திருமண நாளில் தன்னை தானே கடத்திக் கொண்ட புதுமாப்பிளை! அதிர வைக்கும் விநோத காரணம்!

திருமணத்தில் இருந்து தப்பிக்க தன்னைத் தானே கடத்திக்கொண்டவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


குர்கானில் ஒரு வீட்டில் பேயிங் கெஸ்டாக தங்கிக் கொண்டு வேலைக்குச் சென்று வந்த மென்பொறியாளர் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவரது திருமணம் கடந்த 23-ஆம் தேதி நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 19-ஆம் தேதியே நண்பர்களுக்கும், சக ஊழியர்களுக்கு திருமண அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சிக்கு புறப்பட்டார். 

அவர் ஜான்சிக்கு சென்று சேர்ந்திருக்கக் கூடும் என்று கருதபட்ட நிலையில் அவ்வாறு நடைபெறவில்லை. அதற்கு பதிலாக அவரது செல்போன் எண்ணில் இருந்து குடும்பத்தினருக்கு ஒரு குறுந்தகவல் சென்றது. அதில் அவர் கடத்தப்பட்டதாகவும், 5 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் விடுவிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதானால் அதிர்ச்சியடைந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட அவரது தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கிய போலீசார் குறுந்தகவல் அனுப்பப்பட்ட எண்ணை தொழில்நுட்ப ரீதியாக ஆராய்ந்த போது குறிப்பிட்ட அந்த எண்ணைத் தவிர வேறு எந்த எண்ணில் இருந்தும் யாரும் தொடர்பு கொள்ளப்படவில்லை எனத் தெரியவந்தது. மேலும் 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டப்பட்டதே தவிர அதனைப் பெறுவதற்கான இடம் அறிவிக்கப்படாததோடு அதனை வாங்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படாததையடுத்து தங்கள் சந்தேகம் மென் பொறியாளர் மீதே திரும்பியது.

இந்நிலையில் அவரது செல்போன் அணைத்தே வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு முறை ஆன் செய்யப்பட்டபோது சிக்னல்களைக் கொண்டு அவர் குருகிராமில் தனது குடியிருப்பிலேயே இருப்பது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து அங்கு சென்று அவரை கைது  செய்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது டெல்லி பல்கலைக்கழகம் ஒன்றில் பயிலும் தனது பெண் தோழியை திருமணம் செய்வதற்காக அவர் நாடகமாடியத்து தெரிய வந்தது.