பிரதமர் பதவியை சுழற்சி முறையில் அனைத்து மாநிலங்களுக்கும் ஒதுக்க வேண்டும்! சீமான் வினோத கோரிக்கை!

விவசாயிகள் மீது அக்கறை இருந்திருந்தால், அவர்களுக்கு தேவையானவற்றை செய்திருக்க வேண்டும் என்றும், தற்போது தேர்தல் அறிக்கையில் விவசாயிகளை இழுத்து விடுவது நாடகம் மட்டுமே என்று சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.


விவசாயிகள் மீது அக்கறை இருந்திருந்தால், அவர்களுக்கு தேவையானவற்றை செய்திருக்க வேண்டும் என்றும், தற்போது தேர்தல் அறிக்கையில் விவசாயிகளை இழுத்து விடுவது நாடகம் மட்டுமே என்று சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை சேர்ப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் தனது கட்சியின் சின்னமான விவசாயி சின்னத்தை வெளியிட்ட நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

நாம் தமிழர் கட்சி 18 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் தனித்து போட்டியிடும்  என்றும், விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு தேர்தலை சந்திக்க உள்ளதாக கூறினார்.  

தேர்தல் சின்னம் கேட்டபோது, உயிருடன் இருக்கும் சின்னத்தை தர முடியாது என்றார்கள். ஆனால் தற்போது விவசாயி சின்னத்தை எனக்கு அளித்துள்ளனர். அப்போது விவசாயிகள் உயிரோடு இல்லை என தேர்தல் ஆணையம் நினைக்கிறதா என்கிற கேள்வியை எழுப்பிய சீமான், விவசாயிகளையும் விவசாயத்தையும் காக்கவே எங்களுக்கு இந்த சின்னம் கிடைத்துள்ளது என்றார்.

வரும் 22ஆம் தேதி விருப்ப மனுக்கள் பெறப்பட்ட பின் எங்களுடைய வேட்பாளர்களை வரும் 23 ஆம் தேதி மயிலை மாங்கொல்லையில் வைத்து ஒட்டுமொத்தமாக அறிவிப்போம். மேலும் 20 ஆண் வேட்பாளர்களும், 20 பெண் வேட்பாளர்களும் எங்கள் கட்சி சார்பில் போட்டியிடவுள்ளனர் என்றும், பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் 33% இட ஒதுக்கீட்டை பெண் வேட்பாளர்களுக்கு வழங்க வேண்டும் என போராடி வரும் நாங்கள் எங்கள் கட்சி மூலம் அதை முதலில் கொண்டு வருவோம். இடைத் தேர்தலில் சரிபாதி உரிமை பெண் வேட்பாளர்களுக்கு அளிப்போம்.

அரசியல் கட்சிகளின் கூட்டணி நிலைபாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், கவுண்டர்மணி காமெடியை சுட்டிக்காட்டி "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா" என்றார்.

தி.மு.க தேர்தல் அறிக்கையில் விவசாயத்திற்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது குறித்து பதிலளித்த அவர், இதை முன்பே செய்திருக்க வேண்டும் எனவும் இனியாவது இதை நிறைவேற்ற அனைவரும் பாடுபடவேண்டும் என்றார்.

ஹிந்தி தெரிந்தவர் மட்டுமே பிரதமராக முடியும் என்ற முறையை மாற்ற வேண்டும் என்றும் சுழற்ச்சி முறையில் பிரதமர், குடியரசுத் தலைவர் பதவிகளை ஒவ்வொரு மாநிலத்திற்கும் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதல் என்பது அப்பட்டமான நாடகம் என்று கூறிய சீமான், கோவில்களில் ஆடு, மாடுகளை பலி கொடுப்பது போல், பிஜேபி அரசு ராணுவ வீரர்களின் உயிரை பலி கொடுத்துள்ளது என சீமான் குற்றச்சாட்டு

நாட்டின் ராணுவ வீரர்களையும், ரஃபேல் விமான கோப்புகளையும் பாதுகாக்க முடியாத அரசு எப்படி நாட்டின் பாதுகாவலர்கள் என கூறிக் கொள்ள முடியும்  என்று கூறினார்.

அதுமட்டுமின்றி பொள்ளாச்சி விவகாரத்தில் ஆளும்கட்சியின் அமைதி குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், பொள்ளாச்சி சம்பவத்தில் சம்மந்தப்பட்டவர்கள் எவ்வாறு பேச இயலும் எனவும் அதற்காக போராடுபவர்களையே தேர்தலை கருத்தில் கொண்டு ஓட்டு எண்ணிக்கை பாதிக்கும் என்பதற்காக ஒடுக்கி வருகிறது இந்த அரசு குற்றஞ்சாட்டினார்.

சமரசம் இல்லாத தலைவரையே நாங்கள் எதிர்பார்த்தோம், எனவே கூட்டணிக்கு அழைத்தவர்களை புறக்கணித்தோம் என்றும், சரணடைந்து வாழ்வதை விட, சண்டையிட்டு சாவதே மேல் என்ற கொள்கையை கொண்டதால் எங்கள் கட்சி கூட்டணியை புறக்கணித்து தனித்து போட்டியிட முடிவெடுத்தது என்றும் சீமான் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையம் ஒரு நாடக கம்பெனி, ஒப்புக்காக விதிகளை விதித்துவிட்டு அதை கடைபிடிக்க மறுக்கிறது என்று கூறிய அவர்,சமூக வலைத்தளங்களில் பரவி வரும் சீமான் வீடியோ குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இது கட்சியின் பிரச்சினையே தவிற நாட்டு பிரச்சினை இல்லை எனவும் வேண்டுமென்றே அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

விவசாயிகள் மீது அக்கறை இருந்திருந்தால், இதற்கு முன்பே அறிவித்த நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு தேவையானவற்றை ஒதுக்கியிருக்க வேண்டும், தற்போது தேர்தலுக்காக தேர்தல் அறிக்கையில் விவசாயிகளை இழுத்து விடுவது நாடகம் மட்டுமே என்றார்.

7 தமிழர்களை எப்போதோ விடுதலை செய்திருக்க முடியும், அதற்கான திறன் மாநில அரசிடம் இருந்தும் ஆட்சியாளர்கள் வாய்திறக்கவில்லை, தற்போது 7 தமிழர் விடுதலை பற்றி பேசுவது கண் துடைப்பு என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும்.

முகிலன் விசாரணை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பு நிலை குறித்து இதன் மூலம் அறிந்து கொள்ளலாம் எனவும், சமூகத்திற்காக போராடும் சமூக செயற்பாட்டாளருக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் தான் இந்த நாட்டின் பாதுகாப்பு அறன் உள்ளது என பதிலளித்தார்.