பிகில் அதிகாலை காட்சிக்கு தடையும்..! திரை மறைவில் நடைபெறும் பேரமும்..! பரபரப்பு பின்னணி!

பிகில் படத்திற்கு அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளதன் பின்னணியில் மிகப்பெரிய பேரம் அடங்கியுள்ளதாக பேசிக் கொள்கிறார்கள்.


வழக்கமாக மிகப்பெரிய ஹீரோக்களின் திரைப்படம் வெளியானால் அதிகாலை சிறப்பு காட்சிகள் ஒவ்வொரு திரையரங்கிலும் திரையிடப்படுவது வாடிக்கை. வழக்கமாக காலை 4 மணிக்கு தொடங்கி இரவு பத்தரை மணி வரை 8 காட்சிகள் வரை கூட ஒரு திரையரங்கில் திரையிடப்படும். இந்த எட்டு காட்சிகளையும் பெரும்பாலும் அந்த நடிகரின் ரசிகர்கள் ஹவுஸ் புல் ஆக்கிவிடுவார்கள்.

மேலும் இந்த எட்டு காட்சிகளுமும் ரசிகர்களின் ஆர்வம் காரணமாக ரிசர்வேசன் புல் ஆகிவிடும். எனவே படம் எப்படி இருந்தாலும் முதல் மூன்று நாட்களுக்கு ஒரு திரையரங்கில் 24 காட்சிகள் என்கிற கணக்கில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடைபெறும். எனவே தான் திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கு தயாரிப்பாளர்கள் மல்லுகட்டுகின்றனர்.

ஒரு திரையரங்கில் ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் என்பது சட்டம். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 5 காட்சிகள் அனுமதிக்கப்படும். ஆனால் அதற்கும் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியை பெற வேண்டும். இதே போல் பண்டிகை காலங்களில் அதிகாலை காட்சி என்றாலும் அரசின் அனுமதி அவசியம்.

அந்த வகையில் அனுமதி இல்லாமல் திரையரங்குகளில் சிறப்பு காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டால் அந்த திரையரங்கிற்கு அபராதம் விதிக்கப்படும் சில சமயங்களில் சீல் கூட வைக்கப்படலாம். எனவே அரசின் அனுமதி இல்லாமல் எந்த படத்திற்கும் சிறப்பு காட்சிகள் ஒளிபரப்ப வாய்ப்பு இல்லை.

தற்போது பிகில் கதைக்கு வருவோம். பிகில் திரைப்படம் சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். மேலும் படம் வெளியாகும் முன்பே சுமார் 220 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகிவிட்டதாகவும் பேசிக் கொள்கிறார்கள். தீபாவளி பண்டிகை, விஜயின் ஸ்டார் பவர், பேமிலி ஆடியன்ஸ் என படத்திற்கு ஒரு வாரம் கூட்டத்திற்கு குறைவிருக்காது என்பது தயாரிப்பாளரின் கணக்கு.

மேலும் சிறப்பு காட்சிகளுக்கும் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் ஒரு வார வசூலை 3 நாளில் அள்ளிவிடலாம். வழக்கமாக எந்த திரைப்படம் சிறப்புக் காட்சி என்றாலும் அதற்கு சில கொடுக்கல் வாங்கல் உண்டு. படத்தின் பட்ஜெட்டிற்கு ஏற்ப கொடுக்க வேண்டியதை கொடுத்தால் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடைத்துவிடும். எதிர்கட்சியினா திமுக ஆதரவு சன் டிவியின் சர்கார், எங்க வீட்டுப் பிள்ளை படத்திற்கு கூட சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி கொடுத்தது.

அதற்கு காரணம் கொடுக்கல் வாங்கல் தான். ஆனால் பிகில் படத்திற்கு தயாரிப்பு தரப்பு கொடுக்க வந்த விட்டமின் ப, எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்கிறார்கள். படத்தின் பட்ஜெட் மற்றும் ப்ரீ பிசினஸ் போன்றவற்றை கணக்கு போட்டு எதிர்தரப்பு கேட்கும் தொகை தயாரிப்பாளரை தலை சுற்ற வைத்துள்ளது. எனவே தான் தயாரிப்பு தரப்புக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் சிறப்பு காட்சிக்கு தற்போது வரை அனுமதி கொடுக்கவில்லை என்ற கூறியிருக்கிறார் கடம்பூர் ராஜூ.

அப்படி என்றால் விரைவில் அனுமதி கொடுக்க வாய்ப்பு இருக்கிறது என்பதையும் அவர் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். கொடுக்கல் வாங்கல் சரியாக இருந்தால் எவ்வித பிரச்சனையும் இன்றி பிகில் படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதிக்கப்பட்டு அதிகாலையில் திரையிடப்படும் என்று கூறுகிறார்கள். இதற்கு என்று இருக்கும் சில புரோக்கர்கள், தயாரிப்பு தரப்புக்கும் அரசுத் தரப்புக்கும் இடையே தீவிரமாக பேசி வருகிறார்களாம்.

எனவே விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையிலான அதிகாலை காட்சி குறித்த நல்ல செய்தி வரும் என்கிறார்கள்.