முருகப்பெருமானின் காவல் அதிகாரி – முருகப்பெருமானுக்கு முதலில் காவடி எடுத்து வந்தவர் இவர்தான்

அகத்தியர் பொதிகை மலையில் நிரந்தர வாசம் செய்து தமிழ் வளர்த்து வந்தார். அவரது சீடர்களில் ஒருவன் இடும்பன்.


ஒருசமயம் அவன் முருகப் பெருமானை நேரில் தரிசித்து அவரது கருணையைப் பெற விரும்புவதாக அகத்தியரிடம் கூறினான். அசுரன் ஆனாலும் அவனது உயர்ந்த எண்ணத்தை புரிந்து கொண்ட அகஸ்தியர் பூர்ச்சவனத்தில் உள்ள சிவமலை, -சக்திமலைகளை பொதிகைக்குக் கொண்டு வந்தால் முருகனின் தரிசனமும் கிடைக்கும் என்றார்.

இடும்பனும் அவரது மனைவியும் பூர்ச்சவனம் சென்று அகஸ்தியர் உபதேசித்தபடி அம்மலைகளைத் தூக்குவதற்காக சிவனை வேண்டி தவம் இருந்தனர். அப்போது பிரும்ம தண்டமும் அட்டதிக்கு நாகங்களும் அவன் முன் தோன்றின. சிவன் அருளைக் கண்டு அதிசயத்தை இடும்பன் அந்த நாகங்களை கயிறாகத் திரித்து இரு மலைகளையும் கட்டி அவற்றை பிரும்ம தண்டத்துடன் பிணைத்து காவடியாக தன் தோள்களில் சுமந்து அரோகரா அரோகரா என்று கூவிக் கொண்டு தென்திசை நோக்கி நடந்தான்.

இடும்பனும் அவனது மனைவியும். சுமையை தாங்க முடியாமல் திருஆவினன்குடி என்ற இடத்தில் சிறிது நேரம் மலைகளை கீழே இறக்கி வைத்தனர். இளைப்பாறிய பிறகு பின்பும் தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தனர். ஆனால் மலைகளை சுமக்க மிகவும் கடினமாக இருந்தது. சிவனின் மலையின் மீது ஒரு சிறுவன் ஏறிக்கொண்டு விளையாடியதை இடும்பன் கண்டான். அந்த குழந்தையின் ரூபமானது தெய்வீக லட்சணங்கள் நிரம்பியிருந்தது. இதிலிருந்து அந்த குழந்தை ஒரு தெய்வப்பிறவி என்பதை இடும்பன் அறிந்து கொண்டான். தயவுசெய்து மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டிக் கேட்டுக்கொண்டான். அந்த சிறுவன் இறங்குவதற்கு மறுத்துவிட்டு, ‘இது எனக்கான மலை, இந்த மலையில் தான் நான் தங்கப் போகிறேன்’ என்ற வாதத்தை முன் வைத்தான். இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. அந்த சிறுவன் தன் கையிலிருந்த ஆயுதத்தால் இடும்பனை லேசாக தட்ட, இடும்பன் கீழே விழுந்து தன் உயிரை இழந்து விட்டான். இதனைக் கண்ட இடும்பனின் மனைவி அழத்தொடங்கினாள். அசுரர்களுக்கெல்லாம் வில்வித்தை கற்றுக் கொடுத்த தனது கணவனை வீழ்த்தும் சக்தியானது அந்த அரக்க அசுரர்களை எல்லாம் வென்ற முருகப்பெருமானை தவிர வேறு யாருக்கும் இருக்க முடியாது என்பதை உணர்ந்து விட்டாள் மனைவி. அந்தச் சிறுவன் முருகன்தான் என்பதையும் அறிந்துகொண்ட இடும்பி முருகனின் காலில் விழுந்து வணங்கினாள். முருகனும், மயிலின் மேல் அமர்ந்து காட்சி தந்து இடும்பனுக்கு முக்தி அளித்து அருள் பாவித்தார்.

அன்றுமுதல் இடும்பன் பழனி மலையின் இடையில் நிற்க வேண்டும் என்றும், நீ இந்த சிவமலையை எப்படி தோளில் சுமந்து வந்தாயோ அதேபோல் எனக்குரிய வழிபாட்டுப் பொருட்களையும் பக்தர்கள் காவடியாக கொண்டு வருவார்கள் என்றும், உன்னை முதலில் வழிபட்ட பிறகு என்னை வழிபட வேண்டும் என்றும், உன்னை வணங்கியவர் என்னை வணங்கிய பயன் பெறுவார் என்றும், இடும்பனை தரிசித்தால் இன்னல்கள் தீரும் என்றும், முருகன் இடும்பனுக்கு அருள் பாவித்தார்.

அதுமுதல் பழனி மலைக்கு பலவகை காவடிகள் எடுத்து வரும் பக்தர்கள் முதலில் இடும்பனையும், பின் தண்டபாணியையும் வழிபட்டு வருகிறார்கள். சுற்றுப்பகுதி மக்கள் முதலில் இங்கு முடி காணிக்கை தந்து இடும்பன் குளத்தில் நீராடி முருகனுக்கு செலுத்தும் காணிக்கையின் ஒரு பகுதியை இங்கு செலுத்தி அதன் பிறகே பழனி தண்டாயுதபாணியை தரிசிக்கச் செல்கிறார்கள். இடும்பன் கோவில் ஆவினன்குடி அல்லது ஆயக்குடி எனும் கலிங்கப்பாறை என்ற ஒருவகைப் பாறையின் மீது மிக சிறிய கோயிலாக அமைக்கப்பட்டு பின்னர் சுமார் 200 வருடங்களுக்கு முன் பெரிதாக கட்டப்பட்டிருக்கிறது.

இடும்பன் ஜடாமுடியோடு நின்ற கோலத்தில் சிவகிரி சக்திகிரி ஆகிய இரண்டு மலைகளை காவடியாகத் தூக்கிக் கொண்டு கையில் பிரும்மதண்டத்தோடு காட்சி தருகிறார். தனி சன்னதியில் வடக்கு நோக்கி நின்றவாறு வலது கையில் அரிவாளும் இடது கையில் பிரும்ம தண்டம் கொண்டு அருள்கிறார். கடம்பன் விநாயகர், கோபாலகிருஷ்ணன், உமாமகேஸ்வரி உடனுறை சிவகுருநாதர், பால முருகன் சந்நிதிகளும் அமைந்துள்ளன.

தல விருட்சம் கடம்ப மரம். இத்திருக்கோயில் முன்பு கடம்ப வனமாக இருந்தது. தீர்த்தம், இடும்ப தீர்த்தம் எனவும் இடும்பன் குளம் எனவும் அழைக்கப்படுகிறது. சித்திரை வருடப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆனித்திருமஞ்சனம், ஆடிப்பெருக்கு நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை தீபம், மார்கழி தனுர் மாத பூஜை, வைகுண்ட ஏகாதசி, மாசி மகம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் என இங்குள்ள தெய்வங்களுக்குரிய சிறப்பு தினங்கள் அனைத்தும் கொண்டாடப்படுகிறது.

முருகனுக்கு காவல் அதிகாரி இடும்பன் என்பதால் வாழ்வில் எவ்வகை இடர் வந்தாலும் இவரிடம் வேண்டுதல் செய்து கொண்டு பின்பு முருகனுஇடம் பிரார்த்தனை செய்துகொண்டால் விரைவிலேயே இடர் நீங்கும். வாழ்வில் இன்பங்கள் சேரும் என்பது நம்பிக்கை.