ஜென்ம சனி ஆட்டிப் படைக்கிறதா? எளிய பரிகாரம் இதோ!

ஒரு நபரின் ஜாதகத்தில் அவரின் லக்னத்திற்கு 12 ஆம் இடத்திலிருக்கும் சனி கிரகம் அவரது “ஜென்ம லக்னம்” ஆகிய “ஒன்றாம்” வீட்டில் பெயர்ச்சி ஆவதை “ஜென்ம சனி” என்பார்கள்.


ஏழரைச்சனியின் நடுப்பகுதியும், கடுமையான கெடுபலன்களைச் செய்வதுமான, ஒரு மனிதனின் சொந்த ராசியில் இரண்டரை வருடங்களுக்கு சனி இருக்கும் நிலையே, ஜென்மச்சனி எனப்படுகிறது. இந்த இரண்டரை ஆண்டு காலத்தில், ஒருவரின் சொந்த நட்சத்திரத்தில் சனி செல்லும் ஏறத்தாழ ஒரு ஆண்டு காலத்தில் மிகக் கடுமையான கெடுபலன்களை தருவார். அதிலும் 40 வயதுக்குள் வரும் சனி இந்த நிலைமையை கண்டிப்பாக செய்யும்.

சுய நட்சத்திரத்தில் சனி செல்லும்போது ஒரு மனிதனுக்கு வாய்விட்டு அழும்படியான கடுமையான மன அழுத்தம் உள்ள நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த காலகட்டத்தில் ஒரு மனிதனுக்கு எது பிடிக்காதோ அது நடக்கும். அவனை எது பாதிக்குமோ அந்த விஷயத்தில் சனி கடுமையான கெடுபலன்களைச் செய்வார், இது வயதிற்கு ஏற்றார் போல நடக்கும்.

கோட்சாரத்தில் ஒருவரின் ஜென்ம ராசியில் இருளாகிய சனி அமரும்போது, அவனது மனதை ஆளுமை செய்து தவறான வழியில் செல்லவோ, முடிவெடுக்கவோ வைக்கிறார். ராசியில் சனி இருக்கும் போது தனது கெடுபலன் தரும் கொடிய பார்வை மூலம் அந்த மனிதனின் தைரியம், நற்பெயர் ஆகியவற்றிற்கு காரணமான மூன்றாமிடத்தைப் பார்த்து, அவனது பெயரைக் கெடுத்து, தைரியத்தைக் குலைத்து எதிர்காலம் பற்றிய மனபயத்தை உண்டு பண்ணுவார்.

ஜென்ம ராசியில் சனி இருக்கும்போது அவரது பத்தாம் பார்வையால் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால்தான் ஜென்மச் சனி நடக்கும்போது வேலையிழப்பு, சஸ்பென்ட். தொழில் சரிவு போன்றவைகள் நடக்கின்றன.

சமுதாயத்தில் மதிக்கப்பட்ட நிலையில் இருப்பவர்கள் கூட ஜென்ம சனி காலத்தில் தேவையில்லாத விமர்சனத்தால் மனத்துயரம் அடைவார்கள். தன் சகோதரர்களோடு தேவையில்லாமல் பகைமையை வளர்த்துக் கொள்வதுடன் அவரை பகையாளிகளாக எண்ணுவார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேல் அதிகாரிகளிடம் சாதகமான சூழல் அல்லாமல் பாதகமான சூழல் ஏற்பட்டு தன்மான இழப்பு போன்றவைகளை ஏற்படுத்துவார். மேலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எல்லா பணிகளையும் தானே செய்வது போன்ற நிலை அமையும்.

செய்தொழில் புரிவோருக்கு உற்பத்திக்கான விற்பனை இல்லாமல் தொழிலில் தேக்க நிலை உண்டாகும். தொழில் பயணங்களால் லாபம் இருக்காது. ஆடை அணிகலன்களால் தன விரயம் அல்லது வீட்டில் திருட்டு போதல் போன்றவை நிகழும். அதனால் சில விபரீத சிந்தனைகளை ஏற்படுத்துவார்.

கணவன் மனைவிக்கு இடையே உறவில் விரிசல் மற்றும் பிள்ளைகளை விட்டு பிரிதல் போன்ற குடும்ப பிரச்சனைகளால் நிம்மதியின்மை சூழல் அமையும். கூட்டுத்தொழிலில் சக பங்குதாரர்களிடம் வாக்குவாதத்தினால் பங்குதாரர்களுக்கு இடையே பிரிவினையும், மனக்கசப்பு மற்றும் வருத்தம் ஏற்படக்கூடிய நிகழ்வுகளை நிகழ்த்துவார்.

சரியான வேலை அமையாமலும், வேலையில்லா நிலையும் ஏற்படுத்தி எண்ணங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவார். எதிலும் சுறுசுறுப்பு இன்றி மந்த நிலையை ஏற்படுத்துவார். தீயோர்களின் நட்புகள் எளிதில் அமையப்பெற்று நடவடிக்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவார். தீய பழக்கங்களால் உடல் பலவீனத்தை ஏற்படுத்தி சோம்பேறி என்ற பெயருக்கு உரியவராக மாற்றுவார்.

நெருக்கமான உறவினர்களை இழத்தல் அல்லது அவர்களால் ஏமாற்றப்பட்டு அவர்களிடமிருந்து பிரிந்து வாழக்கூடிய வேதனையான நிலையை அளித்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் யார் என்பதையும் உங்களின் நிலை அவர்களிடம் என்ன என்று உங்களுக்கு புரியும் வகையில் புரிய வைக்கக்கூடியவர்.

காரியத் தடை, கீர்த்தி பங்கம் போன்ற பல சோதனைகள் ஏற்படுத்தி நம் வாழ்க்கை என்னவென்று புரிய வைக்கக்கூடிய நீதிமான். ஜென்ம சனி நடைபெறும் காலத்தில் சனி பகவானால் தீய பலன்கள் அதிகம் ஏற்படாமல், நற்பலன்களை சனி பகவானின் அருளால் அதிகம் பெறுவதற்கு வாரத்தில் செவ்வாய் மற்றும் சனி கிழமைகளில் அனுமன் கோவிலுக்கு சென்று அனுமனுக்கு நெய் தீபங்கள் ஏற்றி,

“அனுமன் சாலிசா” மற்றும் சனி பகவானுக்குரிய மூல மந்திரங்களை துதித்து வழிபடுவது நல்லது. புதன்கிழமைகளில் விநாயக பெருமானையும் வழிபட்டு வர உடல்சார்ந்த துன்பங்கள் இக்காலங்களில் ஏற்படாமல் காக்கும்.

ராகுகேதுவுக்கு பரிகார பூஜை செய்வதும் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும். வியாழக்கிழமை தோறும் தக்ஷிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடவும்.

“ஓம் சத்குருவே நம” என்ற மந்திரத்தை தினமும் 12 முறை சொல்லவும் சனிபகவானின் விக்கிரகத்தை சுற்றி வந்து வழிபடுவதோ, நெடுங்சாண்கிடையாக வீழ்ந்து வழிபடுவதோ கூடாது.