விஸ்வாசத்தை தூக்கிவிட்டு பேட்ட படத்துக்கு மாறும் தியேட்டர்கள்! உண்மை நிலவரம் இது தான்!

தமிழக பாக்ஸ் ஆபிசில் பேட்ட படத்தை விஸ்வாசம் படம் முந்திவிட்டதாக செய்திகள் பரவி வரும் நிலையில் உண்மை நிலவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


கடந்த 10ந் தேதி பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்கள் வெளியாகின. முதல் நாள் உலகம் முழுவதும் வசூலான தொகையின் அடிப்படையில் பேட்ட திரைப்படம் தான் அதிக வசூலுடன் முதல் இடத்தில் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் விஸ்வாசம் அதிக வசூலை பெற்று பேட்ட படத்தை விஞ்சியுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

   இந்த தகவல் குறித்து பேட்ட படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் விஸ்வாசம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் மவுனம் காத்து வருகின்றன. ஆனால் தமிழகம் மட்டும் அல்ல உலகம் முழுவதும் எந்த படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு அமோகமாக உள்ளது என்கிற தகவலை திரையரங்குகளில் படங்களை ஒளிபரப்பும் டிஜிட்டல் நிறுவனமாக க்யூப் அம்பலப்படுத்தியுள்ளது.

   அதாவது தற்போது உலகம் முழுவதும் டிஜிட்டல் முறையில் தான் திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன. முன்பு போல் படபெட்டி எல்லாம் தற்போது கிடையாது. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் க்யூப் நிறுவனம் தான் திரையரங்குகளுக்கு ஒரு கோட் கொடுத்து அதன் மூலம் படத்தை அவர்கள் கூறும் சமயத்தில் ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் எத்தனை திரையரங்குகளில் பேட்ட படம் ஓடுகிறது. எத்தனை திரையரங்குகளில் விஸ்வாசம் ஓடுகிறது என்கிற தகவலை க்யூப் வெளியிட்டுள்ளது.

   அதன்படி கடந்த பத்தாம் தேதி உலகம் முழுவதும் 34 நாடுகளில் சுமார் 1063 திரையரங்குகளில் பேட்ட படத்தை வெளியிட்டுள்ளதாக க்யூப் தெரிவித்தது. மேலும் விஸ்வாசம் படத்தை 31 நாடுகளில் 541 திரையரங்குகளில் மட்டுமே வெளியிட்டதாகவும் க்யூப் கூறியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் பேட்ட படத்தின் வரவேற்பை தொடந்து 11ந் தேதி முதல் அந்த படத்திற்கான திரையரங்க எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் க்யூப் கூறியுள்ளது.

   அதாவது முதல் நாள் விஸ்வாசம் படத்தை வெளியிட்ட திரையரங்குகள் கூட மறுநாள் பேட்ட படத்தை வெளியிட்டுள்ளன. மேலும் பேட்ட படத்திற்கு அனைத்து தரப்பு மக்களின் ஆதரவும் கிடைத்துள்ளது. அதே சமயம் விஸ்வாசம் படம் சி சென்டர்களில் மட்டுமே சுமாராக போவதாக சொல்லப்படுகிறது. இதனால் பெரும்பாலான திரையரங்குகளில் காலை மற்றும் மதிய காட்சிகளிலும் பேட்ட படத்தை திரையிட்டு வருகின்றன.

   இதன் காரணமாக விஸ்வாசத்தை ஒப்பிடும் போது பேட்ட படத்தின் வசூல் மிக அதிகமாக உள்ளதாக விநியோகஸ்தர்கள் கூறி வருகின்றனர். அதோடு மட்டும் அல்லாமல் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் நகரங்களில் உள்ள திரையரங்குகளில் விஸ்வாசம் படம் தூக்கப்பட்டு பேட்ட படம் திரையிடப்பட்டு வருகிறது- பொங்கல் விடுமுறை துவங்கியுள்ள நிலையில் ரஜினியின் பேட்ட அதிக திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளது.

   இதனால் இறுதியில் வெற்றிக் கொடி நாட்டப்போது ரஜினி தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதனிடையே மதுரை உள்ளிட்ட பகுதிகளின் விஸ்வாசம் விநியோக உரிமையை பெற்றள்ள விநியோகஸ்தர், பேட்ட படத்தை தூக்கிவிட்டு விஸ்வாசத்தை போடும்படி மிரட்டி வருவதாக திரையரங்க உரிமையாளர்கள் கூறி வருகின்றனர். இந்த விவகாரத்தில் சன் பிக்சர்ஸ் தலையிட வேண்டும் என்றும் அவர்கள் கோரி வருகின்றனர்.