10 விநாடிகளுக்குள் உதவி… வந்தாச்சு ‘தீ’ ஆப் – எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்த தகவல் தொழில்நுட்ப புரட்சி.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ’தீ’ எனும் அலைபேசி செயலியை மக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்கள்.


தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையானது, ’காக்கும் பணி எங்கள் பணி’ என்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு மக்களுக்கு சேவையாற்றும் துறையாகும். பேரழிவை ஏற்படுத்தும் தீயிலிருந்து உயிர்களையும், உடைமைகளையும் காப்பதோடு, இயற்கை இடர்பாடுகளான வெள்ளம், புயல், நிலச் சரிவுகள் போன்றைவைகளிலிருந்தும், மனிதர்களால் ஏற்படுத்தப்படும் அழிவுகளிலிருந்தும் மக்களை காப்பதும், உதவி புரிவதும் இத்துறையின் முக்கிய பணியாகும். இத்துறையின் செயல்திறனை மேம்படுத்திட மாண்புமிகு அம்மாவின் அரசு, பல்வேறு நவீன கருவிகளையும், புதிய தொழில்நுட்ப வசதிகளையும் வழங்கி வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் nritfis பொதுமக்கள் எளிதில் பெறவும், தீ, விபத்து, வெள்ளம், ஆழ்துளைக்கிணறு விபத்து, வனவிலங்கு மீட்பு, ரசாயனம் மற்றும் விஷவாயுக் கசிவு உள்ளிட்ட மீட்பு உதவிகளுக்கு இத்துறையை மக்கள் எளிதில் அணுகிடவும், நவீன தொழில்நுட்ப உதவியுடன் நாட்டிலேயே முதல் முதலாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையால் ‘தீ எனும் அலைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. 

ஆம்டெக்ஸ் எனும் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த அலைபேசி செயலியின் மூலம், பாதிக்கப்பட்ட மக்கள் தீயணைப்பு நிலையத்தை அணுகுவதற்கும், அழைத்த 10 வினாடிக்குள் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் தொடர்பு கொள்ளப்பட்டு, விபத்து மற்றும் உதவி கோரும் இடத்திற்கு மிக குறுகிய நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் தகுந்த உபகரணங்களோடு சென்று உதவுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

இதற்காக ’தீ’ செயலியுடன் கூடிய 371 கைக்கணினிகள் அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் மற்றும் சென்னையில் உள்ள தீக் கட்டுப்பாட்டு அறைக்கும் வழங்கப்படுகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று ’தீ’ செயலியுடன் கூடிய முதல் கைக்கணிணியை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் திரு. எம்.எஸ் ஜாபர் சேட், இ.கா.ப. அவர்களிடம் வழங்கினார்கள். ’தீ’ செயலியை மக்கள் தங்களது அலைபேசிகளில் இலவசமாக பதிவிறக்கம் செய்து, விபத்து அல்லது இடர்பாடுகள் ஏற்படும்போது உடன் தகவல் தருவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.