பூஜை செய்துதான் இறைவனை வழிபட வேண்டுமா? இதோ எளிதான ஆன்மிக விளக்கம்!

முதலில் பக்தி என்றால் இறைவன் மீது நாம் கொள்ளும் அன்பு அல்லது மன ஈடுபாடு என்றுதான் பொதுவாக அர்த்தமாகும்.


பக்திக்கு இதைவிட சிறப்பான தனித்தன்மையான அர்த்தம் உண்டு. நமது பெற்றோரிடமும், மனைவியிடமும், உடன்பிறப்புகளிடமும் நமது வாரிசுகளிடம் காட்டும் அன்பு ஒவ்வொரு வகையிலும் கொஞ்சம் வேறுபட்டு இருக்கும்.

இறைவனிடம் மனதை ஒருமுகப் படுத்தும் பொழுது நமது உடல், உணர்வு, சிந்தனை, செயல் என அனைத்துமே ஒருமுகப்பட்டு இறைவன் நினைவின்றி வேறு நினைவில்லாத ஒருவித மோன நிலையடைய வேண்டும் என்று முன்னோர்கள் கூறி வந்துள்ளனர். இப்படிப்பட்ட ஒரு அபரிதமான நிலைக்கு வந்து விட்டால் இறைவனை நேருக்கு நேராக தரிசனம் செய்து விட முடியும் என நம்பினார். அவ்வாறு இறைவனே நேரில் கண்டவர்களின் சரித்திரங்களை நாம் கண்டுள்ளோம்.

இறைவனை வழிபட இல்லத்திலேயே ஒரு சிறிய பூஜை அறை, அதில் ஒரு சுவாமி படம், எதிரில் அமர்ந்து இறைவனை வழிபடுவது. இது முதல் படி. அடுத்து கண்களை மூடிக்கொண்டு அந்த படத்தில் உள்ள உருவத்தை அப்படியே சிந்தனை செய்து எண்ணங்களில் மனம் அலைய விடாமல் அப்படியே ஒன்றிப் போய் விடுவது. அடுத்தபடி இயன்றால் மந்திரங்களை உச்சரித்து இறைவனை வழிபடுவது. இறைவனை உணர்வதற்கு மலர்களும் வழிபாடும் மந்திரங்களும் எல்லாவற்றிற்கும் அடிப்படையான மனமும் சாதனங்கள்தான்.

மலரின்றி வழிபாடு செய்யலாம். பூஜை ஏதுமின்றியே உருவத்தை நினைக்கலாம். உருவமில்லாமல் வெறும் மந்திரத்தைச் சொல்லலாம். மந்திரம் இல்லாமல் மனதை மட்டும் பயன்படுத்தலாம். இறுதியில் மனமும் கரைந்து மௌனத்தில் எண்ண அலைகளை ஓடவிட்டு இறைவனை வழிபடலாம். இப்படி மானசீகமாகச் செய்யும் பூஜையை இறைவன் ஏற்பாரா என்பதற்கு மகாபாரதத்தில் கதையுண்டு.

அர்ஜுனன் செய்யும் பூஜை மிகவும் ஆடம்பரமானது. விளக்குகள் பல ஏற்றி பொன் வெள்ளி பாத்திரங்கள் பரப்பி, ஏராளமான பூமாலைகளை அணிவித்து ஆண்டவனை வழிபாடு செய்வார். ஆனால் பீமனோ வெறும் கண்களை மூடிக்கொண்டு மனதால் மட்டுமே பூஜை செய்வான்.

தனக்குத்தான் இறைபக்தி நிரம்ப உண்டு என அர்ஜுனன் அலட்டிக் கொள்வான். இதையுணர்ந்து கிருஷ்ணர் பக்தியின் அளவு என்ன என்பதை அவனுக்கு உணர்த்த விரும்பினார். அர்ஜுனனை அழைத்துக் கொண்டு பயணம் செய்தார். பாதி வழியில் ஒருவன் மலர்கள் குவிக்கப்பட்ட வண்டியை இழுத்துக் கொண்டு செல்வதை கண்டார்.

இதைக் கண்ட அர்ஜுனன் அவனிடம் அவன் அவளிடம் கேள்வி ஒன்றைக் கேட்டான். பதிலேதும் பேசாமல் அவன் வண்டியை ஓட்டிக் கொண்டே சென்றான். வேறு வழியின்றி இருவரும் அவனைப் பின் தொடர்ந்தனர். அங்கே இவன் போன்று பல வண்டிகள் மலர்களைக் கொண்டு வந்து கொட்டிக் கொண்டிருந்தார்கள். அப்போது வண்டிக்காரரிடம் அர்ஜுனன் கேட்டான் இவையெல்லாம் எங்கிருந்து வருகிறது. அவனோ யாரோ பீமனாம், அந்த ஆள் அர்ச்சித்தது,

இன்னும் பாக்கி உள்ளது, நாங்கள் போய் அதை அள்ளி வர வேண்டும் என்றான். அந்த ஆள் அர்ஜுனனா பீமனா சரியாகத் தெரியுமா என்று அர்ச்சுனன் கேட்டான். அந்த வண்டிக்காரன் அது பீமனுடையது. அதோ அங்கே ஒருவன் ஒரு கூடையில் கொண்டு வருகிறானே, அதுதான் அர்ச்சுனனின் வழிபாட்டுப் பூக்கள் என்றான்.

இப்போது அர்ச்சுனன் தலை குனிந்தான். ஆடம்பரமின்றி மானசீக பூஜையின் மகத்துவத்தை அறிந்து கொண்டான். சந்நியாசிகளும் சாதுக்களும் செய்வது போன்ற பூஜையில் ஈடுபடவேண்டிய அவசியமில்லை. ஆத்மாவையும் உடலையும் அமைதியாக்கச் செய்வதே பூஜையின் நோக்கமாகும்.

கண் ஒன்றைப் பாராமல், காது ஒன்றைக் கேளாமல், மனம் ஒன்றை நாடாமல், வாய் ஒன்றைப் பேசாமல், கை வேறொன்றைத் தேடாமல், சிந்தனை ஈஸ்வரன், ஜெயிப்பது அவனையோ, பூஜை, தீபாராதனைகள் என்றிருக்க வேண்டும்.

வெறும் வயிறோடு தான் பூஜை செய்யவேண்டும் குளித்துவிட்டு பூஜை செய்யவேண்டும் என்பது இன்றைய சூழ்நிலைக்கு பொருந்தி வராது. எனவே மகிழ்ச்சியால் நன்றி தெரிவிக்க உட்காருங்கள். உங்கள் குடும்பத்தில் யாருக்காவது நோயுற்றால் நோய் தீரப் பிரார்த்தியுங்கள். புறத்தூய்மை நீரால் மட்டுமே அமைகிறது. அகத் தூய்மை நம் வாய்மையில் தான் காணப்படுகிறது. எனவே பக்தி தத்துவம் பயன்மிக்கது.

நம்பிக்கைக்குப் பிரார்த்தனையே அடிப்படை என்பதால் பிரார்த்தனையே ஒரு யோகமாகவும், பயிற்சியாகவும் கொண்டு நம்பிக்கையை வளர்த்துக் கொண்டே வந்தால் துன்பங்கள் விலகாவிடினும் அவற்றைப் பற்றிய பயம் நீங்கி நிம்மதி கொள்ள வாய்ப்புண்டு.