இந்துக்களின் பாதுகாவலர் எடப்பாடியாரின் ராஜதந்திரம்… வேல் யாத்திரையில் வியந்த தமிழக மக்கள்

ஏதேனும் கலவரம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு என்று கருதப்பட்ட பா.ஜ.க.வின் வேல் யாத்திரை விவகாரத்தை எடப்பாடி பழனிசாமி சிறப்புற கையாண்டுள்ளார். இந்த விஷயத்தில் ராஜதந்திரம் காட்டி வென்றுள்ளதாக தமிழக மக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.


தமிழக பாஜக தலைவர் முருகன் அறிவித்திருந்த வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என பல கட்சிகளும் வலியுறுத்தின. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘ இந்த பிரச்சனையில் தமிழக அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம்’ என்று தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து எல்லோருடைய பார்வையும் முதல்வர் பழனிச்சாமி மீது விழுந்தது. ’மத்தியில் ஆளும் கட்சி என்பதால் பாஜக யாத்திரைக்கு எடப்பாடி அனுமதி மறுக்க முடியாது. அப்படி செய்யக் கூடிய தைரியம் அவருக்கு கிடையாது’ என பலரும் விமர்சனம் செய்தனர். இதற்கிடையே ஆளுநர் திடீர் பயணமாக டெல்லி சென்றதால், பரபரப்பு அதிகமானது.

திருத்தணி செல்லவிருந்த முருகன் உள்ளிட்ட பாஜகவினரை சென்னையிலேயே கைது செய்து தடுத்துவிடலாம் என்கிற போலீஸ் யோசனையை முதல்வர் ஏற்றுக்கொள்ளவில்லை. ‘’உப்புசப்பில்லாத பிரச்சனைகளுக்கெல்லாம் ஸ்டாலின் போராடியபோது அதற்கு அனுமதி தந்துவிட்டு இப்போது பாஜக யாத்திரையை ஆரம்பத்திலேயே தடுப்பது சரியல்ல’’ என்கிற முதல்வரின் விளக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதன் பின்னரே முருகன் திருத்தணி செல்ல அனுமதிக்கப்பட்டார். அதிலும் திருத்தணியை நெருங்கிய நிலையில் 5 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டது. சாமி தரிசனம் முடிந்து யாத்திரையை தொடங்கிய நேரத்தில் முருகன் உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். இதை அந்தக் கட்சியினர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. 

இதுபற்றி கருத்து தெரிவித்த பலரும், ‘’ பால் போல பொங்கிய ஒரு பிரச்சனையை முதல்வர் எடப்பாடி தனது சாதுர்யமான அணுகுமுறைகளால் பொசுக்கென அமைதியாக்கிவிட்டார். இந்து எதிர்ப்பாளர்களை அடையாளம் காட்டுவது உள்ளிட்ட வேல் யாத்திரையின் நோக்கம் நல்லதென்றாலும் கொரோனா காலத்தில் மிகப் பெரிய கூட்டத்தைத் திரட்டுவதால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. 

அதேநேரம் ஆரம்பத்திலேயே யாத்திரைக்கு தடை விதித்தால் இந்து உணர்வுகளுக்கு எதிரான அரசு என முத்திரை குத்துவார்கள். இதையெல்லாம் உணர்ந்துதான் மிகவும் சாமர்த்தியமாக காய்நகர்த்தியிருக்கிறார் முதல்வர். மேலும், யாருடைய பேச்சுக்கும் தலையாட்டும் அரசு அல்ல என்பதை அழுத்தம் திருத்தமாக மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி’’ என்கிறார்கள்.