அரசுடைமை ஆக்கப்பட்ட ஜெயலலிதா வீட்டில் இருக்கும் பொருட்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது..!

வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கவிடவே மாட்டோம் என்று ஜெ.தீபாவும், தீபக்கும் தொடர்ந்து குரல் கொடுப்பது மட்டுமின்றி, நீதிமன்றப் படியிலும் ஏறியிருகிறார்கள். ஆனால், வீட்டை அரசுடைமை ஆக்குவதில் அரசு கொஞ்சமும் தீவிரத்தைக் குறைக்கவே இல்லை.


ஆம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசுடைமையாக்கியது தொடர்பாக அரசிதழில் இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை நீதிமன்றத்தால் தடை செய்யமுடியுமா என்பது கேள்விக் குறியாகியுள்ளது.

இதற்கிடையில், வேதா இல்லத்தில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்ற பட்டியல் இல்லை என்று ஜெ.தீபா கேள்வி எழுப்பியிருந்தார். அந்த வகையில் இன்று போயஸ் வீட்டில் இருக்கும் பொருட்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஜெ. வீட்டில் 4 கிலோ தங்கம், 601 கிலோ வெள்ளி பொருட்கள் உள்பட ஒட்டு மொத்தமாக 32 ஆயிரத்து 721 பொருட்கள், உள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ளன. மேலும், 11 தொலைக்காட்சிகள், 38 குளிர்சாதன பெட்டிகள், 29 தொலைபேசிகள், ஓட்நர் உரிமம், வருமான வரி உள்ளிட்ட 653 ஆவணங்கள், துணிகள், போர்வைகள் என 10 ஆயிரத்து 448 பொருட்கள், 8376 புத்தகங்கள் உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.