நாகர்கோவில் கனெக்சன்..!புதுக்கோட்டையில் கத்தை கத்தையாக புழங்கும் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டு..!

கொரோனா ஒரு புறம் இருக்க புதுக்கோட்டையில் ரூ.65,40,000 மதிப்பிலான கள்ள நோட்டுகள் மற்றும் கள்ள நோட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர், லேப்டாப், பிரின்டர் ஆகியவை காவல்துறையினால் கைப்பற்றப்பட்டன. இந்த தகவல் தற்போது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் கொரோனாவின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருகின்றது. இதனால் ஊரடங்கு மே-31-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் பொருளாதாரம் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் பாதிப்பு அரசிக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அரசு டாஸ்மாக் கடைகளை திறந்தது. ஆனால் அதற்கு பொதுநலன் வழக்கு பதிவு செய்து உயர் நீதிமன்றம் தடை செய்தது. பின்னர் இதனையடுத்து உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததால், தமிழகத்தில் தற்போது டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை சூடுபிடித்துவருகிறது.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மூங்கித்தான்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையிலும் விற்பனை நன்றாக நடைபெற்றுவருகிறது. இங்கு, கடந்த மே16-ம் தேதி அன்று மது வாங்க வந்தவர்களில் சிலர் சற்று ஒருவித பதற்றத்துடன் பணத்தைக் கொடுத்து மது வாங்க முயன்றுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த விற்பனையாளர் பணத்தை வாங்கி பார்த்துள்ளார்.

அப்போது தான் அவருக்கு தெரிய வந்துள்ளது அது கள்ள நோட்டு என்பது. இதனை அறிந்த உடன் உடனடியாக விற்பனையாளர், அவரிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து , கள்ள நோட்டை மாற்ற முயன்ற 4 பேரையும் வளைத்துப் பிடித்து கைதுசெய்தனர். அதன்பின்னர் மாவட்ட எஸ்பி அருண்சக்திகுமார், இதன் பின்னணியில் இருப்பவர்கள் அனைவரையும் கைதுசெய்ய உத்தரவு பிறப்பித்தார். உத்தரவை அடுத்து தனிப்படையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

விசாரணையில், நாகர்கோவிலைச் சேர்ந்த மணிகண்டன் என்பரும், சென்னையைச் சேர்ந்த சுரேஷ் என்பரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களின் வீட்டிலிருந்த ரூ.65,40,000 மதிப்பிலான கள்ள நோட்டுகள் மற்றும் கள்ள நோட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர், லேப்டாப், பிரின்டர் ஆகியவை கைப்பற்றப்பட்டன. பின்னர் இந்த வழக்கில் தொடர்பான மொத்தமாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டையில் கள்ளநோட்டு புழக்கத்திற்கு விடப்பட்டவர்களிடம் காவல்துறையினர் விசாரணையில், நாகர்கோவிலைச் சேர்ந்த மணிகண்டன்தான் மூளையாகச் செயல்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.