கொலு படிகளில் வைக்கவேண்டிய பொம்மைகள்! இதிலும் ஆன்மிக அறிவியல்!

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி பத்து நாட்களுக்குக் கொண்டாடப்படும் பண்டிகையே நவராத்திரி ஆகும். இந்தப் பண்டிகை எல்லா மாநிலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.


நவராத்திரியின் சிறப்பே பலவிதமான, மண்ணாலான பொம்மைகளை வைத்து கொலு வைப்பது தான்.  ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற்கு சகல நலங்களும் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. அவரவர் வசதிப்படி முப்பெரும் தேவியை குறிக்கும் விதமாக மூன்று படிகளாகவோ அல்லது சக்தியின் சக்கரத்தை குறிக்கும் விதமாக ஐந்து படிகளாகவோ, சப்தமாதர்களை குறிக்கும் ஏழு படிகளாகவோ, நவகிரகங்களை குறிக்கும் ஒன்பது படிகளாகவோ வைக்கலாம். 

கொலு வைப்பதற்கு முன் கொலு மேடைக்கு பூஜை செய்வது முக்கியம். ஒரு நு}ல் சுற்றிய கும்பத்தில் பச்சரிசி, மஞ்சள் கிழங்கு, குங்குமம், ஒரு ரூபாய் காசு, வெற்றிலைப்பாக்கு, எலுமிச்சை ஆகியவற்றை போட வேண்டும். குடுமியுடன் கூடிய மஞ்சள் தடவிய தேங்காயில் சந்தனம், குங்குமம் வைத்து, மாலைச்சூட்டி அதன் மீது வைக்க வேண்டும். சுற்றிலும் மாவிலைகளை அடுக்க வேண்டும். கொலுமேடை முன்பு மேஜையிட்டு அதில் கும்பத்தை வைக்க வேண்டும்.

அதை அம்பாளாக நினைத்து, தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பூஜை செய்ய வேண்டும். பொதுவாக கொலுப்படிகளில் பொம்மைகளை அடுக்கும்போது, கடைசிப்படியான மேல்படியில் இருந்து வைக்க ஆரம்பிக்க வேண்டும். முதலில் விக்னங்கள் தீர்க்கும் விநாயகரை கொலுப்படியில் வைத்த பிறகு தான் மற்ற பொம்மைகளை வைக்க வேண்டும். 

முதல் படி, அதாவது கீழ் படியில் - ஓரறிவு உடைய உயிர் இனமான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள். இரண்டாம் படியில் - இரண்டறிவு உடைய நத்தை, சங்கு பொம்மைகள்.மூன்றாம் படியில் - மூன்றறிவு உடைய கரையான், எறும்பு பொம்மைகள். நான்காவது படியில் - நான்கு அறிவு உடைய நண்டு, வண்டு பொம்மைகள். ஐந்தாம் படியில் - ஐந்து அறிவு கொண்ட நான்குகால் விலங்குகள், பறவைகளின் பொம்மைகள். 

ஆறாம் படியில் - ஆறறிவு உடைய மனிதர்களின் பொம்மைகள். ஏழாம் படியில் - சாதாரண மனிதர்களுக்கு மேலான மகரிஷிகளின் பொம்மைகள். எட்டாம் படியில் - தேவர்களின் உருவங்கள், நவகிரக பகவான்கள், பஞ்சபூத தெய்வங்களின் பொம்மைகள். ஒன்பதாம் படியில் - பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளையும், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய பெண் தெய்வங்களையும் வைக்க வேண்டும். இதில், சரஸ்வதிக்கும் - லட்சுமிக்கும் நடுவில் அன்னை சக்திதேவி இருக்குமாறு வைக்க வேண்டும். 

புல்லாய், புழுவாய் பிறந்து, மனிதனாகப் பிறந்து, படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. 

கொலு வைத்து அம்மனை வழிபடும் பெண்கள் அக்கம் பக்கத்தவர்களையும், உறவினர்களையும் அழைத்து பஜனைகள் பாடி, தாம்பூலப்பையை கொடுத்து, சுண்டல், பொங்கல் என அம்மனுக்கு படைத்த பிரசாதங்களை கொடுத்து உற்சாகமாக வழியனுப்பி வைப்பார்கள். இதன்மூலம் கொலு வைப்பவர்களுக்கும், கொலுவை பார்வையிட வந்தவர்களுக்கும் அம்மன் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.