எல்லையில் படைகள் குவிப்பு. இந்தியாவில் இருந்து வெளியேறும் முதலீடுகள். என்னாகும் நம் பொருளாதாரம்?

கொரோனா பரவலுக்கு பிறகு உலக அளவில் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மிக மோசமாகி வருகிறது.


இந்தியாவின் பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட வரும் தொடர் சரிவுகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. மேலும் சிக்கிம் மற்றும் லடாக்கில் உள்ள இந்திய சீன எல்லைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சீன ராணுவம் தனது துருப்புக்களை நிலைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள விவகாரம் இரு நாடுகளுக்கிடையே போர் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. 

லடாக் எல்லையில் பாங்கோங் சோ ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களில் இந்திய-சீன ராணுவம் இடையே மோதல் நிலைமை உருவாகி வருகிறதாகவும், லடாக் பகுதியில் சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் இந்திய வான் எல்லையில் 2 முறை அத்துமீறி பறந்ததாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இன்று தனது டுவிட்டர் பக்கம் மூலமாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.இந்திய சீன போர் பதற்றத்தை சமாதானப்படுத்த தாம் தயாராக உள்ளதாகவும் இருநாடுகளும் விருப்பப்படும் பட்சத்தில் நாங்கள் உதவுவதற்கு தயாராக உள்ளோம் என்று கூறப்பட்டுள்ள விவகாரம் உலக நாடுகளிடையே இந்திய சீனா இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளதை ஊர்ஜிதப் படுத்தியுள்ளன.

இதன் காரணமாக இந்தியாவில் முதலீடு செய்யப்பட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை திரும்பப் பெற்று வருகின்றனர்.  அமெரிக்க சிஆர்எஸ் அறிக்கையின்படி ஆசிய நாடுகளில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2,600 (1,21,600 கோடி) கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான முதலீடுகள் வாபஸ் பெற்றப்பட்டுள்ளதாகவும்.

குறிப்பாக இந்தியாவில் இருந்து மட்டும் வெளிநாட்டு முதலீடுகள் 1,600 கோடி டாலர் அளவுக்கு வெளியேறியுள்ளது என தெரிவித்துள்ளது. மேலும் இங்கு நிலவி வரும் பொருளாதார மந்தநிலை எதிரொலியாக இந்தியாவில் இருந்து 1,25,000 கோடி ரூபாய் அளவிற்கு வெளிநாட்டு தொழில் முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டதாக வாஷிங்டனில் உள்ள ஐசிஆர்சி எனப்படும்  தனியார் பொருளாதார ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதன்படி இந்தியாவில் அமைந்துள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் பங்குகள் மற்றும் பத்திரங்கள் போன்ற நிதிச் சொத்துக்கள் கடந்த இரண்டு மாதங்களில் அதிக அளவில் வெளியே சென்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1991-ம் ஆண்டு வரையிலான முந்தைய அரசுகளின் உறுதியற்ற ஆட்சி நிர்வாகம் காரணமாக இந்தியா கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவித்த சூழலில் நரசிம்மராவ் பிரதமராக இருந்த வேளையில் அப்போதைய பட்ஜெட் உரையில் உலகமயமாக்கலுக்கான அறிவிப்பை அப்போதைய நிதியமைச்சர் மன்மோகன்சிங் வெளியிட்டார்.

இதன்மூலமாக வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கறுப்புப்பணத்தைக் கணக்கில் கொண்டுவந்து வரி வசூலிக்கவும் முடிவெடுக்கப்பட்டது அப்போது. 

மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு சலுகைகளும் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. ஏற்றுமதி, இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளில் தளர்வு கொண்டுவரப்பட்டு ஏற்றுமதி, இறக்குமதி ஊக்குவிக்கப்பட்டது. இந்தியாவின் வர்த்தக முடிவுகளில், உலக வர்த்தக அமைப்பு தலையிட்டு ஆலோசனைகளை வழங்கத்தொடங்கியது. இதன்காரணமாக, வெளிநாட்டு முதலீடுகளும் நிறுவனங்களும் இந்தியாவில் பெருமளவு கால் பதிக்கத் தொடங்கின.

அடுத்தடுத்து வந்த ஆட்சிகளிலும் ப.சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட நிதி அமைச்சர்களும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும்வகையில் திட்டங்களைத் தொடர்ந்த காரணமாக இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள் குவியத் தொடங்கி தொலைத்தொடர்பு, சாலை, போக்குவரத்து, உள்கட்டமைப்பு, விமானப்போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அபரிமித வளர்ச்சியடைந்தது.

2017-19 ஆண்டை பொறுத்தவரை இந்திய தொலைத்தொடர்பு துறையில் மட்டும் சுமார் 8,809 மில்லியன் டாலர்கள் அளவுக்கு வெளிநாட்டு முதலீடு குவிந்தது. 2017-18ம் ஆண்டில் மட்டும், சுமார் 4,478 மில்லியன் டாலர்கள் அளவுக்கு இந்தியாவின் ஆன்லைன் வர்த்தகத்தில் வெளிநாட்டு முதலீடுகள் குவிந்துள்ளது.

வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கத் தொடங்கியதும், நம் நாட்டுத்தொழில்களும் பல்வேறு நாடுகளில் தங்களது கிளை நிறுவனங்களைத் தொடங்கியுள்ளன. நம் நாட்டில் தொழில் தொடங்க வந்து, நம்மையே ஆட்சிசெய்த இங்கிலாந்து நாட்டின் ஜாகுவார் லேண்ட் ரோவர்ஸ் நிறுவனத்தை தற்போது இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இதுபோன்ற மாற்றங்கள், வெளிநாட்டு முதலீடுகளுக்கான அனுமதியால் ஏற்பட்டுள்ள மாற்றமேயாகும்.

இந்த நிலையில் சீன இந்திய போர் பதட்டம் காரணமாக இந்தியாவில் இருந்து அதிகப்படியான வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறத் துவங்கியுள்ளதாக வெளிவரும் தகவல் காரணமாக இந்திய உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் கடுமையாக பாதிக்கப்படும் என்று அச்சம் கொள்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

பாஜக‌ தலைமையிலான மத்திய அரசு இரண்டாவது முறையாக பதவி ஏற்ற நாள் முதல் சுமார் 10 லட்சம் கோடி அளவிற்கு வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவில் இருந்து வெளியேறி உள்ளதாகவும், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 4 லட்சம் கோடி அளவிற்கு வெளியேறி உள்ளது என்று பல்வேறு அறிக்கைகள் கூறுகின்றன.

நிலமை இப்படியே‌ செல்லும் பட்சத்தில் உலக நாடுகளின் முதலீட்டு பட்டியலில் இருந்து இந்தியா வெளியேறும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது எனவும். இந்த நிலையில் உலகின் அதிகப்படியான ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் முண்ணனி நாடாக உள்ள சீனா இந்தியாவில் தனது துருப்புக்களை நிறுத்தியுள்ள சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.