அவர் ஒளியின் வடிவம் என்று. இவர் ஒளியின் கடவுளாக அனைத்து கோவில்களிலும் வணங்கப்படுகிறார். ஜோதியின் பிறப்பிற்கு பின் இரண்டு கதைகள் உள்ளது. முதல் கதையில் ஜோதி சிவபெருமானின் ஒளி வட்டத்திலிருந்து பிறந்தார் என்றும்,

அவர் சிவனின் உடல் வழிபாடு எனவும் கூறப்படுகிறது. மற்றொரு கதை பார்வதி தேவியின் நெற்றியிலிருந்து வெளிப்பட்ட ஜோதியிலிருந்து பிறந்ததாகக் கூறப்படுகிறது.  

இந்த ஜோதியை ஜ்வாலாமுகி என்ற பெயரில் தமிழகத்தில் பல கோயில்களில் வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது. வாசுகி: வாசுகி என்பவர் அனைத்து கோவில்களிலும் பாம்புக்கடியை குணமாக்கும் கடவுளாக வணங்கப்படுகிறார். இவர் சிவபெருமானின் மகள் ஆனால் பார்வதியின் மகள் அல்ல.

ஏனெனில் பாம்புகளின் கடவுளான கத்ரு செதுக்கிய சிலையின் மீது சிவபெருமானின் உயிரணுக்கள் விழுந்ததால் வாசுகி பிறந்தார். அதனால்தான் அவர் சிவனின் மகளாகவும், பார்வதியின் மகள் அல்ல எனவும் கூறப்படுகிறது. சிவபெருமான் ஆலகால விஷத்தை குடித்தபோது அவரை காப்பாற்றியது வாசுகிதான். இவருக்கு மானசா என்ற ஒரு பெயரும் உள்ளது. 

இவரின் அதீத கோபத்தால் இவர் தன் தந்தை, சிற்றன்னையான பார்வதி, கணவர் என அனைவராலும் நிராகரிக்கப்பட்டார். இவர் மேற்கு வங்கத்தில் மிகவும் பிரபலமாக வணங்கப்படுகிறார். மேலும் இவர் பார்வதி தேவியை எப்பொழுதும் வெறுத்துக்கொண்டே இருந்தார்.

இவருக்கென்று எந்தவித வடிவமைக்கப்பட்ட உருவமும் இல்லை ஆனால் பாம்பின் வடிவத்தில் வணங்கப்படுகிறார். இவர் பாம்புக்கடி மற்றும் அம்மை நோய்களை குணப்படுத்தக்கூடியவர் என்று அனைவராலும் நம்பப்படுகிறது.