மகாளய பட்சம் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன தெரியுமா?

'மகாளயம்' என்றால் பெரிய கூட்டம் என்று பொருள். மறைந்த நம் முன்னோர் மொத்தமாக நம் இல்லத்தில் கூடும் நேரமே மகாளய பட்சம். மகாளய பட்சம் என்பது


புரட்டாசிப் பவுர்ணமியை அடுத்த பிரதமையில் தொடங்கி 15 நாட்கள் மகாளயம் என்று அழைக்கப்படுகிறது. இதனை மகாளயபட்சம் எனவும் கூறுவர். மகாளயம் என்றால் மகான்கள் வாழும் இடம் என்றும், பட்சம் என்றால் பாதி மாதம் என்றும் பொருளாகும். மகான்கள் பாதி மாதம் பூமியில் வந்து வாழுகின்ற காலம் என்பதை மகாளயபட்சம் என்று கூறுகிறார். இந்நாள்களில் இறந்து போன முன்னோர்கள் ஆவி ரூபத்தில் கோயில்களின் தீர்த்தங்களில் நீராடி தங்களுடைய சக்திகளைப் பெறுவார்கள் என்றும், அவர்களின் சந்ததியினர் வாழிடங்களுக்குச் சென்று தங்களுக்கு அவர்கள் அளிக்கும் உணவினை ஏற்பார்கள் என்றும் நம்பப்படுகிறது. 

அதனால் இந்த நாள்களில் நீர்த்தார் நீர்கடன் அளிப்பதையும், வழிபடுவதையும் இந்துக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள். இந்தப் பதினைந்து நாள்களில் மாளய அமாவாசை முக்கிய நாளாகும். பிறகு மகாபரணி, மகாவியதீபாதம், மத்யாஷ்டமி, சந்யஸ்த மாளயம், கஜச்சாயா புண்யகாலம், சஸ்தர ஹத மாலயம் போன்ற நாள்களிலும் நீத்தாருக்கு நீர்கடன் அளிக்கின்றார்கள். 

நமது மூதாதையர்களின் அருளாசியே நம்மை காக்கும் கவசங்களாகும். ஒருவன் எந்த ஒரு செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும், அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசிர்வாதம் மட்டும் இருந்தாலே போதும். எனவேதான் பித்ருக்களுக்கு தர்ப்பணம் இடுவது என்பது நம்மை நாமே காத்துக்கொள்வதற்காக நாம் அணிந்து கொள்ளும் கவசத்துக்கு ஒப்பாகும். மஹாளய அமாவாசையை முன்னிட்டு வரும் 14ம் தேதி பிரதமை திதியில் இருந்தே பித்ருக்களுக்கு தர்ப்பணம் அளிக்கத் தொடங்கலாம். ஒவ்வொரு திதியிலும் அளிக்கப்படும் பித்ரு தர்ப்பணத்தால் எவ்வகை பலன் கிட்டும் என்பது யஜூர் வேதத்தில் விளக்கப்பட்டுள்ளது. 

14-09-2019 சனி கிழமை முதல் மகாளய பட்சம் ஆரம்பம் ஆகிறது. சனிக்கிழமை முதல் பதினைந்து நாட்களுக்கு மகாளய பட்சம் காலமாகும். பொதுவாக ஒவ்வொரு அமாவாசையன்றும் விடும் தர்ப்பணம் எமதர்மராஜனின் கைகளுக்கு சென்று அவர் நம் முன்னோர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைப்பாராம். மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்கு சென்று வரும்படி அனுமதிப்பாராம். எனவே அவர்கள் மஹாளய பட்சமான பதினைந்து நாட்களும் முன்னோர்கள் நம் இல்லத்தில் வந்திருப்பதாக நம்பிக்கை.  

தை அமாவாசை ஆடி அமாவாசை இவைகளை விட உயர்ந்தது மகாளய அமாவாசை. மறந்து போனவனுக்கு மகாளயபட்சம் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ( அதாவது முன்னோர்களுக்கு ஒரு வருடமாக ஸ்ரார்த்தம் ( திதி ) கொடுக்காமல் மறந்து இருந்தால் கொடுக்க மறந்தவர்கள் மகாளய அமாவாசையன்று கொடுத்தால் அந்த ஒரு வருட ஸ்ரார்த்தம் ( திதி ) கொடுத்த பலன் வந்து சேரும்.