ஒருவழியாக திருமாவுக்கு சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் திருமாவளவன் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் தனிச் சின்னத்தில் தான் போட்டியிட உள்ளதாக திருமாவளவன் ஏற்கனவே கூறியிருந்தார்.

அதன்படி தங்களுக்கு ஏற்கனவே தாங்கள் பயன்படுத்தி வந்த தீபம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றும் மோதிரம் சின்னத்தை வழங்க வேண்டும் என்றும் திருமாவளவன் தேர்தல் ஆணையத்தை கூறினார். ஆனால் அந்த சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. 

இதனைத் தொடர்ந்து வைரம் சின்னத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று திருமாவளவன் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பினார். வைரம் சின்னமும் இல்லை என்று கூறிவிட்ட தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட சின்னங்களை பட்டியலிட்டு அவற்றில் ஒன்றை தேர்வு செய்யுமாறு திருமாவளவனுக்கு பதில் கடிதம் அனுப்பியது.

அதனடிப்படையில் திருமாவளவன் தற்போது பானை சின்னத்தை தனது சின்னமாக தேர்வு செய்துள்ளார். சிதம்பரம் தொகுதியில் தனக்கு பானை சின்னம் வேண்டும் என்கின்ற கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதாக திருமாவளவன் கூறியுள்ளார்.

அதனடிப்படையில் பானை சின்னத்தை திருமாவளவனுக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த முறை சிதம்பரம் தொகுதியில் விசிக பானை சின்னத்திற்கு ஓட்டு கேட்க வேண்டும்.