சனியின் பார்வையில் இருந்து தப்ப வேண்டுமா? சனிக்கிழமை விரதம் இருக்கலாமே!

பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகரானவர் சனிபகவானே ஆவார்.


சனிபகவான் யாருக்கும் எந்தவிதமான பாரபட்சமும் பார்க்க மாட்டார். பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்தவர். சனிக்கிழமை விரதமிருந்து வழிபாடு செய்வது சனிபகவானுக்கு பிடித்தமான ஒன்றாகும். எனவே இந்த வழிபாட்டை மேற்கொள்பவர்கள் சனியின் பார்வையிலிருந்து தப்பலாம்.

சனிக்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் சனிக்கிழமைகளில் வரும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திர தினங்களில் ஏதேனும் ஒன்றில் சனிபகவானுக்கு விரதத்தை தொடங்கி 21 சனிக்கிழமைகள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

அன்றைய தினத்தில் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்ததும் உங்கள் வீட்டின் பூஜையறையை சுத்தம் செய்து, அதன் முன்பாக அரிசி மாவில் தாமரை பூ கோலம் போட வேண்டும். பின்பு அக்கோலத்தின் நடுவில் ஒரு கலசத்தில் நீரை நிரப்பி வைக்க வேண்டும்.சனிபகவானின் அம்சம் கொண்ட திருப்பதி திருமலை வெங்கடாசலபதியின் படத்திற்கு வாசமுள்ள பூக்களை சூட்டி, புது நீல நிற துணியை வைத்து, எள் கொண்டு செய்யப்பட்ட பலகாரங்களை நைவேத்தியம் வைக்க வேண்டும்.

விரதம் மேற்கொள்பவர்கள் நீல நிற உடைகளை அணிவது சிறப்பு. மேலும் நெய் தீபங்கள் ஏற்றி, சந்தன மணம் கொண்ட தூபங்கள் கொளுத்தி சனிபகவானுக்குரிய மந்திரங்களை துதித்து பூஜைகள் செய்ய வேண்டும். சனிக்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் காலை முதல் மாலை வரை விரதம் மேற்கொள்ள வேண்டும்.

காலையில் சிறிது உணவை காகங்கள் உண்ண வைக்க வேண்டும்.மாலை அருகில் உள்ள பெருமாள் ஆலயம் சென்று துளசி மாலை சார்த்தி வழிபாடு செய்யலாம். மாலையில் பூஜை செய்து முடித்தபின் நைவேத்திய பிரசாதத்தை சாப்பிட்டு விரதம் முடித்ததும் உங்களால் இயன்ற தானங்களை அளிப்பது மிகுந்த நன்மையை தரும்.

விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள் : நவகிரகங்களில் சனிபகவான் ஆனவர் மனிதர்களுக்கு நீண்ட ஆயுள் தரும் ஆயுள்காரகனாக இருக்கிறார். எனவே, சனிக்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் சனீஸ்வரனின் அருள் பெற்று நீண்ட ஆயுளை பெறுவார்கள். தொழில், வியாபாரங்களில் நிலையான வருமானத்தையும், தொழில் விருத்தியும் உண்டாகும்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த விரதத்தை தொடர்ந்து கடைபிடிக்க ஆரோக்கியம், ஆயுள், செல்வம் பெருகி நாம் மகிழ்ச்சியான வாழ்வைப் பெறலாம்.