மிக பிரமாண்ட தேர்தல் பிரசாரம் ஆரம்பம். ராயப்பேட்டையை நோக்கி குவியும் அ.தி.மு.க. தொண்டர்கள்.

ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கும் அ.தி.மு.க.வின் பிரமாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் சென்னை ராயப்பேட்டை நோக்கி திரளத் தொடங்கியுள்ளனர்.


இந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்பட்டுள்ளார். தேர்தலை ஒருங்கிணைக்க மண்டல வாரியாக பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அ.தி.மு.க.வில் வழிகாட்டுக்குழு அமைக்கப்பட்டிருந்த நிலையில் மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இது மட்டுமின்றி தலைமைக் கழகத்தில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியும் வேகமாக நடக்கிறது. முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் தலைமையில் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில்தான், சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒரே மேடையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்க உள்ளனர்.

இதற்காக ராயபேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், வழிகாட்டு உறுப்பினர்கள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் இருந்து 5 லட்சம் பேர் கலந்துகொள்ள வேண்டும் என்று திட்டமிடப்பட்டு உள்ளதாம் அதனால், சென்னை மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்கு திரண்டு வருகின்றனர்.

இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி குறித்து என்ன பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. நாளைய கூட்டத்தில் பா.ம.க., தே.மு.தி.க.,பா.ஜ.க. கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்வார்கள் என்றே தெரியவருகிறது. மிகபிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு வரும் இந்தக் கூட்டத்தை தமிழக கட்சிகள் அனைத்தும் ஆர்வமுடன் பார்த்துவருகின்றன.