தி.மு.க.வின் செல்வாக்கு மளமளவென சரிவு... தடுப்பாரா சபரீசன்.

கொங்கு மண்டலத்திலும் வட மாவட்டங்களிலும் அ.தி.மு.கவின் ஆதரவு மளமளவென பெருகுவதும், தி.மு.க.வின் செல்வாக்கு குறைவதும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஆகவே, சபரீசனை அனுப்பி நிலைமையை சரிக்கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.


இதையடுத்து, ஸ்டாலின் மருமகன் சபரீசன் சேலத்துக்கு பறந்து வந்தார். ஓட்டலில் தங்கி இரவு முழுவதும் கட்சி நிர்வாகிகளை போனில் பிடித்து, ஒவ்வொரு தொகுதியிலும் என்ன நடக்கிறது என்பதை கேட்டறிந்தார். தொகுதிக்கு, மூன்று பேர் வீதம், காலையில் வந்து தன்னை சந்திக்க சொன்னார். அப்படி வந்த மத்திய மாவட்ட செயலர் ராஜேந்திரன், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி ஆகியோருடன் முதலில் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து சேலம் எம்.பி., பார்த்திபன், முன்னாள் எம்.எல்.ஏ., தமிழரசு, தேர்தல் பணிக்குழு செயலர் ராஜா, பனமரத்துப்பட்டி ஒன்றிய பொறுப்பாளர் சுரேஷ்குமார் உள்பட, 32 பேர் சபரீசனை சந்தித்தனர். அதை தொடர்ந்து, 10 தொகுதி, தி.மு.க., வேட்பாளர்களையும் தனித்தனியே சந்தித்தார். 'மக்களிடம் வரவேற்பு எப்படி, கூட்டணி கட்சியினரின் ஒத்துழைப்பு எப்படி' என, தலா, 5 நிமிடம் விசாரித்து, சில ஆலோசனைகளை கூறியுள்ளார்.

இவர் ஆலோசனை சொல்வதால் மட்டும் தி.மு.க. தேறிவிடுமா என்ன..?