பூஜையில் செய்யப்படும் தீபாராதனையின் தத்துவம் தெரியுமா? இறைவனிடம் கொள்ளவேண்டிய அர்ப்பணிப்பு ரகசியம்!

எந்த கோவிலுக்கு சென்றாலும் தீபாராதனை என்பது பூஜையின் ஒரு கட்டமாக அமைகிறது.


தீபாராதனை காட்டாத கோவில்களே இல்லை என்றுதான் நாம் கூற வேண்டும். அந்த அளவுக்கு இது முக்கியமானதாகும். தீபாராதனை என்பது பூஜையின் ஒரு முக்கிய கட்டமாக அமைகின்றது. 

தீபாராதனை காட்டுவதன் விளக்கம் : நம் வீட்டில், கோவில்களில் கற்பூர தீபாராதனையும், நெய்விளக்கு தீபாராதனையும் காட்டப்படுகின்றன. கற்பூரமும் நெய்விளக்கும் கடைசிவரை எரிந்து போகும். எதுவும் மிஞ்சாது. 

மனிதன் இறந்தபிறகும் இதே நிலைமைதான். மிஞ்சும் சாம்பல் கூட தண்ணீரில் கரைக்கப்பட்டு விடுகிறது. இந்த தத்துவத்தை உணர்த்தவே கோவில்களில் தீபாராதனை காட்டுகிறார்கள். எனவே நம்மை இறைவனுக்கு அர்ப்பணிப்போம் என்பதை எடுத்துக் காட்டவே தீபாராதனை செய்யப்படுகிறது. 

இதர வகை வழிபாடுகளில் பிரசாதமாக ஏதேனும் மிஞ்சும். ஆனால், கற்பூர வழிபாட்டில் எதுவுமே மிஞ்சாது. நாமும் கற்பூரத்தை போல் நம்மை முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணித்து வழிபட்டால் இறைவனது ஜோதி தரிசனம் கிடைக்கும் என்பதையே கற்பூர தீபாராதனை உணர்த்துகிறது. கற்பூரம் தன்னைத்தானே அழித்துக்கொண்டு ஒளி கொடுப்பதைப் போல நாமும் மற்றவர்களுக்காக நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் வகையிலும் இந்த தீபாராதனை செய்யப்படுகிறது. 

இதை உணர்ந்து அனைவரும் அன்புக் காட்டி வாழ வேண்டும். நமது வாழ்க்கையானது தீபாராதனை போன்றது. ஆகையால் யாரிடமும் வெறுப்பை காட்டாமல் அன்பை பகிர்ந்து வாழ வேண்டும் என்பதை இந்த தீபாராதனை வழிபாடு சுட்டிக் காட்டுகிறது.