இலங்கை குண்டு வெடிப்புக்குப் பிறகு இஸ்லாம் மீதான பார்வை! ஐ.எஸ். தவிர வேறு குற்றவாளி யார்?

இலங்கை குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட மரணம் 310ஐ தாண்டிவிட்டது. இது இன்னமும் உயரக்கூடும் என்கிறார்கள். இந்த குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பு ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இத்தனை காலம் தாமதித்து ஏன் பொறுப்பு எடுத்துக்கொண்டார்கள் என்பது சந்தேகம் கிளப்புகிறது.


இப்போது இலங்கையில் இஸ்லாமியர்களை விரோதியாகவும், சந்தேகமாகவும் பார்க்கும் நிலை உருவாகிவிட்டது. இதுகுறித்து எழுதுகிறார் எழுத்தாளர் ரியாஸ் குரானா. இப்படி ஒரு நிலை வரவேண்டும் என்று இஸ்லாம் தீவிரவாதிகள் விரும்புவார்களா என்பதுதான் கேள்வி.

ஒரு கடையின் முகப்பில், பர்தாவை கழற்றிவிட்டு உள்ளே வரவும் என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும் ஒரு புகைப்படத்தை நேற்றிரவு இணையத்தில் பார்க்க கிடைத்தது. இன்று ஒரு வலைத்தளத்தில், 22ம் திகதி ஜனாதிபதி தேசிய பாதுகாப்பு சபை மற்றும் அமைச்சரவைக் கூட்டங்களை நடாத்தியதாக தகவல்கள் கிடைக்கின்றன.

அந்தக் கூட்டங்களில் முஸ்லிம் பெண்களின் ஆடை விசயத்தில் கட்டுப்பாடுகளை கொண்டுவர இருப்பதாக முடிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்நிகழ்வில், ஹகீம், ரிஷாட்,ஹலீம், பைசல் காசிம் உட்பட முஸ்லிம் அமைச்சர்கள் பிரசன்னமாகி இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே நேரம், மேலும் ஒரு இணைய செய்தி நிறுவனம், மதரசாக்களில் மதபோதனைதான் நடைபெறுகிறது என நினைத்திருந்தோம், ஆனால் அங்கு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன என்று மக்கள் பலர் கருத்துச் சொல்லியிருப்பதாகவும், இப்படியேதான் மக்கள் உணருவதாகவும் தகவலை வெளியிட்டிருக்கிறது. அதற்கும் ஒருபடி மேலே போய் அந்த வலைத்தளம், மறைந்திருக்கும் தீவிரவாதிகளை கண்டுபிடிக்க வேண்டுமெனில், மதரசாக்கள் மற்றும் மசூதிகளின் அருகிலிருக்கும் சிசிடிவி கமெராக்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று ஒரு முன்மொழிவை செய்திருக்கிறது.

இலங்கை முஸ்லிம்களை கையாள்வதற்கு அரசுக்கு எந்தத் தயக்கமுமற்ற அனுமதியை அண்மையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் உருவாக்கிக் கொடுத்திருக்கின்றன. அதே நேரம், ஏற்கனவே இலங்கையில் உருவாகி நிறுவனமயப்பட்டிருக்கும் பவுத்த மற்றும் இந்து கடும்போக்காளர்களுக்கு - தமது இஸ்லாமிய வெறுப்பை தங்குதடையின்றி வெளிப்படுத்தவும், அதனுாடாக தமது மன வக்கிரங்களை தீர்த்துக்கொள்ள எளிமையானதும், சௌகரியமானதுமான காரணங்கள் கிடைத்திருக்கின்றன.

இன்று இலங்கையில் ஏற்பட்டிருக்கும் இஸ்லாமியப் பீதி என்பதை இலகுவில் ஒழித்துக்கட்டிவிட முடியாது என்றே தோன்றுகிறது. அரவு, நிறுவனங்கள், கடும்போக்காளர்கள் மதச்சார்பானவர்கள் மற்றும் மதச்சார்பற்றவர்கள் என்ற அனைத்து தரப்பினருக்கும் மிகப்பெரிய தலையாய கடமை ஒன்று இருக்கிறது. அது தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கும், குறித்த சமூகத்திற்குமிடையிலான வேறுபாட்டை புரியவைப்பதும், அவைகளை நாட்டு மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதும்தான் அது.

இஸ்லாமிய வெறுப்பு என்பது உலகளவில் மிகப்பலமாக வேரூன்றி நிலைத்திருக்கும் ஒரு நிறுவனம். அது திடீரென 2001 ம் ஆண்டு உலகவர்த்தக மையத்தில் நடந்த குண்டுத்தாக்குதல்களின் பின்னர் திடீரென உருவான ஒன்றல்ல.

இருபதாம் நுாற்றாண்டின் பிற்பகுதியில் மேற்கத்திய நாடுகளில், குறிப்பிடத்தக்களவில் முஸ்லிம்கள் குடியேறியது, ஈரானியப் புரட்சி, கடத்தல்கள், பணயக்கைதுகள், 80 களிலும், 90 களிலும் நடந்த தீவிரவாதச் செயல்கள், ஐரோப்பாவில் நடந்தேறிய தீவிரவாதிகளின் தாக்குதல்கள் என்று நீண்டதும் , ஆழமானதுமான வரலாற்றுப் பின்னணியைக்கொண்டிருக்கிறது.

உலகவர்த்தக மையத்தின் மீதான தாக்குதலின் பின்னர், இஸ்லாத்தின் மீதான வெறுப்பை உலகுதழுவிய பொதுக்கருத்தாக உருவாக்க, இலாபமீட்டும் நோக்கையும், இஸ்லாமிய வெறுப்பையும் கொண்ட பெரும் பொருளாதார பக்கபலம்கொண்ட நுாற்றுக்கணக்கான நிறுவனங்கள், செய்தி ஊடகங்கள், வலைத்தளங்கள், செயற்பாட்டாளர்கள் என மிகப்பெரிதொரு புதிய அமைப்பாக்கம் உலகளவில் தோன்றின. அவை இன்றும் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை.

இந்த இஸ்லாமிய வெறுப்பை ஒரு மாற்றமுடியாத பொதுக்கருத்தாகவும், இஸ்லாம் பற்றிய தெளிவான உண்மையாகவும் உலகெங்கும் உள்ள நாடுகளுக்கும், மக்களுக்கும் கொண்டு சேர்த்து - இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் கொடிய இரக்கமற்ற கொலைகாரர்களாக உலகின் அனைத்து சமூகங்களையும் நம்பும் படியான பரப்புரைகளை இந்த நிறுவனங்களே செய்கின்றன. இதற்கு உலகின் பல நாடுகளும், பொருளாதார நிறுவனங்களும் துணையாக இருக்கின்றன என்பதுதான் உண்மை.

இந்த நிறுவனங்கள், இஸ்லாம் பற்றியும் அதைப் பின்பற்றுபவர்கள் பற்றியும் ஒரு ஒற்றைத் தன்மையான பொதுக்கருத்தை உருவாக்கியதுதான் இன்று மிகச் சிக்கலான ஒரு விசயம். உலகிலுள்ள அனைத்து இஸ்லாமியர்களும் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களல்ல என்பதை மீண்டும் சொல்லி நிருபிக்க அவசியமில்லை. இஸ்லாத்தின் பெயரால் தீவிரவாத அமைப்புக்களும், தீவிரவாத நடடிக்கைகள் நடந்தேறுகின்றவே தவிர, அனைத்து இஸ்லாமியர்களின் மீதும் குறிபான ஒரு தீவிரவாத அடையாளத்தை சுமத்துவதும், அனைத்து இஸ்லாமியர்களையும் சந்தேகத்தோடு பார்ப்பதும் என்பது இஸ்லாமிய வெறுப்பின் அடியாக உருவாகியிருக்கும் ஒன்றுதான் இதை அனைவரும் மிகத் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.