முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்த சிறப்பான பணிக்கு டாக்டர்கள் சங்கம் மனதாரப் வரவேற்பும் பாராட்டும்!

மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்கிடச் சட்டம் வழங்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் தமிழக அரசுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளது.


இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், ’தற்பொழுது 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதை படிப்படியாக 50 விழுக்காடு அளவிற்கு அதிகரித்திட வேண்டும். தமிழக ஆளுநர் இந்த சட்டத்திற்கு ஒப்புதலை உடனடியாக வழங்கிட வேண்டும்.

 மருத்துவக் கல்வியில் மட்டுமின்றி,அனைத்து தொழிற் கல்லூரிகளிலும், உயர் கல்வி நிறுவனங்களிலும் இந்த 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திடவும் சட்டம் கொண்டு வரவேண்டும். அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பை உறுதிப்படுத்த இது உதவும். அது மட்டுமன்றி, அரசு பள்ளிகளை காத்திடவும், தனியார் பள்ளிகளை நோக்கி ஏழை எளிய மக்கள் படை எடுப்பதை தடுக்கவும் முடியும்.

அடுத்து, மாணவர் சேர்க்கை முறைகேடுகளை தடுத்திட , கடைசி இடம் நிரப்பப் படும் வரை நேரடியாக மாணவர்களை சேர்க்க தனியார் மருத்துவக் கல்லூரிகளை அனுமதிக்கக் கூடாது. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் , நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களின் மருத்துவக் கல்வி இடங்களை , மத்திய , மாநில அரசுகள் மட்டுமே நிரப்ப வேண்டும்.

மேலும், போட்டித் தேர்வுகள் ஏழை எளிய மாணவர்களின் நலன்களுக்கு எதிராக உள்ளது. பணம் செலவு செய்து போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெற முடியாததால் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். லட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்து தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் வசதி படைத்தோரே, போட்டித் தேர்வுகள் மூலம் அதிக அளவில் உயர்கல்வி இடங்களையும் , வேலை வாய்ப்புகளையும் பெறுகின்றனர்.

போட்டித் தேர்வுகள் ,ஏழைகளின் வாய்ப்பை பறிக்கிறது. இந்த பாரபட்சப் போக்கை, ஏற்றத்தாழ்வை போக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப் பட வேண்டும். இப்பிரச்சனையை தீர்க்கும் வகையில் ,வட்டார அளவில் இலவச தங்கும் வசதியுடன் கூடிய போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.

ஏழை எளிய மாணவர்களுக்கு NEET,JEE உள்ளிட்ட அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் தரமனா பயிற்சியை இலவசமாக வழங்கிட வேண்டும்.அதன் மூலம் மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களிலும் தமிழக மாணவர்கள் அதிக இடங்களை பெற முடியும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.