காய்ச்சலுக்கான மாத்திரையை மாற்றி கொடுத்ததால் ஆந்திராவில் நான்கு குழந்தைகள் உயிருக்கு போராடி வருகின்றன.
காய்ச்சல் மாத்திரைக்கு பதில் சர்க்கரை நோய் மாத்திரை கொடுத்த நர்ஸ்! 4 குழந்தைகள் உயிருக்கு போராட்டம்!
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ளது எபுருபலேம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிலர் தங்களது குழந்தைகளை புதன்கிழமை அன்று தூக்கிச் சென்றனர். அந்தக் குழந்தைகளுக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து ஐந்து குழந்தைகளுக்கு காய்ச்சலுக்கான டானிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் டானிக் இல்லாமல் போகவே பாராசிட்டமல் மாத்திரை கொடுக்க மருத்துவர் பரிந்துரைத்தார்.
இதையடுத்து அந்த குழந்தைகளுக்கு மாத்திரை வழங்கப்பட்டது. மாத்திரையை தண்ணீரில் கரைத்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டது. குழந்தைகளுக்கு மாத்திரை கொடுக்கப்பட்ட நிலையில் அதில் நான்கு குழந்தைகளின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக ஒரு குழந்தைக்கு மாத்திரை கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த நான்கு குழந்தைகளும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் அந்த செவிலியர் பாராசிட்டமால் மாத்திரைக்கு பதிலாக வேறு ஒரு மாத்திரையை கொடுத்ததே ஆகும் என்பது பின்னர் தெரியவந்தது.
தனது தவறை உணர்ந்த செவிலியர் உடனடியாக இது தொடர்பாக தனது உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் அந்த நான்கு குழந்தைகளும் சிகிச்சை பெற்று வருவது தெரிய வந்து அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
தற்போது அந்த செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் செய்த தவறை அவர் ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது. பாராசிட்டமல் மாத்திரைக்குப் பதில் மெட்பார்மின் என்ற மாத்திரை கொடுக்கப்பட்டிருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் அண்மையில் மருத்துவ முகாம் நடைபெற்ற போது இந்த மாத்திரை கொண்டுவரப்பட்டு இருப்பதாகவும் அது தற்போது குழந்தைகளுக்கு தெரியாமல் வழங்கப்பட்டு விட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.