சந்திராஷ்டமம் என்றால் என்ன? அன்று மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் தெரியுமா?

ஜோதிடத்தில் ராசிபலன் பார்க்கும்போது பலரும் கவனிக்கும் அம்சங்களில் ஒன்று சந்திராஷ்டமம் ஆகும்.


பொதுவாக ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு ராசியிலும் சஞ்சரிக்கின்ற கால அளவானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.அந்த அளவின்படி சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் இரண்டே கால் நாட்கள் அதாவது தோராயமாக 54 மணிநேரம் வாசம் செய்வார். அந்த அடிப்படையில் ஒவ்வொருவரின் ராசிக்கும் எட்டாவது ராசியில் சந்திரன் பயணிக்கின்ற காலத்தை சந்திராஷ்டம காலம் என்று சொல்கிறார்கள்.

கோள்களுக்கு உரிய பணியில் சந்திரனை மனோகாரகன் என நிர்ணயம் செய்திருக்கிறார்கள். நமது மனநிலையை பராமரிப்பதே சந்திரனின் பணி. எட்டாம் இடம் என்பது அக பலன்களை உண்டாக்கக்கூடியது என்பதால் எட்டாம் இடத்திற்கு சந்திரன் வருகின்ற அந்த குறிப்பிட்ட இரண்டே கால் நாட்கள் மனநிலை டென்ஷனாக இருக்கும்.

மனதை அடக்கி ஆள தெரிந்தவர்களுக்கும் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களுக்கும் பிரச்சனை இல்லை. மனதில் குழப்பத்தை தோற்றுவிக்கும் படியான நிகழ்வுகள் நம்மை சுற்றி நடக்கும் என்பதால் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது என்பதற்காக மாத ராசி பலன்களிலும், காலண்டர்களிலும் சந்திராஷ்டம நாட்களைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிடுகிறார்கள்.

பதறாத காரியம் சிதறாது என்று சொல்வார்கள் சந்திராஷ்டமத்தில் ஒருவித பதற்றத்தோடு செயல்படுவோம்; அதனால் இறங்கிய காரியங்களில் எளிதான வெற்றி கிடைக்காது போகும். எடுத்த காரியத்தில் அற்ப காரணங்களினால் தாமதம் உண்டாகும். இதனால் டென்ஷன் மேலும் அதிகரிக்கும்.

மனித உடற்கூறு இயலைப் பொருத்தவரை சந்திரன் நம் உடலில் ஓடுகின்ற ரத்தத்தை குறிக்கிறார். சந்திராஷ்டம நாட்களில் உண்டாகும் பதற்றத்தின் காரணமாக ரத்தம் சூடேறும். டென்ஷன் அதிகமாகும். இரத்த கொதிப்பு நோய் உள்ளவர்கள் சந்திராஷ்டம நாட்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற காரணங்களால் தான் திருமணம் கிரகப்பிரவேசம் போன்ற சுப காரியங்களில் சந்திராஷ்டம நாட்களை விலக்குகிறார்கள்.

அதுபோன்று முக்கியமான அறுவை சிகிச்சை செய்யவிருக்கும் மருத்துவர்களும் செய்யப்பட உள்ள நோயாளிகளும் தங்கள் சந்திராஷ்டம நாட்களை தவிர்த்து விடுவார்கள். நோயாளிக்கு இரத்த அழுத்தத்தில் மாறுபாடு தோன்றுவதன் காரணமாக அறுவை சிகிச்சை தோல்வியில் முடியலாம் என்பதே இந்நாட்களைத் தவிர்ப்பதற்கான காரணம்.

சந்திராஷ்டம நாட்களை ஜோதிடர்களின் முன்னமே குறித்து கொடுப்பது கூடுதல் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காக தானே அன்றி பணி செய்யாமல் சும்மா இருப்பதற்காக அல்ல. சந்திராஷ்டம நாட்கள் கெடுதல் பலன்களை மட்டும்தான் உண்டாக்கும் என்பது முற்றிலும் தவறு. ஒவ்வொரு ராசியினருக்கும் ஒரு சில நன்மைகளையும் செய்யும்.

கடகம் மற்றும் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டம நாள் கெடுதல் செய்யாது. காரணம் கடகம் சந்திரன் ஆட்சி பெறும் ராசி என்பதாலும், ரிஷபம் சந்திரன் உச்சம் பெறும் ராசி என்பதாலும் அந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நன்மையே செய்வார். அதேபோல் தன்னுடைய நட்சத்திரங்களான ரோகிணி - அஸ்தம் - திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டம தினத்தில் நல்லது மட்டுமே நடக்கும்.