கடல் நீரில் அபிஷேகம் காணும் கடவுள் – நோய் தீர்க்கும் கடவுள் யார் தெரியுமா?

மயிலாப்பூர் சிட்டி சென்டருக்கு எதிர்த் தெருவில் நடந்து செல்லும் தொலைவில் 2500 ஆண்டுகள் பழமையான ஒரு சிவாலயம் இருக்கிறது.


கடலில் நீராடும் மயிலாப்பூர் கிருஷ்ணாம்பேட்டை தீர்த்தபாலீஸ்வரர் தான் அந்த கடவுள். சென்னை மயிலாப்பூரில் பழமை மாறாமல் சுற்றிவர அதே மண் தரையும், பகவானைப் பார்க்க வரும் உங்கள் பாதங்களுக்கு இதம் தருவது போல அடர்த்தியான கம்பீரமாக நின்று நிழல் தரும் வன்னி, பாதாம், வேம்பு, வில்வம், பூவரசு நாகலிங்கம், மா என்று மரங்களின் அணிவகுப்பும் மிகப் பழமையான ஆலயத்திற்கான அடையாளம்.

இந்த தீர்த்தபாலீஸ்வரர் மயிலாப்பூர் கபாலீஸ்வரரை விட பழமையானவர். தீர்த்தவாரி எனப்படும் கடவுளரின் கடல் நீராட்டத்தில் இவருக்குத்தான் முதல் மரியாதை. மயிலாப்பூரில் உள்ள சப்தஸ்தான ஆலயங்களில் இதுவும் ஒன்று. சப்த என்றால் ஏழு. சிவபெருமான் பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்டருளிய ஏழு தலங்களை ஒன்றாக சப்தஸ்தான தலங்கள் என்று சொல்கிறார்கள். அந்த ஏழு சிவன்கள் தீர்த்தபாலீஸ்வரர்,. கபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், காரணீஸ்வரர், விருபாட்சீஸ்வரர், மல்லீஸ்வரர், வாலீஸ்வரர் ஆகியோர் ஆவார்கள்.

மயில் உருவில் வந்து தவம் செய்த பார்வதியை சிவபெருமான் மணம் புரிந்த தலம் மயிலாப்பூர். அந்த திருமணம் எப்படி நடைபெற்றது தெரியுமா?, இந்த லோகம் என்று மட்டுமல்லாமல் இந்திரலோகத்தில் ஆரம்பித்து பாதாள சொர்க்கலோகம், சிவலோகம் என்று எல்லா உலகங்களிலும் இருந்தும் பக்தர்கள் வந்து குவிய கயிலையே அமர்க்களப்பட்டது. பூமாதேவிக்கும் அந்த கல்யாணத்தைப் பார்க்க ஆசை வந்தது. தலைப் பகுதியான வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. பார்த்தார் பரமன், அகத்தியரை அழைத்தார்.. நிலைமை இப்படியே போனால் உலகம் அழிந்துவிடும். நீ உடனே தென்திசை செல்வாயாக, உன் தவ பலத்தால் நிலம் சமநிலை அடையும் என்றார். அகத்தியர் கல்யாணத்தை நான் எப்படிப் பார்க்க முடியும் என்றார். சிவன் உடனே குற்றால பொதிகை மலைக்கு செல்ல இங்கே நடக்கும் திருமணத்தை அங்கேயே நீ பார்க்கலாம் என்றார்.

கல்யாணம் எல்லாம் நல்லபடியாக முடிந்தது. ஆனால் அகத்தியருக்கு தான் அலைச்சலில் காரணமாக உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. எல்லாவற்றிற்கும் காரணம் சிவன்தான் என்பதால் அவரிடம் நியாயம் கேட்டார். கவலை வேண்டாம் அகத்தியா, அங்கேயே தென்திசையில் கடற்கரையில் ஒரு லிங்கத்தை நிறுவி தினமும் கடலில் நீராடி என்னையும் கடல்நீரில் நீராட்டு, எல்லாம் நலமாகும் என்றார் ஈசன். தன்னால் ஒரு சிவாலயம் எழுப்ப வேண்டும் என்பதற்காகவே இறைவன் தனக்கு நோயை கொடுத்து சோதிக்கிறான் என்பது புரிந்தது அகத்தியருக்கு. உடனே கடலில் நீராடினார், சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து அதற்கு அபிஷேகம் செய்து வழிபட்டார். 48 நாட்களில் அகத்தியர் பூரண நலம் பெற்றார். அவ்வாறு அகத்தியரால் நிறுவப்பட்டு அவரால் பூஜிக்கப்பட்ட நோய் தீர்க்கும் கடவுள் தான் இந்த தீர்த்தபாலீஸ்வரர்.

கடல் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டவர் என்பதால் இந்தப் பெயர் பெற்றார். இப்போதும் விசேஷ தினங்களில் இவருக்கு வங்காளவிரிகுடா கடல் நீரில் அபிஷேகம் நடக்கிறது. கடலுக்கு சென்று நீராடிவிட்டு வந்து சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்து இவரை வணங்கினால் எல்லா நோய்களும் தீரும் என்பது காலம் காலமாக நிலவி வரும் உண்மை. மாசிமகத்தன்று இந்த சப்தஸ்தான சுவாமிகள் உற்சவர்கள் அனைவரும் வரிசையாக கடலுக்கு சென்று தீர்த்தமாடுகிறார்கள். மாசிமகத்தன்று கடலில் நீராட செல்லும் மயிலை கபாலீஸ்வரர் இந்த ஆலயத்துக்கு வந்து சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு தான் செல்கிறார் என்றால் இதன் சிறப்பை பார்த்துக்கொள்ளுங்கள்.

மீன், அவதாரம், ஆமை அவதாரம் என்று கடல்வாழ் உயிரின உருவில் மகாவிஷ்ணு அருள்பாலிப்பதால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஒரு ஏக்கம் இருந்தது. சிவனின் தரிசனம் மட்டும் தங்களுக்குக் கிடைக்கவில்லையே என்ற நியாயமான வருத்தம்தான். சிவனிடம் அவை முறையிட்டன. அவர்களுக்கு ஆறுதல் சொன்ன இறைவன் வருடத்தில் ஒரு நாள் மாசி மாதத்தில் ஏழு பேராக கடலுக்கே வந்து நீராடி கடல்வாழிகளுக்கு காட்சி தருவதாகவும் ஒரு புராண வரலாறு உண்டு.

கடலைப் பார்த்தவாறு சிறப்பாக அமைந்திருக்கிறது பல்லவர்களால் கட்டப்பட்ட இந்த தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம். மரங்கள் நிறைந்த பிரகாரத்தில் இருக்கும் சிதம்பர விநாயகர் மாணவ மாணவிகளுக்கு மிகவும் பிடித்தவர். அவர்கள் இவருக்கு வைத்திருக்கும் பெயர் பாஸாக்கும் கணபதி. பிரகார மரங்களில் பிள்ளையார், ஆஞ்சநேயர் ஆகியோரின் உருவங்கள் இயற்கையாக அமைந்திருக்கின்றன. பலிபீடம், நந்தி எல்லாம் இருந்தும் கொடிமரம் ஏன் இந்த கோவிலில் இல்லை என்பது தெரியவில்லை. வள்ளி தேவசேனாவுடன் முருகப்பெருமான், ஆகாச லிங்கம், பச்சை அம்மன், துர்க்கை, ஆஞ்சநேயர், நாகர் சனீஸ்வரர், சூரியன், நடராஜர், லக்ஷ்மி நாராயணர், நவக்கிரகங்கள், பைரவர், நால்வர் ஆகியோரும் இந்த ஆலயத்தில் காட்சி அளிக்கிறார்கள். முன் மண்டபத்தின் வலது பக்கத்தில் தாமரை பீடத்தில் திரிபுர சுந்தரி நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். சிவபெருமான் கடல் நீராடுவது போலவே இவருக்கும் ஒரு சிறப்பு நீராடல் மார்கழி மாதத்தில் உண்டு. மார்கழியில் குளிர் போவதற்காக திரிபுரசுந்தரி அம்மனுக்கு வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னர் ரத்தின கம்பளம் அணிவிக்கப்படுகிறது.

கருவறையில் தீர்த்தபாலீஸ்வரர் கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார். சிவலிங்கமும் சரி அம்மனும் சரி இரண்டு அடி உயரம்தான். குள்ள முனிவர் அகத்தியர் பூஜை செய்வதற்கு வசதியாக ஐயனும் அம்மையும் தங்கள் உயரத்தை குறுக்கிக் கொண்டு இருக்கிறார்கள். அகத்தியருக்கு மட்டுமல்ல தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஏற்பட்ட நோய்களை தீர்க்கும் டாக்டர் இவர்தான். அதனால்தான் பக்தர்கள் இவரை சர்வேஸ்வரன் என்றும் நோய் தீர்த்த பிரான் என்றும் அழைக்கிறார்கள். சிவராத்திரி தினத்தன்று இங்கே நடக்கும் நான்காம் கால பூஜை முடிவில் தீர்த்தபாலீஸ்வரர் மேல் சூரியனின் கதிர்கள் விழுவதை ஆண்டுதோறும் காணலாம்.

அகத்தியர் நிர்மாணித்து சூரியபகவான் வரை தேடி வந்து வணங்கும் தீர்த்தபாலீஸ்வரர் நீங்களும் தரிசித்து பலனடையுங்கள்.